Pillayar kathai with meaning of words ( பிள்ளையார் கதை சொற்பொருளுடன்)

சிவமயம் 

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய

பிள்ளையார் கதை

வரதபண்டிதர்

(1656-1716)

சொற்பொருளுடன்



பிள்ளையார்


விநாயகருக்குரிய சதுர்த்தசி விரதம் ஒரு மாதத்தில் இரண்டு தடவை, அமாவாசைக்குப் பின் நான்காவது நாளும் பௌர்ணமிக்குப்பின் நான்காவது நாளும், அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆவணி மாதம் வளர்பிறைச்  சதுர்த்தி தினத்தில் விநாயகர் அவதரித்தார். ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.

மார்கழிச் சதுர்த்தி கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சதுர்த்தி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இலங்கையில் உள்ள ஆலயங்களில் இந்த 21 நாளும் பிள்ளையார் கதை என்னுமிந்த நூலின் ஒரு பகுதியைப் படித்து விசேட பூசைகள் செய்வார்கள். இந்த நூல் சதுர்த்தி விரதத்தின் மகிமையைக் கூறுவதாக அமைந்துள்ளது.

மாதாந்தம் வரும் தேய் பிறைச் சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி' என்று கூறுவார்கள். இந்த நாளின் விரதமிருந்தால் கஷ்டங்கள் தீரும். 

பிள்ளையார் கதை துவக்கத்தில் படிப்பதற்குச் சற்று சிரமமாக இருக்கும். சொற் பொருள் தெரிந்தால் படிப்பது இலகுவாகிவிடும்.

தினமும் பாராயணம் செய்யக்கூடிய முறையில் பொருள் இல்லாமல் தனிப்பாடல் இதன் அடிப்பகுதியில் தரப்பட்டிருக்கின்றது.

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையிலுள் ளதுவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
உபதேச காண்டத் துரைத்தநற் கதையுந்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு
வாய்ந்த நல்விரத மான்மிய முரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னாகத்தோன்
அரங்க நாதனளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண்டிதனே. 

        காப்பு

கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும் 
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் அருந்திக் 
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங் 
கணபதியே இக்கதைக்குக் காப்பு. 

பொருள்

கரும்பும் இளநீரும், கரிய எள்ளும், தேனும், விருப்பத்தைத் தருகின்ற அவல் பலவும் மேலும் மேலும் சாப்பிட்டு நல்ல குணமுடையவனாக வந்து குற்றங்கள் தீர்க்கும் கணபதியே இக்கதைக்குக் காப்பு.

சொற்பொருள்

கரும்பும் - கரும்பும்;
இளநீரும் - இளநீரும்;
காரெள்ளும் - கரிய எள்ளும்;
தேனும் - தேனும்;
விரும்பும் அவல் - விருப்பத்தைத் தருகின்ற அவல்;
மேன்மேல் - மேலும் மேலும்;
அருந்தி - சாப்பிட்டு;
குணமுடைனாய் - நல்ல குணமுடையவனாக;
வந்து - வந்து;
குற்றங்கள் - குற்றங்கள்;
தீர்க்கும் - தீர்க்கும்;
கணபதியே - கணபதியே;
இக்கதைக்கு - இக்கதைக்கு;
காப்பு - காப்பு;

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி 
வரும்அரன்றான் ஈன்றருளும் மைந்தா முருகனுக்கு 
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என் கதைக்கு நீ என்றும் காப்பு.  

பொருள்

செல்வம் கொழிக்கும் திருமாலின் மருமகனே இடப வாகனத்தில் ஏறி வரும் இறைவன் பெற்றேடுத்த மகனே முருகனுக்கு முன்பிறந்த யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானே உன்னை வணங்குகிறேன். என்கதைக்கு நீ எப்பொழுதும் காப்பு. 

சொற்பொருள்

திருவிளங்கு - செல்வம் கொழிக்கும்;
மான்மருகா - திருமாலின் மருமகனே;
சேவதனில் - இடப வாகனத்தில்;
ஏறி -ஏறி;
வரும் - வரும்;
அரன்தான் - இறைவன்;
ஈன்றருளு - பெற்றேடுத்த;
மைந்தா – மகனே;
முருகனுக்கு - முருகனுக்கு;
முன்பிறந்த - முன்பிறந்த;
யானை முகவா - யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானே;
உனைத்தொழுவேன் - உன்னை வணங்குகிறேன்;
என்கதைக்கு - என்கதைக்கு;
நீயென்றுங் - நீ எப்பொழுதும்;
காப்பு - காப்பு; 

                   

              விநாயகர் துதி 

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும்
உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமு கத்தானைக் 
காதலாற் கூப்புவர்தம் கை.  

பொருள்

செல்வம் தரும், செய்கின்ற காரியங்கள் கைகூடும், நல்ல சொற்கள் பெருகும், பெருமை மிகும், வளர்ச்சி உண்டாகும் ஆதலால் தேவர்கள் கூட விநாயகரை அன்புடன் கை கூப்பி வணங்குவர்.   

சொற்பொருள்
திருவாக்கும் - செல்வம் தரும்;
செய்கருமம் - செய்கின்ற காரியங்கள்;
கைகூட்டும் - கைகூடும்;
செஞ் சொல் - நல்ல சொற்கள்; 
பெருவாக்கும் – பெருகும்;
பீடும் – பெருமை;
பெருக்கும் – மிகும்; 
உருவாக்கும் - வளர்ச்சி உண்டாகும்;
ஆதலால் – ஆதலால்;
வானோரும் – வானோரும்;
ஆனை முகத்தானை – விநாயகரை;
காதலால் – அன்புடன்;
கூப்புவர்தம் கை - கை கூப்பி வணங்குவர்; 

ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் 
வெற்றி புனைந்த விழிமூன்றும் பெற்றதொரு 
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனதில் எப்பொழுதும் 
கொண்டக்கால் வாராது கூற்று. 


பொருள்

ஒரு கொம்பும், இரண்டு கைகளும், வெற்றி சேர்ந்த மூன்று கண்களும், தண்டை (கழல்) அணிந்த கால்களும், உடைய யானை முகக் கடவுளை ஒருவருடைய மனதில் எப்பொழுதும் வைத்துக்கொண்டால் ஒருபொழுதும் வரமாட்டாது இறப்பு.

சொற்பொருள்

ஒற்றை – ஒரு;
மருப்பும் – கொம்பும்;
ஓரிரண்டு – இரண்டு; 
கைத்தலமும் – கைகளும்;
வெற்றி – வெற்றி;
புனைந்த – சேர்ந்த;
விழிமூன்றும் – மூன்று கண்களும்; 
பெற்றதொரு – உடைய;
தண்டைக் கால் – தண்டை (கழல்) அணிந்த கால்களை;
வாரணம் –– யானை;
தன்மனதில் – ஒருவருடைய மனதில்;
எப்பொழுதும் – எப்பொழுதும்;
கொண்டக்கால் – வைத்துக்கொண்டால்;
வாராது – வரமாட்டாது;
கூற்று – இயமன், இறப்பு; 

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு 
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

பொருள்

பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும், வெல்லப் பாகினையும், பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று சங்கத் தமிழையும் தருவாயாக!  

சொற்பொருள்

பாலும் – பால்;
தெளிதேனும் - தெளிவான தேன்;
பாகும் - சர்க்கரை; 
பருப்பும் – பருப்பு;
இவை நாலும் - இந்த நாலையும்;
கலந்து – கலந்து;
உனக்கு – உனக்கு;
நான் – நான்;
தருவேன் – தருவேன்;
கோலம்  – அழகு;
துங்க  –  பெருமை மிகுந்த;
கரிமுகத்து - கரிய முகமுடைய;
தூமணி – தூய மணி;
நீ எனக்கு - நீ எனக்கு
சங்க – சங்க;
தமிழ் மூன்று  –  இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்;
தா – தா;

குறிப்பு

இப் பாட்டு ஒளவையாரின் நல்வழி என்னும் நூலின் கடவுள் வணக்க மாகும்.

சங்கத் தமிழ்: முற் காலத்தில்`முதல், இடை, கடை சங்கம்  என மூன்று புலவர்களுடைய சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்கள் இச் சங்கங்கள் மூலமாகத் தமிழை வளர்த்தார்கள். ஒருவர் ஒரு புதிய நூலை இயற்றினால் அதை இச் சங்கத்தில் அரங்கேற்றவேண்டும். அப்பொழுதுதான் அந்நூலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நூலில் பிழை இருப்பின் சங்கப்புலவர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டுவர். முதல் இரண்டு சங்கங்களில் அரங்கேற்றப்பட்ட நூல்களில், பல கடல் கோளினால் அழிந்துவிட்டன.  இடைச்சங்க  காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் மட்டுந்தான் இன்று இருக்கின்றது.  இது ஒரு இலக்கிய நூலல்ல. இது ஒரு இலக்கண நூல் .கடைச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட பல நூல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. அதைத்தான் இங்கு ஒளவையார் சங்கத்தமிழ் என்று குறிப்பிடுகின்றார் .           

                  சப்பாணி

எள்ளுப் பொரிதேன் அவல் அப்பமிக்கும் பயறும் இளநீரும் 
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும் 
வெள்ளைப் பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில் கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி  

பொருள்

எள்ளு, அரிசிப் பொரி, தேன், அவல், அப்பம், சர்க்கரை, பயறு, இளநீர், வள்ளிக் கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், வெள்ளைப் பால், மோதகம் இவையாவும் உன் சந்நிதியில் விரும்பிப்படைத்தேன். எல்லையற்ற கருணை செய்யும் கணபதியே! கொட்டி அருள்க சப்பாணி. 

சொற்பொருள்

எள்ளு – எள்ளு;
பொரி - அரிசிப் பொரி;
தேன் – தேன்;
அவல் – அவல்;
அப்பம் - அப்பம்;
இக்கு – சர்க்கரை;
பயறு – பயறு;
இளநீர் – இளநீர்;
வள்ளிக் கிழங்கு - வள்ளிக் கிழங்கு;
மாம்பழம் – மாம்பழம்;
வாழைப்பழம் – வாழைப்பழம்;
பலாப்பழம் - பலாப்பழம்;
வெள்ளைப் பால் – வெள்ளைப் பால்;
மோதகம் – மோதகம்;
விரும்பிப்படைத்தேன் – விரும்பிப்படைத்தேன்;
சந்நிதியில் - திருமுன், கோயில்;
கொள்ளைக் கருணை - எல்லையற்ற கருணை செய்யும்;
கணபதியே – கணபதியே;
கொட்டி – கொட்டி;
அருள்க – அருள்க;
சப்பாணி - இது சிறுபிள்ளைகள் கை தட்டி விளையாடும் ஒரு விளையாட்டு; 

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி, 
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் 
பிரானே, 
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக், 
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

பொருள்

அடர்ந்த மயிர் உடைய பெரிய எலி மீது ஏறிப் பூமியில் உலாவி, மேல் உலகத்துத் தேவர்கள் வணங்க அடியவர்களுக்கு அருள் செய்யும் இறைவனே! எட்டுத் திக்குகளிலும் அன்பர்கள் பார்க்க ஒப்பற்ற பெரிய ஓளி வீசக் குட்டையான கணபதியே! இறைவா! பெரிய கையைத் தட்டி விளையாடுவாயாக. 

சொற்பொருள்

சண்டப் பெருச்சாளி – பெரிய எலி;
ஏறி – ஏறி;
சடைகொண்டு - அடர்ந்த மயிர்;
வையத்து – பூமியில்;
உலாவி – உலாவி;
அண்டத்து - மேல் உலகத்து;
அமரர் – தேவர்கள்;
துதிக்க – வணங்க;
அடியார்க்கு – அடியவர்களுக்கு;
அருளும் - அருள் செய்யும்;
பிரானே – இறைவனே;
எண்திக்கும் - எட்டுத் திக்குகளிலும்; 
அன்பர்கள் – அன்பர்கள்;
பார்க்க – பார்க்க;
இணையற்ற – ஒப்பற்ற;
பேரொளி – பெரிய ஓளி;
வீச – வீச;
குண்டை – குட்டையான; 
கணபதி – கணபதி;
நம்பி – நம்பி;
கொடுங்கையால் – பெரிய கையால்; 
சப்பாணி - கை தட்டி விளையாடும் ஒரு விளையாட்டு;
கொட்டே – தட்டு;

சரஸ்வதி துதி 

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே 
வித்தகப் பெண்பிள்ளை நங்காய் வேதப் பொருளுக்கு இறைவீ 
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ் 
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்  

பொருள்

புத்தகத்துள் அமைந்திருக்கும் பெண்ணே! பூவில் அமர்ந்திருக்கும் வாழ்வே! அறிவு உடைய பெண்பிள்ளையே! பெண்ணிற் சிறந்தவளே! வேதங்களின் பொருளுக்குத் தலைவி! முத்துக்கள் பதித்த குடைஉடையவளே! மூன்று உலகங்களும் தொழுது போற்றும் செப்புப்  போர்த்த முலைகளை உடையவளே! சிவந்த வரிகள் ஓடிய கண்களை உடையவளே!  

சொற்பொருள்

புத்தகத் துள்ளுறை - புத்தகத்துள் அமைந்திருக்கும்;
மாதே – பெண்ணே!;
பூவில் – பூவில்;
அமர்ந்திடு – அமர்ந்திருக்கும்;
வாழ்வே – வாழ்வே;
வித்தக - அறிவு உடைய; 
பெண்பிள்ளை – பெண்பிள்ளை;
நங்காய் - பெண்ணிற் சிறந்தவள்;
வேதப் பொருளுக்கு – வேதங்களின் பொருளுக்கு;
இறைவீ – தலைவி;
முத்தின் - முத்துக்கள் பதித்த;
குடைஉடையாளே – குடைஉடையவள்;
மூவுலகும் – மூன்று உலகங்களும்;
தொழுது – தொழுது;
ஏத்தும் – போற்றும்;
செப்பு - செம்பு;
கவித்த – போர்த்த;
முலையாய் - முலைகளை உடைய;
செவ்வரி - சிவந்த வரிகள் 
ஓடிய – ஓடிய;
கண்ணாய் - கண்களை உடையவள்; 

தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே 
எக்காலமும் உன்னைத்தொழுவேன் இயல் இசை நாடகம் என்னும் 
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்து என் 
சித்தந் தனில் நீ இருந்து திருவருள் செய்திடு வாயே.  

பொருள்

வால்மிளகு தின்னும் வாயையுடைய சரஸ்வதி என்னும் செல்வமே எப்பொழுதும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் என்று சொல்லப்படும் மூன்று தமிழ் ஞானங்கள் எல்லாவற்றயும் முழுமையாக எனக்குத்தந்து எனது உள்ளத்தில் நீ இருந்து எனக்கு அருள் செய்வாயாக! 

சொற்பொருள்

தக்கோலம் – வால்மிளகு; 
தின்னும் – தின்னும்;
வாயாய் – வாயையுடைய;
சரஸ்வதி – சரஸ்வதி;
என்னும் - என்னும்;
திருவே – செல்வமே;
எக்காலமும் – எப்பொழுதும்;
உன்னை – உன்னை;
தொழுவேன் – தொழுவேன்;
இயல் இசை நாடகம் - இயல் இசை நாடகம்;
என்னும் - என்று சொல்லப்படும்;
முத்தமிழ் - மூன்று தமிழ்;
கல்விகள் – ஞானங்களை;
எல்லாம் - எல்லாவற்றயும்;
முழுதும் – முழுமையாக;
எனக்கருள் செய்து – எனக்குத்தந்து;
என் சித்தந் தனில் - எனது உள்ளத்தில்;
நீ இருந்து - நீ இருந்து;
திருவருள் செய்திடு வாயே - எனக்கு அருள் செய்வாயாக; 

குறிப்பு

வால்மிளகு என்பது வெற்றிலையோடு சேர்ந்து உபயோகிக்கப்படும் ஒரு வாசனைப்பொருளாகும்.

 

எருக்கு

             அதிகாரம் 

பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித் 
தென்மலை இருந்த சீர்சால் முனிவன் 
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையால் தெளிவுறச் செப்பினன் 
அன்னதிற் பிறவில் அரில்தபத் திரட்டித் 
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே 

பொருள்

பொன் போலப் பிரகாசிப்பதும் அருவிகள் செறிந்த சிகரத்தோடு விளங்கும் பொதிகை மலைதனில் வாழும் அகத்திய மாமுனிவர் ஆனைமுகன் ஆகியபிள்ளையார் கதையைச் செந்தமிழ் மொழியில் தெளிவாகச்  சொல்லியிருக்கிறார். ஆன்றோர்கள் வேறுசிலரும் அதுபற்றிச் சொல்லி யிருக்கிறார்கள். அவற்றை எடுத்து ஆராய்ந்து திரட்டிப்  பழைய மரபு தவறாமல் நான் இப்பிள்ளையார் கதையைச் சொல்கிறேன். 

 

சொற்பொருள்

பொன்னிறம் - பொன் போன்ற நிறம்; 
கடுக்கும் – பிரகாசிக்கும்;
புனல் – அருவிகள்;
செறி – செறிந்த;
குடுமி – சிகரம்;
தென்மலை - பொதிகை மலை;
இருந்த - வாழ்ந்த; 
சீர்சால் முனிவன் - அகத்திய மாமுனிவர்;
கந்த மும்மதக் கரிமுகன் – ஆனைமுகன் ஆகியபிள்ளையார்;
கதைதனை – கதையை; 
செந்தமிழ் வகையால் - செந்தமிழ் மொழியில்;
தெளிவுற - தெளிவாக; 
செப்பினன் - சொல்லியிருக்கிறார்;
அன்னதிற் பிறவில் - வெறுசிலரும் அதுபற்றி (சொல்லியிருக்கிறார்கள்);
அரில்தபத் திரட்டி - ஆராய்ந்து திரட்டி;
தொன்னெறி -  பழைய மரபு;
விளங்க – விளங்குமாறு; 
சொல்லுவன் - சொல்கிறேன்;
கதையே – கதையை;

குறிப்பு

மூன்று மதங்கள் கொண்ட: யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. இந்த மூன்று இடங்களிலிருந்து மதநீர் ஒழுகும்: கன்னமதம்(கண்ணிற்கும் காதிற்கும் இடையே உள்ள கன்னம்), கபோலமதம் (மண்டையோடு ), பீஜமதம் (ஆண்குறி). "மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்" என்று விநாயகர் அகவலில் வருதல் காண்க. பெண் யானைக்கு மதம் ஏற்படுவது அரிது.

கதை

[உமை பிராமணப் பெண்ணாகப் பிறத்தல்] 

மந்திர கிரியில் வடபால் ஆங்குஓர் இந்து தவழ் சோலை இராசமா நகரியில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

பொருள்

மந்திர கிரி என்பது சிவன் முருகனுக்கு மந்திரோபதேசம் செய்த மலை. அதற்கு வடக்கே இராசமாநகரீ என்றொரு நகரமுண்டு. அந்நகர் சந்திரன் தவழக் கூடிய அளவிற்கு உயர்ந்த சோலைகளைக் கொண்டிருக்கும். அங்கு வாழ்ந்த அந்தணர் ஒருவரும் அவர் மனைவியும் தமக்குப் பிள்ளைப் பேறு வேண்டும் என்று நேர்த்தி வைத்து,

சொற்பொருள்

மந்திர கிரி - சிவன் முருகனுக்கு மந்திரோபதேசம் செய்த மலை; திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக 20 கி.மீ.
வடபால் - வடக்குப் பக்கத்தில்; 
ஆங்குஓர் - அங்கு ஒரு; இந்து வளர் – சந்திரன் தவழக் கூடிய அளவிற்கு உயர்ந்த மலை;
சோலை – சோலை; 
இராசமா நகரியில் - இராசமா நகரத்தில்; அந்தணன் ஒருவனும் – பிராமணன் ஒருவனும்;
ஆயிழை – பெண்;
ஒருத்தியும் – ஒருத்தியும்; சுந்தர – அழகிய; 
புதல்வரை – மகனை;
பெறுதல் – பெறுவதற்காக;
வேண்டி - விரும்பி

 குறிப்பு

முருகன்  சூரபத்மனுடன் போர் புரியக் கிளம்பிய போது பார்வதிக்கு  மாயத்தில் வல்ல சூரனை அழிக்கும் திறமை சிறுவனான முருகனுக்கு உண்டா என்று சந்தேகம் எழுந்தது. சிவனிடம் முருகனுக்கே போரில் வெற்றி கிடைக்க மந்திர உபதேசம் செய்யும்படி வேண்டினாள். அவ்வாறு சிவன் உபதேசித்த மலை என்பதால் மந்திர மலை, மந்திராசலம், மந்திர கிரி என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

முருகன் சூரபத்மனை வென்று, அவனைச் சேவலாக மாற்றித் தன்  இடது கையில் வைத்திருக்கிறார்.

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்பு அரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடும் நாளில்

பொருள்

அவர்கள் கோயில்கள், நறு மலர்க் குளங்கள், பரந்த நிழல் தரும் மரங்களோடு கூடிய மடங்கள் முதலிய பல தருமங்கள் - பிள்ளைப் பேறு வேண்டிச் செய்தனர். அத்தோடு மலை அரசன் பெற்ற மலர்ந்த கண்களை உடைய உமா தேவியைப் பாகத்தில் கொண்டிருக்கும் சிவனை வழிபடும் நாளில், 

சொற்பொருள்

கடவுள் – கடவுள்;
ஆலயம் – ஆலயம்;
கடிமலர் - நறு மலர்; 
பொய்கை – குளங்கள்; தடநிழற் - பரந்த நிழல் தரும் மரங்களோடு கூடிய;
பள்ளியுந் – மடங்கள்;
தாம் – அவர்கள்;
பல – பல;
சமைத்து – செய்து; புதல்வரை - பிள்ளைப் பேறு; 
தருகெனப் – வேண்டி;
பொருப்பு – மலை;
அரசு – அரசன்;
ஈன்ற – பெற்ற;
மதர்விழி – மலர்ந்த கண்களை உடைய உமா தேவியை;
பாகனை - பாகத்தில் கொண்டிருக்கும் சிவனை;
வழிபடும் – வழிபடும்;
நாளில் – நாளில்; 

மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவன் அடி வணங்கிப்
பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே அரனே மறையவர்க்கு அருள்புரிந்து அருளென 12

பொருள்

அவ்வந்தணர் செய்யும் பெரிய தவத்தினைக் கண்டு, சிறிய இடை உடைய உமையாள், சிவன் பாதங்களை வணங்கி, கடவுளே! சிவனே! எல்லா சீவராசிகளுக்கும் உயிராக இருப்பவனே!  சிவனே! அவ்வந்தணர்க்குக்  கருணை கூர்ந்து அருள் செய்வாயாக!. என்று வேண்டினாள்.

சொற்பொருள்

மற்றவர் - அவ்வந்தணர்; 
புரியும் – செய்யும்;
மாதவம் - பெரிய தவத்தினை;
கண்டு – கண்டு;
சிற்றிடை - சிறிய இடை உடைய;
உமையாள் – உமையாள்;
சிவன் – சிவன்;
அடி – பாதங்களை;
வணங்கி – வணங்கி; பரனே – கடவுளே;
சிவனே – சிவனே;
பல்லுயிர்க்கு - எல்லா சீவராசிகளுக்கும்;
உயிரே – உயிரே; அரன் – தோழன், சிவன்;
மறையவர்க்கு - அவ் அந்தணர்க்கு;
அருள்புரிந்து - கருணை கூர்ந்து;
அருளென - அருள் செய்வாயாக; 

அந்த அந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில் லை என மறுத்து அரன் உரைப்ப எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன் தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென         
16                             

பொருள்

அந்த அந்தணனுக்கு இந்த நற் பிறப்பில் புத்திரப் பேற்றிற்கு விதி இல்லை எனச் சிவன் மறுத்துச் சொல்ல, ‘எப்படி ஆயினும் எனக்காகக் குற்றமற்ற வேதங்களை ஓதும் அந்தணனுக்கு அருள் செய்வாயாக!’ என்று உமை வேண்டினாள்; 

சொற்பொருள்

அந்த – அந்த;
அந்தணனுக்கு – அந்தணனுக்கு;
இந்தநற் பிறப்பில் – இந்த நற் பிறப்பில்;
மைந்தரில்லை - புத்திரப் பேற்றிற்கு விதி இல்லை;
என – என;
மறுத்து – மறுத்து;
அரன் – சிவன்;
உரைப்ப – சொல்ல;
எப்பரிசு ஆயினும் – எப்படி ஆயினும்;
எம்பொருட்டு – எனக்காக;
ஒருசுதன் - ஒரு மகன்;
தப்பிலா – குற்றமற்ற;
மறையோன் தனக்கு - வேதங்களை ஓதும் அந்தணனுக்கு;
அருள் செய்கென - அருள் செய்வாயாக! 

எமைஆ ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதமை என்று பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் 20 

பொருள்

(என்று) எமக்கு அருள் செய்யும் உமாதேவி சொல்ல, இமைக்காத மூன்று கண்களை உடைய இறைவன் கோபங்கொண்டு, பெண்சொல் கேட்டல் அறியாமை என்று, இசை போல இனிமையாகப் பேசும் உமையைப் பார்த்து, 

சொற்பொருள்

எமை ஆளுடைய - எமக்கு அருள் செய்யும்;
உமையாள் – உமாதேவி;
மொழிய - சொல்ல; இமையா – இமைக்காத;
முக்கண் - மூன்று கண்களை உடைய;
இறைவன் – இறைவன்;
வெகுண்டு - கோபங்கொண்டு; பெண்சொல் – பெண்சொல்;
கேட்டல் – கேட்டல்;
பேதமை – அறியாமை;
என்று – என்று; பண்சொல் - இசை போல இனிமையாக; 
பயிலும் – பேசும்;
பாவை - பெண், உமை; 
நோக்கி – பார்த்து; 

குறிப்பு

இமைக்காத கண்கள்: தெய்வங்களும், தேவர்களும் கண்களை இமைப்பதில்லை. தமயந்தியின் சுயம்வரத்திற்கு வருணன், இந்திரன், அக்கினி, இயமன் ஆகியோர் நளனைப் போல் உருவமெடுத்து அவளை மணக்க விரும்பி வந்திருந்தார்கள். தமயந்தி தேவர்களின் கண்கள் இமயாதிருத்தலைக் கொண்டு நளனை அடையாளங்கண்டு அவனை மணந்தாள்.

 பேதாய் நீபோய்ப் பிற என மொழிய
மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப் பொன்றிடும் மானிடப் புன்பிறப்பு எய்துதல் நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக் 24 

பொருள்

‘பேதையே நீ போய் அவனுக்குப் பிள்ளையாகப் பிற’ என்று சிவன் சொல்ல உமை தன்னுள்ளே மனத்தளர்ச்சி கொண்டு, ‘அழியும் மானிடப் பிறப்பு எடுத்தல் (தமக்கு) நல்லதல்ல’ என்று நடுக்கத்தோடு கூற, 

சொற்பொருள்

பேதாய் – பேதையே;
நீ போய்ப் பிற - நீ போய்ப் பிற;
என – என்று; 
மொழிய – கூற; மாதுமை அவளும் - உமை;
மனந்தளர்வு – மனத்தளர்ச்சி;
உற்றுப் – கொண்டு;
பொன்றிடும் – அழியும்;
மானிடப் புன்பிறப்பு - மானிடப் பிறப்பு (புன் - போலித் தோற்றம்);
எய்துதல் – எடுத்தல்; நன்றல - நல்லதல்ல;
என்றே – என்று;
நடுக்கமுற்று – நடுக்கத்தோடு;
உரைப்ப - கூற;

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து 
பிறைநுதல் அவட்குநீ பிள்ளை யாகச் 
சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால் 
மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை என்று 28 

பொருள்

நஞ்சு உண்டதினால் நிறம் மாறிய கழுத்தை உடைய கடவுள் கருணை கொண்டு, பிறை போன்ற அழகிய கண்களை உடைய உமைக்கு, “நீ அந்த அந்தணனுக்குப்  பிள்ளை யாகச்  சென்று பிற. அப்பிள்ளை சில காலம் சென்று வளர்ந்தபின், அவளை நான் மணந்து அருள் செய்வேன் வருந்த வேண்டாம்” என்று கூறினார், 

சொற்பொருள்

கறைமிடற்று - நஞ்சு உண்டதினால் நிறம் மாறிய கழுத்து;
அண்ணல் – கடவுள், அரசன்;
கருணை கூர்ந்து – கருணை கொண்டு;
பிறைநுதல் - பிறை போன்ற அழகிய கண்களை உடைய; 
அவட்கு – உமைக்கு;
நீ பிள்ளை யாக - நீ பிள்ளையாக; 
சென்று – சென்று பிற;
அவண் – அவ்வாறு;
சிலபகல் - சில காலம்; 
கழித்தால் – சென்றபின்;
மன்றல் செய்து – மணந்து;
அருள்வோம் - அருள் செய்வேன்; 
வருந்தலை - வருந்த வேண்டாம்;
என்று – என்று; 

குறிப்பு

முன்பு ஒரு காலத்தில் தேவர்கள் அழியாமல் இருப்பதற்காக அமிர்தத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைந்தார்கள். இதற்குத் திருமால் உடந்தையாக விருந்தார். கடைந்தபோது அமிர்தத்திற்குப் பதிலாக ஆலகாலம்  என்னும் விஷம் தோன்றியது.(இது கயிறாகப் பயன்படுத்திய வாசுகி என்னும் பாம்பு வலி தாங்காமல் கக்கிய விஷமாகும் ) அந்த விஷத்தை ஒருவராலும் எதிர்கொள்ள முடிவில்லை. அப்பொழுது அவர்கள் சிவனுடைய உதவியை நாடினார்கள். சிவன் அந்த விஷத்தைத் தன் வாயில் போட்டு விழுங்கினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த உமாதேவி அந்த விஷம் அவரைக் கொண்றுவிடுமோ என்று பயந்து அவருடைய கழுத்தை அழுத்தினார். விஷம் கழுத்தோடு நிறுவிட்டது. அவருடைய கழுத்து நீல நிறமாக மாறியது. அதிலிருந்து அவருக்கு நீலகண்டர் என்னும் பெயர் நிலைத்தது.

 

இருவாட்சி

விடைகொடுத்து அருள விலங்கல்மா மகளும் 
பெடைமயிற் சாயற் பெண்மக வுஆகித் 
தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் 
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப் 32 

பொருள்

(என்று சிவன்) விடைகொடுத்து அருள, விட்டுப் பிரியும் உமாதேவியார் பெண் மயில் போன்ற சாயலையடைய பெண் குழந்தையாக, மாலை அணிந்த மார்பினை உடைய நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணனின் சிறப்பு மிக்க மனைவியின் வயிற்றில் கருவாகத் தோன்றி (பின்பெண் குழந்தையாக) அவதரித்தார். 

சொற்பொருள்

விடைகொடுத்து அருள - விடைகொடுத்து அருள;
விலங்கல் - விட்டுப் பிரியும்;
மாமகளும் – உமாதேவியாரும் (மா- பெரிய);
பெடைமயிற் சாயற் - பெண் மயில் போண்ற சாயலையடைய;
பெண் மகவுஆகித் - பெண் குழந்தையாக;
தார்மலி - மாலை அணிந்த; 
மார்பன் - மார்பினை உடைய;
சதுர்மறைக் கிழவன் - நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணனின்; 
சீர்மலி - சிறப்பு மிக்க;
மனைவி – மனைவி;
திருவயிற்று - வயிற்றில் கருவாகத் தோன்றி;
உதித்து – அவதரித்தார்; 

பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி 
ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் 
மையார் கருங்குழல் வாணுதல் தன்னை 36

பொருள்

(அக்குழந்தையும்) பாவை விளையாட்டு, சிறு வீடு கட்டும் விளையாட்டு, பந்து விளையாட்டு, கோலி விளையாட்டு ஆகிய பல விளையாட்டுக்களில் தேர்ச்சி உடையவளானாள். ஐந்து வயது ஆனபின் தாயும் தந்தையும் மை போன்ற கரிய கூந்தலையும், ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய அப்பிள்ளையை, 

சொற்பொருள்

பாவையும் - (அக்குழந்தையும்) பாவை விளையாட்டு;
சிற்றிலும் - சிறு வீடு கட்டும் விளையாட்டு (சிற்றில் - சிறு வீடு);
பந்தொடு – பந்து விளையாட்டு;
கழங்கும் – கோலி விளையாட்டு;
யாவையும் - ஆகிய பல விளையாட்டுக்களில்;
பயின்ற – தேர்ச்சி;
இயல்பினள் ஆகி – உடையவளானாள்;
ஐயாண்டு அடைந்தபின் - ஐந்து வயது ஆனபின்;
அன்னையும் அத்தனும் - தாயும் தந்தையும்;
மையார் கருங்குழல் - மை போன்ற கரிய கூந்தல்;
வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றி;
தன்னை – அப்பிள்ளையை;

மானுட மறையோர்க்கு வதுவை செய்திடக் 
கான் அமர் குழலியைக் கருதிக் கேட்பப் 
பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி 
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான்என 40 

பொருள்

அந்தக்  காலத்துப்  பிராமணர் குல சம்பிரதாய முறைப்படி, பக்குவமடையும் முன்னரே அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞனுக்கு விவாகம் நிச்சயம் செய்ய விரும்பி, அடர்த்தியான கூந்தலை உடையவளின் விருப்பத்தைக் கேட்க, அவள் ‘பிறப்பு இறப்பு இல்லாத சிவனுக்கு அல்லாமல் ஒழுக்கமுள்ள திருமணத்திற்கு நான் சம்மதிக்க மாட்டேன்’ என்று கூறினாள்.  

சொற்பொருள் 

மானுட மறையோர்க்கு - அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞனுக்கு;
வதுவை – விவாகம்;
செய்திட - நிச்சயம் செய்ய விரும்பி;
கான் அமர் - நறுமணம் கொண்ட;
குழலியைக் – கூந்தலை உடையவள்;
கருதிக் கேட்ப - அவளுடைய விருப்பத்தைக் கேட்க;
பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோற்கு - பிறப்பு இறப்பு இல்லாத இறைவனுக்கு;
அன்றி – அல்லாமல்;
அறத்தகு – ஒழுக்கம் உள்ள;
வதுவைக்கு – திருமணத்திற்கு;
அமையேன் - சம்மதிக்க மாட்டேன்;
யான்என – நான் என்று கூறினாள்; 

மற்றவன் தன்னை உன் மணமக னாகப் 
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச 
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யான்எனக் 
கருந்தட நெடுங்கண் கவுரிஅங்கு உரைப்ப 44 

பொருள்

சிவனை உன் கணவனாகப் பெறுதல் அரிதென்று மறுத்து அவர் சொல்ல, ‘எனது அரிய தவ முயற்சியால் (நான் சிவனை) அடைவேன்’ என்று கரிய நீண்ட கண்களை உடைய கவுரி அங்கு கூற; 

சொற்பொருள் 

மற்றவன் தன்னை – சிவனை;
உன் மணமகனாகப் - உன் கணவனாகப்; 
பெற்றிடல் – பெறுதல்;
அரிதெனப் - அரிதென்று;
பெயர்த்து – மறுத்து;
அவர் பேச – அவர் சொல்ல;
அருந்தவ – எனது அரிய தவ;
முயற்சியால் – முயற்சியால்;
அணுகுவேன் – அடைவேன்;
யான்எனக் – நான் என்று;
கருந்தட – கரிய;
நெடுங்கண் – நீண்ட கண்களை உடைய;
கவுரி – கவுரி;
அங்கு - அங்கு; 
உரைப்ப – கூற; 

கோங்கம்

மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
 தருமலி நிழல்தவச் சாலையது அமைத்துப் 
பணியணி பற்பல பாங்கியர் சூழ 
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் புரிதலும்  
48 

பொருள்

நறு மணம் கமழும் தாமரை மலர் தடாகத்திற்கு அருகில், மரநிழல் (உள்ள இடத்தில்) தவச்சாலையொன்றை அமைத்துத் தந்தனர். பலவகை ஆபரணங்களை அணிந்துள்ள பல தோழியர் சூழ்ந்து தொண்டுகள் செய்துகொண்டிருக்க, மலர் அணிந்த தலை முடியோடு உமை கடுந்தவம் செய்துகொண்டிருந்தாள். 

சொற்பொருள்

மருமலி - நறு மணம் கமழும்; 
கமல மலர்த்தடத்து - தாமரை மலர் தடாகத்திற்கு; 
அருகில் – அருகில்;
தருமலி நிழல் – மரநிழல் ( தரு-பலவகை மரங்கள்;  மலி-மிகுதியாக வளர்ந்து நிற்கும்);
தவச்சாலையது – தவச்சாலையொன்றை;
அமைத்து – அமைத்து;
பணியணி – பலவகை ஆபரணங்களை அணிந்துள்ள;
பற்பல – பல;
பாங்கியர் - தோழியர்;
சூழ - சூழ்ந்து தொண்டுகள் செய்துகொண்டிருக்க;
அணிமலர்க் – மலர் அணிந்த;
குழல் - தலை முடியோடு;
உமை – உமை;
அருந்தவம் – கடுந்தவம்;
புரிதலும் – செய்துகொண்டிருந்தாள்;

அரிவை தன் அருந்தவம் அறிவோம் யாம் என 
இருவரும் அறியா இமையவர் பெருமான் 
மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து 
மானிட யோக மறையவன் ஆகிக் 52

பொருள்

‘உமாதேவியரின் கடுமையான தவத்தினை நாம் அறிவோம்’ என்று திருவுள்ளங் கொண்டு, பிரம்மா விஷ்ணு ஆகிய இருவரும் அடி முடி தேடிக் கண்டறியாத, தேவர்களினையுடைய இறைவன், மான் மழு போன்ற சின்னங்களை விடுத்து மானிட உருவத்தில் யோக சாதனை புரியும் அந்தணனாக வேடங் கொண்டு (வருகிறார்);  

சொற்பொருள்

அரிவை தன்- உமாதேவியரின் (அரிவை – பெண்);
அருந்தவம் - கடுமையான தவத்தினை; 
அறிவோம் - அறிவோம்;
யாம் – நாம்;
என – என்று;
இருவரும் - பிரம்மா விஷ்ணு ஆகிய இருவரும்;
அறியா - அடி முடி கண்டறியாத;
இமையவர் – தேவர்களினையுடைய;
பெருமான் – இறைவன்;
மான் – மான்;
இடம் – மழு, கோடரி போன்ற ஒரு ஆயுதம்.;
ஏந்தும் வண்ணமது ஒழிந்து - போன்ற சின்னங்களை விடுத்து;
மானிட – மானிட; 
யோக மறையவன் - யோக சாதனை புரியும் அந்தணனாக;
ஆகி - வேடங் கொண்டு (வருகிறார்);

குறிப்பு

அடி முடி கண்டறியாத: தான் ஆக்குவதனாலே ‘தானே பெரியவன்’ என்று பிரமாவும், தான் காப்பதினால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராதது கண்டு பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவில் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார்.  

எவர் முதலாவதாகத்  தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர் என்று கூறினார்.

உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரமன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.

சிறிது காலம் சென்ற பின் அடியையும் முடியையும் காண இயலாத விஷ்ணுவும் பிரம்மாவும் வந்திருப்பவர் சிவன் என்பதை உணர்ந்தனர். 

தங்களது ஆணவத்தால் அக்கினி உருவத்தில் நின்ற சிவபெருமானைக் காண இயலாத இவர்களுக்குப் பெருமான் லிங்க உருவில் காட்சி அளித்தார். இவ்வாறு காட்சி அளித்த தலமே திருவண்ணாமலை. 

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு 
மடமயில் தவம்புரி வாவிக் கரையிற் 
கண்ணுதல் வந்து கருணை காட்டித் 
தண்நறுங் கூந்தல் தையலை நோக்கி 56 

பொருள்

சந்நியாசிகளின் சின்னங்களான குடை தண்டு கமண்டலம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கவுரி தவம்புரியும் குளக் கரையில் நெற்றிக் கண்ணையுடைய சிவன் வந்து, குளிர் மையான நறுமணமுள்ள கூந்தலை உடைய பெண்ணைப் பார்த்து, 

சொற்பொருள்

குடையொடு – குடை;
தண்டு – தண்டு;
நற்குண்டிகை – கமண்டலம்;
கொண்டு – எடுத்துக் கொண்டு;
மடமயில் – கவுரி (பெண் மயில்);
தவம்புரி- தவம்புரியும்;
வாவி – குளம்; 
கரையில் – கரையில்;
கண்ணுதல் - நெற்றிக் கண்ணையுடைய சிவன்;
வந்து – வந்து;
கருணை – கருணை;
காட்டி – காட்டி;
தண்நறுங் - குளிர்மையான நறுமணமுள்ள; 
கூந்தல் - கூந்தல்;
தையலை – பெண்ணை;
நோக்கி – பார்த்து; 

குறிப்பு

கமண்டலம்: தவம் செய்பவர்கள் குடிப்பதற்காகத் தண்ணீர் எடுத்து வைத்திருக்கும் பாத்திரம். தண்டு கையைத் தாங்கிக்கொள்வதற்குப்  பாவிக்கப்படும் .

தண்டு 

கமண்டலம்


மின்பெறு நுண் இடை மெல்லிய லாய்நீ 
என்பெறத் தவம் இங்கு இயற்றுவது என்றலுங்
கொன்றைவார் சடையனைக் கூட என்று உரைத்தலும் 
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் 60  

பொருள்

"மின்னல் போன்ற மெல்லிய இடையை உடையவளே! மென்மையான இயல்பு உடையவளே! நீ என்ன பெறுவதற்காகத் தவம் இங்கு செய்கிறாய்" என்று கேட்க “கொன்றை மலர் மாலை அணிந்துள்ள நீண்ட சடை உடைய சிவனை அடைய” என்று அவள் சொன்னபோது நல்லது என்று கூறி நான்கு வேதங்களுக்கும் தலைவனான இறைவன் சிரித்தான். 

சொற்பொருள்

மின்பெறு நுண் இடை - மின்னல் போன்ற மெல்லிய இடையை உடையவளே!;
மெல்லியலாய் - மென்மையான இயல்பு உடையவளே!;
நீ – நீ; 
என்பெறத் - என்ன பெறுவதற்காக;
தவம் – தவம்;
இங்கு – இங்கு;
இயற்றுவது – செய்கிறாய்;
என்றலும் - என்று சொல்ல; 
கொன்றைவார் – கொன்றை மலர் மலை அணிந்துள்ள;
சடையனை - நீண்ட சடை உள்ள சிவனை;
கூட – அடைய;
என்று – என்று;
உரைத்தலும் – சொன்னபோது;
நன்று – நல்லது;
எனச் – என்று;
சிரித்து – சிரித்தான்;
நான்மறை யோனும் - நான்கு வேதங்களுக்கும் தலைவனான இறைவன்; 



 கொன்றை 


மாட்டினில் ஏறி மான்மழு தரித்துக் 
காட்டினில் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் 
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் 64

பொருள்

மாட்டை வாகனமாகக் கொண்டு மான், மழு தரித்துக், காடுகளிலும் சுடலைகளிலும் கணங்களோடு சேர்ந்து ஆடி, பாம்பு, எலும்பு, பலதலை மாலைகள், சுடலைச் சாம்பல், ஆகியவற்றை அணிந்து, இறந்தோர் தலையோட்டினைக் கையில் ஏந்தி, 

சொற்பொருள்

மாட்டினில் ஏறி - மாட்டை வாகனமாகக் கொண்டு;
மான்மழு – மான், மழு;
தரித்து – தரித்து;
காட்டினில் சுடலையிற் - காடுகளிலும் சுடலைகளிலும்;
கணத்துடன் – கணங்களோடு;
ஆடி – ஆடி;
பாம்பு – பாம்பு;
எலும்பு – எலும்பு;
பல்தலை மாலையும் - பலதலை மாலைகள்; 

சாம்பல் - சாம்பல்;

அணிந்து – அணிந்து;

தலையோடு – தலையோடு;

ஏந்தி - கையில் ஏந்தி; 

குறிப்பு:

சிவனின் கரங்களில் மானும் மழுவும் திகழும். வலது மேல்கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் காணப்படும்.

மழு –  தருகாவனத்து ரிஷிகளின் செருக்கினை அகற்ற, சிவபெருமான் சென்ற போது ரிஷிகள் தவவலிமையால் ஏவிய புலியை உரித்து ஆடை அணிந்து கொண்டதாகவும், கொல்ல ஏவிய மழுவினைத் தனது ஆயுதமாக ஏற்றுக்கொண்டதாகவும் சைவ நூல்கள் கூறுகின்றன.

       

மழு

            

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை 
நச்சிநீர் செய்தவம் நகைதரும் நுமக்கெனப் 
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் 
ஆங்கு அவள் நாணமுற்று அணிமனை புகுதச்      
68  

பொருள்

“பிச்சை எடுத்துக் கொண்டு திரியும் பைத்தியக்காரனை, வீண் வார்த்தை பேசும் நீர் செய்யும் கடுந்தவம், சிரிப்பிற்கு இடமானது” என்று சொல்லி அப்பிராமணன், பூங்கொடி போல் தோற்றமளிக்கும் அப் பெண்ணின் அரிய தவத்தைக் கலைக்கவும், அவள் நாணம் கொண்டு தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள். 

சொற்பொருள்

பிச்சைகொண்டு – பிச்சை எடுத்துக் கொண்டு;
உழலும் – திரியும்;
பித்தன் தன்னை – பைத்தியக்காரனை;
நச்சி - வீண் வார்த்தை பேசும் ஒரு பெண்;
நீர் – நீர்;
செய்தவம் - செய்யும் தவம்;
நகைதரும் – சிரிப்பிற்கிடமானது;
நுமக்கென – உமக்கு;
பூங்கொடி –. மலர்களைக்கொண்ட கொடி;
அருந்தவம் – கடுந்தவம்;
பூசுரன் – பிராமணன்;
குலைத்தலும் – கலைத்தலும்;
ஆங்கு - அங்கு; 
அவள் – அவள்;
நாணமுற்று - நாணம் கொண்டு;
அணிமனை - தன் வீட்டிற்கு;
புகுத – ஓடிவிட்டாள்; 

சேடியர் வந்து செழுமலர்க் குழலியை 
வாடுதல் ஒழிகென மனம்மிகத் தேற்றிச் 
சிந்துர வாள் நுதற் சேடியர் சிலர்போய்த் 
தந்தைதாய் இருவர் தாளிணை வணங்கி 72 

பொருள்

சில தோழியர் வந்து மலர் அணிந்த கரிய கூந்தலை உடைய அச்சிறுமியை “மனம் வருந்தாதே” என்று தேற்றினர். அவ்வேளையில், சிவந்த ஒளி பொருந்திய நெற்றி உடைய சில தோழியர் தந்தைதாய் இருவரிடம் போய் அவர்களுடைய கால்களை வணங்கி, 

சொற்பொருள்

சேடியர்- தோழியர்; 
வந்து – வந்து;
செழுமலர்க் குழலியை - மலர் அணிந்த கரிய கூந்தலை உடைய;
வாடுதல் - மனம் வருந்துதல்;
ஒழிகென – விட்டுவிடு;
மனம்மிகத் தேற்றி - மனத்தை மிகவும் தேற்றி; 
சிந்துர - சிவப்பு, செந்தூரம்;
வாள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றி;
சேடியர் – தோழியர்;
சிலர்போய் – சிலர் போய்;
தந்தைதாய் இருவர் - தந்தைதாய் இருவர்;
தாளிணை – கால்களை;
வணங்கி – வணங்கி;

வாவிக் கரையில் வந்து ஒரு மறையோன் 
பாவைதன் செங்கையைப் பற்றினன் என்றலுந்
தோடு அலர் கமலத் தொடைமறை முனியை 
ஆடக மாடத்து அணிமனை கொணர்க என 76
 

பொருள்

“(கௌரி தவம் செய்யும்) குளக் கரையில் ஒரு பிராமணன் வந்து அச்சிறுமியின் கையைத் தொட்டான்” என்று தோழியர் கூற; “இதழ் விரிந்த தாமரை மலர் மாலை அணியும், வேதம் ஓதும் அம் முனிவரைப் பொன் மாடங்களோடு இணைந்த எங்கள் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” என்று கூறினர். 

சொற்பொருள்

வாவிக் கரையில் – (கௌரி தவம் செய்யும்) குளக் கரையில்;
வந்து – வந்து;
ஒரு மறையோன் – ஒரு பிராமணன்;
பாவைதன் செங்கையைப் - அச்சிறுமியின் கையை;
பற்றினன் – தொட்டான்;
என்றலும் - என்று கூற;
தோடு – இதழ் விரிந்த;
அலர் - பூ, மலர்;
கமலம் – தாமரை;
தொடை – மாலை;
மறை முனியை - வேதம் ஓதும் அம் முனிவரை;
ஆடகம் - பொன்;
மாடத்து அணிமனை - பொன் மாடங்களோடு இணைந்த எங்கள் வீட்டிற்கு; 
கொணர்க - அழைத்து வாருங்கள்;
என – என்று சொன்னார்கள்;

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி 
நீடிய புகழாய் நீ எழுந்து அருள் என 
மைம்மலர்க் குழலி வந்து எனை அழைக்கில் 
அம்மனைப்  பு குவன் என்றுஅந்தணன் ரைத்தலும்     
80   

பொருள்

யாழ் போல ஒலிசெய்யும் பெண்கள் ஓடி வந்து “நீண்ட புகழு டையவனே நீ எழுந்து வருக” என்று அழைத்தனர். மலர் அணிந்த மை போலக் கரிய முடி உடையவள் வந்து என்னை அழைக்கில் நான் அவ்வீடு செல்வேன்”, என்று அந்தணன் கூறினான். 

சொற்பொருள்

மாடகம் - யாழில் ஒரு பகுதி;
யாழ்முரல் - யாழ் போல ஒலிசெயும்;
மங்கையர் – பெண்கள்;
ஓடி – ஓடி;
நீடிய - நீண்ட; 
புகழாய் - புகழுடையவனே;
நீ – நீ;
எழுந்து – எழுந்து;
அருள் என - வருக என்று;
மை - மை போல கரிய;
மலர் – மலர்; 
குழலி – முடி;
வந்து – வந்து;
எனை அழைக்கில் - என்னை அழைக்கில்;
அம்மனைப் புகுவன் - அவ்வீடு செல்வேன்;
என்று – என்று;
அந்தணன் உரைத்தலும் – அந்தணன் கூறினான்; 

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்
சிவனை இகழ்ந்த சிற்றறிவு உடையோன் 
அவனையான் சென்று இங்கு அழைத்திடேன் என்று 84 

பொருள்

“கையில் பொன்னாலாகிய காப்பு அணிந்த பெண்ணே! நீ போய்க்  குளக்கரையில் நிற்கின்ற நல்ல தவம் மேற்கொண்ட முனிவரை நடத்திக் கொண்டுவா” என்று கூறினர். அதற்கு அவள் “அவன் சிவனை இகழ்ந்த சிற்றறிவு உடையோன். அவனையான் சென்று இங்கு அழைத்திடேன்” என்று கூறினாள். 

சொற்பொருள் 

பொற்றொடி - கையில் பொன்னாலாகிய காப்பு அணிந்த பெண்;
நீ போய் - நீ போய்;
பொய்கையில் - குளக்கரையில்;
நின்ற – நிற்கின்ற;
நற்றவ முனியை - நல்ல தவம் மேற்கொண்ட முனிவரை; 
நடாத்தி – நடத்தி;
கொணர்கென – கொண்டுவா என்று கூறினர்;
சிவனை இகழ்ந்த - சிவனை இகழ்ந்த;
சிற்றறிவு உடையோன் - சிற்றறிவு உடையோன்;
அவனையான் – அவனையான்; 
சென்று – சென்று;
இங்கு – இங்கு;
அழைத்திடேன் என்று - அழைத்திடேன் என்று; 

சிற்றிடை மடந்தையுஞ் சீறின ளாகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி 
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென் 
பொற்பமர் கொங்கை பொருத்துதற்கு அரிதால் 88 

பொருள்

சிறிய இடை உடைய அந்தப் பெண் கோபம் கொண்டு மற்றப் பெண்களின் முகங்களைப் பார்த்து “நெற்றிக் கண்ணுடைய மலங்கள் இல்லாத சிவன் அல்லாமல் என் அழகிய முலைகள் வேறொருவருக்குப் பொருந்த மாட்டா”; 

சொற்பொருள்

சிற்றிடை – சிறிய இடை உடைய;
மடந்தையும் – பெண்;
சீறினளாகி - கோபம் கொண்டு;
மற்றைய – மற்ற;
மாதர் – பெண்களின்; 
மதிமுகம் நோக்கி – முகங்களைப் பார்த்து;
நெற்றியில் கண்ணுடை - நெற்றிக் கண்ணுடைய;
நிமலனுக்கு – மலங்கள் இல்லாத;
அல்ல – அல்லாமல்;
என் – என்;
பொற்பமர் – அழகிய;
கொங்கை – முலைகள்;
பொருத்துதற்கு அரிதால் – வேறொருவருக்குப் பொருந்த மாட்டா; 

மானிட வேட மறையவன் தனக்கு 
யான் வெளிப் படுவ தில்லை என்று இசைப்ப 
மனையிடை வந்த மாமுனி தன்னை
இணைஅடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத் 92 

பொருள்

“மனித உருவமுடைய அந்தணனுக்கு நான் முற்படமாட்டேன்” என்று சொன்னாள். “வீட்டிற்கு வந்த முனிவனின் பாதங்களைத் தொழுதல் இளையவர்களுக்கு முறையானது” என்று பெற்றோர் கூறினர்; 

சொற்பொருள்

மானிட வேட - மனித உருவமுடைய; 
மறையவன் தனக்கு – அந்தணனுக்கு;
யான் – நான்;
வெளிப் படுவ தில்லை – முற்படமாட்டேன்;
என்று – என்று;
இசைப்ப – சொன்னாள்;
மனையிடை – வீட்டிற்கு; 
வந்த – வந்த;
மாமுனி தன்னை – முனிவனின்;
இணைஅடி தொழுதல் - பாதங்களைத் தொழுதல்;
இளையோர்க்கு – இளையவர்களுக்கு;
இயல்பென - முறையானது என்று கூறினர்; 


குவளை

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் 
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து 
தாய்சொல் மறுத்தல் பாவம் என்று அஞ்சி 
ஆயிழை தானும் அவன் எதிர்சென்று 96 

பொருள்

தந்தையும் தாயும் மறுத்துக் கூற மனம் குளிர்ந்து கோபத்தை விடுத்து தாய்சொல் மறுத்தல் பாவம் என்று பயந்து அந்த இளம்பெண் முனிவர் முன்சென்று; 

சொற்பொருள்

தந்தையும் – தந்தையும்;
தாயும் – தாயும்;
தகைபெற – மறுத்து;
மொழிய – கூற;
சிந்தை – மனம்;
குளிர்ந்து – குளிர்ந்து;
சீறுதல் ஒழிந்து - கோபத்தை விடுத்து;
தாய்சொல் – தாய்சொல்;
மறுத்தல் – மறுத்தல்; 
பாவம் – பாவம்;
என்று அஞ்சி – என்று பயந்து;
ஆயிழை தானும் – பெண்;
அவன் – அவன்;
எதிர்சென்று – முன்சென்று; 

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து 
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்று எண்ணி 100 

பொருள்

சுற்றிவந்து முனிவரின் பாதங்களைச் சுந்தரி வணங்கி, முனிவரை வீட்டுக்கு அழைத்து வந்து, சிவனுக்கு அன்பன் ஆகும் அந்தணன், பழைய முதியவர், என்று எண்ணி, 

சொற்பொருள்

சுற்றிவந்து – சுற்றிவந்து;
அவனடி - முனிவரின் பாதங்களை;
சுந்தரி - சுந்தரி;
வணங்கி – வணங்கி;
மற்றவன் தன்னை – முனிவரை;
மனையில் – வீட்டுக்கு; 
கொணர்ந்து - அழைத்துவந்து;
ஆதியம் பகவற்கு – சிவனுக்கு;
அன்பன் - அன்பன்;
ஆகும் – ஆகும்;
வேதியன் – அந்தணன்;
பழைய – பழைய;
விருத்தன் – முதியவர்;
என்று – என்று;
எண்ணி – எண்ணி; 

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் 
பாதபூ சனைகள் பண்ணிய பின்னர்ப் 
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்பு நெய் 
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை 104 

பொருள்

இருக்கை அளித்துத் தண்ணீர் கொடுத்தல் முதலான பாத பூசனைகள் செய்த பின்னர் போசனம் (உணவு) கொடுத்துப் பொரிக்கறி பருப்பு நெய் பால் மாங்கனி அழகிய பலாச்சுளை,  

சொற்பொருள்

ஆசனம் - இருக்கை;   
நல்கி - அளித்து;   
அருக்கியம் – தண்ணீர் கொடுத்தல்;
முதலாம் - முதலான;
பாத பூசனைகள் - பாத பூசனைகள்;
பண்ணிய - செய்த;
பின்னர் - பின்னர்;
போனகம் - போசனம் (உணவு);
படைத்து - கொடுத்து;
பொரிக்கறி - பொரிக்கறி;
பருப்பு - பருப்பு; 
நெய் - நெய்;
ஆன்பால்- பால்;
மாங்கனி - மாங்கனி;
அழகிய பலாச்சுளை - அழகிய பலாச்சுளை; 

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுது செய்வித்துச் 
சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத் 
தக்கோ லத்தொடு சாதிக் காயும் 108 

பொருள்

தேன், வாழைப்பழம் சிறப்பாகப் படைத்து அந்தணனை உண்ண வைத்துச்  சந்தனக்குழம்பு குங்குமம் ஆகியவை கொடுத்து வால்மிழகோடு சாதிக் காயும், 

சொற்பொருள்

தேன் கதலிப்பழம் – இனிய வாழைப்பழம்;
சீர்பெறப் படைத்து – சிறப்பாகப் படைத்து;
அந்தணன் தன்னை - அந்தணனை;
அமுது செய்வித்து - உண்ண வைத்து; 
சந்தனங் குங்குமச்சாந்து இவை - சந்தனக்குழம்பு குங்குமம் ஆகியவை;
கொடுத்து – கொடுத்து;
தக்கோலத்தொடு – வால்மிழகோடு;
சாதிக் காயும் - சாதிக் காயும்; 

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு 
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 
ஒள்ளிய தட்டில் உவந்துமுன் வைத்துச் 
சிவன் எனப் பாவனை செய்து நினைந்து 112  

பொருள்

கற்பூரத்தொடு அழகுபெற வெற்றிலை, பாக்கு அமைந்த பொன்னின் நிறமுடைய தட்டை மகிழ்ச்சியோடு அவர் முன் வைத்து அவரைச் சிவன் எனப் பாவனை செய்து நினைந்து, 

சொற்பொருள்

கற்பூரத்தொடு – கற்பூரத்தொடு;
கவின்பெற – அழகுபெற;
கொண்டு – கொண்டு;
வெள்ளிலை – வெற்றிலை;
அடைக்காய் – பாக்கு;
விளங்கிய – அமைந்த;
பொன்னின் ஒள்ளிய தட்டில் - பொன்னின் நிறமுடைய தட்டில்;
உவந்து – மகிழ்ந்து;
முன் வைத்து - முன் வைத்து;
சிவன் – சிவன்;
எனப் பாவனை செய்து - எனப் பாவனை செய்து;
நினைந்து – நினைந்து; 

தவமுறை முனிவனைத் தாளிணை வணங்கத் 
தேன் அமர் குழலி திருமுகம் நோக்கி 
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக் 
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் 116
 

பொருள்

தவ நிலையில் இருக்கும் முனிவரின் பாதங்களை வணங்கத், தேன் நிரம்பிய மலர்கள் அணிந்த அவளின் முகத்தைப் பார்த்து, மௌன மாக இருக்கும் முனிவர் புன்முறுவல் காட்டி. வறண்டு முறுகிய மயிர்த்தொகுதியும் நான்கு கைகளும், 

சொற்பொருள்

தவமுறை - தவ நிலையில்;
முனிவனை – முனிவனை;
தாளிணை – பாதங்களை;
வணங்க – வணங்க;
தேன் அமர் - தேன் நிரம்பிய மலர்கள் அணிந்த;
குழலி - மயிர் உடைய;
திருமுகம் – முகம்;
நோக்கி – பார்த்து;
மோனமா – மௌன மாக இருக்கும்;
முனி – முனிவர்;
புன் முறுவல் - புன் சிரிப்பு;
காட்டி – காட்டி;
கற்றைச் சடை – மயிர்த்தொகுதி;
கரமொரு நான்கு – நான்கு கைகள்; 

நெற்றியில் நயனமும் நீல கண்டமும் 
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் 
கூன்மதி நிலவுங்  கொழித்திட முடிமேல் 
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120 

பொருள்

நெற்றியில் கண்ணும், நீல கண்டமும், மலர் போன்ற கரங்களில் மானும், போர் கோடரியும் இருக்க, தலையில் இளம்பிறைச் சந்திரன் துலங்க வரம் தருகின்ற தலைவன் அந்த மயில் போன்ற சிறுமி காணும்படியாகத் தோன்றினார். 

சொற்பொருள்

நெற்றியில் – நெற்றியில்;
நயனமும் – கண்ணும்;
நீல கண்டமும் - நீல கண்டமும்;
மானும் மழுவும் - மானும் போர் கோடரியும்;
மலர்க்கரத்து - மலர் போன்ற கரங்களில்;
இலங்க – விளங்க;
கூன்மதி நிலவு - இளம்பிறைச் சந்திரன்;
கொழித்திட - துலங்க;
முடிமேல் – தலையில்;
வரந்தரு - வரம் தருகின்ற;
முதல்வன் – தலைவன்;
மடமயில் - அழகிய பெண்;
காண – காணும்படியாக; 

கரந்ததன் உருவங் காட்டிமுன் நிற்ப 
மரகத மேனி மலைமகள் தானும்
விரைவொடு அங்கு அவன் அடி வீழ்ந்து இறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் 124
 

பொருள்

மறைத்துக் கொண்டிருந்த தன் உருவத்தைக் காட்டி முன் நிற்க மரகதம் போன்ற நிறமுடைய அச்சிறுமி அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். திருமால், பிரமன், இந்திரன், மற்ற தேவர்கள், தேவ பாடகர்கள், 

சொற்பொருள்

கரந்ததன் - மறைத்துக் கொண்டிருந்த தன்;
உருவம் – உருவம்;
காட்டி – காட்டி;
முன்நிற்ப - முன்னே நிற்க;
மரகத மேனி - மரகதம் போன்ற நிறமுடைய;
மலைமகள் தானும் – அச்சிறுமி;
விரைவொடு – விரைவில்;
அங்கு – அங்கு; 
அவன் அடி வீழ்ந்து - அவன் கால்களில் வீழ்ந்து;
இறைஞ் சினளே – வணங்கினாள்;
அரிஅயன் - திருமால், பிரமன்;
இந்திரன் – இந்திரன்;
அமரர் – தேவர்கள்;
விஞ்சையர் - தேவ பாடகர்கள்; 

குறிப்பு

மலைமகள்: இமயமலையின் அரசனான ஹிமவானின் மகளாக உமாதேவியார் ஒரு தடவை பிறந்திருந்தார்.

கருடர் கின்னரர் காய வாசியர் 
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் 
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க் 128 

பொருள்

பதினெண்கணத்தாரில் கருடர் என்னும் ஒரு வகுப்பார், வாத்தியம் வாசிப்போர், ஆகாயத்தில் வசிப்போர்(தேவர்கள்), குற்றமற்ற முனிவர்கள், அசுரர், இராட்சதர், அரக்கர், பதினெண்கணத்தாரில் பூதர் என்னும் ஒரு வகுப்பார், இயக்கர் என்னும் ஒரு இனப் பூர்வீக மக்கள். கிம்புருசர்கள், (பாதி விலங்கு வடிவமும் பாதி மனித வடிவம் கொண்டவர்கள் என மகாபாரதம் கூறுகிறது), பிசாசு, சித்தர் நட்சத்திர தேவதைகள், கந்தருவர்கள் (இசைவல்ல தேவகுலத்தார்), முதலாக, 

சொற்பொருள்

கருடர் – பதினெண்கணத்தாரில் ஒரு வகுப்பார்;
கின்னரர் - வாத்தியம் வாசிப்போர்;
காய வாசியர் - ஆகாயத்தில் வசிப்போர்;
ஏதமில் முனிவர் – குற்றமற்ற முனிவர்கள்;
அவுணர் – அசுரர்;
இராக்கதர் – இராட்சதர்; அரக்கர்;
பூதர் - பதினெண்கணத்தாரில் ஒரு வகுப்பார்;
இயக்கர் - ஒரு இனப் பூர்வீக மக்கள். குபேரனின் தாய் இவ்வினத்தைச் சேர்ந்தவள்.
கிம்புருடர் - கிம்புருசர்கள், பாதி விலங்கு வடிவமும்; பாதி மனித வடிவம் கொண்டவர்கள் என மகாபாரதம் கூறுகிறது. பாகவத புராணத்தின் உத்தவ கீதையில் பகவான் கிருட்டிணன் தான் கிம்புருசர்களில் அனுமானாக உள்ளேன் எனப் பெருமையாகக் கூறுகிறார்.
அலகை – பிசாசு;
சித்தர் - எண் பெருஞ்சித்தி பெற்றவர்.[திருமூலர், அகத்தியர் இவ்வினத்தினர். சித்தர்கள் நமக்கு சித்த வைத்தியத்தை அளித்தார்கள்.]
தாரகை - நட்சத்திரத் தேவதைகள்;
கந்தருவர்கள் - இசைவல்ல தேவகுலத்தார்; இவர்களுடைய மனைவியர் அப்சரஸ் எனப்படுவர். மஹாபாரதத்தில் சித்ரரதன் கந்தர்வ இனத் தலைவன்.
முதலாய்க் – முதலாக; 

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள் ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்
மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத் 
தென்றல் வந்து இலங்கு முன்றில் அகத்துப் 132 

பொருள்

பதினெட்டுக் கணங்களில் உள்ளவரும் நீலநிறக் கழுத்தினை உடைய சிவனை வந்தடைந்தார்கள். அதன்பின் எல்லோருமாகக் கல்யாணம் நிச்சயம் பண்ணி இளம் தென்றல் வீசும் வீட்டு முற்றத்தில்; 

சொற்பொருள்

கணிக்கரும் - ஒரு இன மக்கள்;
பதினெண் – பதினெட்டு;
கணத்தில் – கணங்களில்;
உள்ளவரும் – உள்ளவரும்;
மணி – அழகிய;
கருங் களத்தனை - நீலநிற கழுத்தினை உடைய சிவனை;
வந்தடைந்து – வந்தடைந்து; 
அதன்பின்- அதன்பின்;
மன்றல் – மணம்;
அங் குழலிக்கு - மயிர் உடைய;
வதுவைநாள் - திருமண நாள்;
குறித்து - நிர்ணயித்து;
தென்றல் - தென்றல் காற்று;
வந்து - வந்து;
இலங்கு - வீச;
முன்றில் - முற்றத்தில்;
அகத்து - வீட்டு; 

[மணப்பந்தல் சோடித்தல்] 

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி 
மாணிக் கத்தால் வளைபல பரப்பி 
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து 
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் 136 

பொருள்

பொன்போல் பிரகாசிக்கின்ற பவளப் பொற்கால் (கன்னிக்கால்) நாட்டி மாணிக்கத்தால் சங்குகள் வைத்து பொன் தகட்டால் மணப் பந்தலின் கூரை வேய்ந்து, முத்து மாலைகள் நிரைநிரையாகத் தூக்கி; 

சொற்பொருள்

பொன்திகழ் - பொன்போல பிரகாசிக்கின்ற;
பவளப் பொற்கால் - பவளப் பொற்கால்;
நாட்டி - நாட்டி;
மாணிக்கத்தால் - மாணிக்கத்தால்;
வளைபல பரப்பி - சங்குகள் வைத்து;
ஆணிப்பொன் தகட்டால் - பொன் தகட்டால்;
அழகுற வேய்ந்து - கூரை வேய்ந்து; 
நித்தில மாலை - முத்து மாலைகள்;
நிரைநிரை தூக்கிப் - நிரைநிரையாக தூக்கி; 

குறிப்பு

[கன்னிக்கால் ஊன்றல்: ஒரே நாளில் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்றுவர். அதற்கு இப்போது கலியாண முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி விடுவர். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்குத் தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டுவர். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்துவர். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்துக் கும்பத்தண்ணீரை ஊற்றுவர்.] 

பத்திகள் தோறும் பலமணி பதித்துத் 
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப் 
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறுந் திருவிளக்கு ஏற்றிப் 140

பொருள்

மணப் பந்தலின் பத்திகள் தோறும் இரத்தினங்கள் பதித்து, தோரணங்கள் கட்டி, வெண் துகில் வெள்ளை கட்டி, பூரணப் பொற்குடம் அழகுற வைத்து, எல்லாப் பக்கங்களிலும் திருவிளக்கு ஏற்றி; 

சொற்பொருள்

பத்திகள் தோறும் - மணப் பந்தலின் பத்திகள் தோறும்;
பலமணி பதித்து - இரத்தினங்கள் பதித்து;
தோரணம் நாட்டி - தோரணங்கள் கட்டி;
துகில்விதா னித்து - வெண் துகில் வெள்ளை கட்டி;
பூரணப் பொற்குடம் - பூரணப் பொற்குடம்;
பொலிவுற வைத்து - அழகுற வைத்து;
திக்குத் தோறும் - எல்லாப் பக்கங்களிலும்;
திருவிளக்கு ஏற்றிப் - திருவிளக்கு ஏற்றி; 

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் 
கன்னலுங் கமுகுங் கதலியும் நாட்டிப் 
பன்மலர் நாற்றிப் பந்தர் சோ டித்து
நலமிகு கைவலோர் நஞ்சுஅணி மிடற்றனைக் 144 

பொருள்

வரிசையாக முளைப்பயிர் பரப்பி, கரும்பு, கமுகு, வாழை மரம் நாட்டி பல மலர்கள் தூவி பந்தல் சோடித்து நலமுள்ள அலங்காரத் திறமை உள்ளவர்கள் நஞ்சு உண்ட நீலகண்டனை; 

சொற்பொருள்

பத்தி - வரிசையாக;
படர் முளைப்பாலிகை பரப்பிக் - முளைப்பயிர் பரப்பி;
கன்னல் - கரும்பு;
கமுகு - கமுகு;
கதலி - வாழை மரம்
நாட்டி - நாட்டி;
பன்மலர் நாற்றிப் - பல மலர்கள் தூவி; 
பந்தர் சோடித்து - பந்தல் சோடித்து;
நலமிகு - நலமுள்ள;
கைவலோர் - அலங்காரத் திறமை உள்ளவர்கள்;
நஞ்சுஅணி மிடற்றனைக் - நஞ்சு உண்ட நீலகண்டனை; 

குறிப்பு

[முளைப்பாலிகை போடல்: பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிப்பர் . (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போவார்கள். அநேகமாகப் பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும். முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையைத் திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.] 

குலவிய திருமணக் கோலம் புனைந்தார் 
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத் 
திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே 
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும் 148 

பொருள்

(நஞ்சு உண்ட நீலகண்டனை) அழகிய மணக் கோலம் செய்தனர், தேவ மகளிர் உமா தேவியான அச்சிறுமியை மணக் கோலம் செய்தனர். அங்கே சிவபெருமானையும் உமாதேவியையும்,

சொற்பொருள்

குலவிய – அழகிய;
திருமணக் கோலம் புனைந்தார் - மணக் கோலம் செய்தனர்;
வருசுரர் மகளிர் - தேவ மகளிர்;
மலைமகள் தன்னைத் - உமா தேவியான அச்சிறுமியை;
திருமணக் கோலஞ் செய்தனர் - மணக் கோலம் செய்தனர்;
ஆங்கே - அங்கே;
எம்பி ரானையும் - சிவபெருமானையும்; 
இளங்கொடி தன்னையும் - உமாதேவியையும்; 

சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் 

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் 
கடல் என விளங்குங் காவணந் தன்னிற் 
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையில் 
மறைபுகழ்ந்து ஏத்தமகிழ்ந்து உட னிருத்திப் 152 

பொருள்

தேவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கடல் போலத் தோன்றுகிற   மணப்பந்தலில் ஒளி வீசுகின்ற அழகிய பவளப் பலகையில் வேதங்கள் புகழ்ந்து போற்ற மகிழ்ந்து ஒருமிக்க இருத்தி,   

சொற்பொருள்

உம்பர் எல்லாம் - தேவர்கள் எல்லாரும்;
ஒருங்குடன் கூடிக் - ஒன்று கூடி;
கடல் என விளங்கும் - கடல் போலத் தோன்றுகிற;   
காவணந் தன்னில் - மணப்பந்தலில்;
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையில் - ஒளி வீசுகின்ற அழகிய பவளப்
பலகையில்;
மறைபுகழ்ந்து ஏத்த - வேதங்கள் புகழ்ந்து போற்ற;
மகிழ்ந்து - மகிழ்ந்து;
உடனிருத்திப் – ஒருமிக்க இருத்தி; 

பறை ஒலி யோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே 
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத் 
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச் 156 

பொருள்

பறை முழக்கத்துடன் சங்கு நாதம் ஒலிக்கத், திருமணத்திற்கு ஏற்ற வேத விதிப்படி பிரமன் ஓமச் சடங்குகள் செய்ய, சிவபெருமான் ஒளிபொருந்திய பொன் தாலி பூட்டினார். 

சொற்பொருள்

பறை ஒலி யோடு - பறை முழக்கம்;
பனிவளை ஆர்ப்ப - சங்கு நாதம் ஒலிக்க;
வதுவைக்கு ஏற்ற -  திருமணத்திற்கு ஏற்ற;
மறைவிதி நெறியே - வேத விதிப்படி;
சதுர்முகன் - பிரமன்;
ஓமச் சடங்குகள் இயற்ற - ஓமச் சடங்குகள் செய்ய;
தறுகலன் - சிவபெருமான்;
ஒளிபொன் தாலி பூட்டி - ஒளிபொருந்திய பொன் தாலி பூட்டினார். 

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் 
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து 
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப் 
போது அணி கருங்குழற் பூவைதன் உடனே 160 

பொருள் 

இளம் பிறை சந்திரன் போன்ற நெற்றியையுடைய உமையைச் சிவன் கைப்பிடித்தபின் திருமால் மாப்பிள்ளைத் தோழனாக, மணமக்கள் அக்கினி வலம் வந்து பரிவுடன் நறுமண முள்ள பாயில் அமர்ந்து, மலர் அணிந்த கரிய தலை முடியுடைய உமாதேவியுடன்,

சொற்பொருள்

சிறுமதி நுதலியை - இளம் பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையுடைய உமையை;
சிவன் கைப்பிடித்தபின் - சிவன் கைப்பிடித்தபின்;
அரிவலஞ் சூழ - திருமால் மாப்பிள்ளைத் தோழனாக;
எரிவலம் வந்து - அக்கினி வலம் வந்து;
பரிவுடன் - பரிவுடன்;
பரிமளப் - நறு மணமுள்ள;
பாயலில் வைகிப் - பாயில் இருந்து;
போது அணி - மலர் அணிந்த;
கருங்குழற் - கரிய தலை முடியுடைய;
பூவைதன் உடனே - உமாதேவியுடன்; 

ஓதநீர் வேலைசூழ் உஞ்சைஅம் பதிபுக 
ஏரார் வழியின் எண் திசை தன்னைப் 
பாரா தேவா பனிமொழி நீ என 
வரும்கருங் குழலாள் மற்றும் உண்டோ எனத் 164 

பொருள்

அலைநீர் கடல்சூழ்ந்த அவந்திநகரத்தில் தம் இருக்குமிடத்திற்குச் செல்லும்போது அழகிய பாதையில் "இனிய வார்த்தை பேசுபவளே, அங்குமிங்கும் பாராமல் வா" என்று கூறினார். வந்துகொண்டிருக்கின்ற கரிய கூந்தலை உடைய உமை, அங்கு வேறு எதாவது விசேடம் உண்டோ என்று நினைத்தாள்.

சொற்பொருள்

ஓதநீர் - அலைநீர்;
வேலைசூழ் - கடல்சூழ்ந்த;
உஞ்சை - அவந்திநகரம்;
அம் பதிபுக - இருக்குமிடத்திற்கு செல்ல;
ஏரார் வழியின் - அழகு பொருந்திய பாதையில்;
எண் திசை தன்னைப் - எண் திசைகளையும்  (அங்குமிங்கும்);
பாராதே வா - "பாராமல் வா”;
பனிமொழி நீ - இனிய வார்த்தை பேசுபவளே;
என -  என்று கூறினார்;
வரும் கருங் குழலாள் - வந்துகொண்டிருக்கின்ற கரிய கூந்தலை உடையவள்;
மற்றும் உண்டோ - வேறு எதாவது விசேடம் உண்டோ; 
எனத் - என்று நினைத்து;

குறிப்பு

கடல்சூழ்ந்த அவந்திநகரத்தில்: அவந்திநகரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது. 

திருந்து இழை மடந்தை திரும்பினள் பார்க்கக் 
களிறும் பிடியும் கலந்துவிளை யாடல் கண்டு 
ஒளிர்மணி பூணாள் உரவோன் உடனே 
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென 168 

பொருள்

அழகிய இடையை உடையவள் திரும்பி பார்த்தாள். அங்கு ஆண் யானை ஒன்றும் பெண் யானை ஒன்றும் சேர்ந்து விளையாடுவதைக் கண்டாள். பிரகாசிக்கின்ற இரத்தின நகை அணிந்திருப்பவள் இறைவனிடம் உடனே "நாமும் இங்கு இப்படி விளை யாடுவோம்" என்று கூறினாள். 

சொற்பொருள்

திருந்து இழை மடந்தை - அழகிய இடையை உடையவள்;
திரும்பினள் பார்க்க - திரும்பி பார்த்தாள்;
களிறும் பிடியும் - ஆண் யானை ஒன்றும் பெண் யானை ஒன்றும்;
கலந்துவிளை யாடல் கண்டு - சேர்ந்து விளையாடுவதைக் கண்டாள்;
ஒளிர்மணி பூணாள் - பிரகாசிக்கின்ற இரத்தின நகை அணிந்திருப்பவள்;
உரவோன் உடனே - இறைவன் உடனே;
இவ்வகை யாய்விளை யாடுவோம் - நாமும் இப்படி விளை யாடுவோம்;
ஈங்கென - இங்கு என்று;

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு 
மதகரி உரித்தோன் மதகரி யாக 
மதர்விழி உமைபிடி வடிவம தாகிக் 
கூடிய கலவியிற் குவலயம் விளங்க 172

பொருள்

அப்படியே சிவனும் அதற்கு உடன் பட்டு ஆண் யானையின் தோலை உரித்த சிவன் ஆண்யானையாகவும் அழகிய கண்களை உடைய உமை பெண்யானையாகவும் வடிவமெடுத்து, கூடிய சேர்க்கையில் உலகம் மேன்மை அடைய; 

சொற்பொருள்

அவ்வகை - அப்படியே;
அரனும் - சிவனும்;
அதற்கு உடன் பட்டு - அதற்கு உடன் பட்டு;
மதகரி உரித்தோன் – ஆண் யானையின் தோலை உரித்தவன்;
மதகரி யாக – ஆண்யானையாக;
மதர்விழி உமை - அழகிய கண்களை உடைய உமை;
பிடி வடிவம தாகிக் - பெண்யானையாக வடிவமெடுத்து;
கூடிய கலவியிற் - கூடிய சேர்க்கையில்;
குவலயம் விளங்க - உலகம் மேன்மை அடைய; 

குறிப்பு

ஆண் யானையின் தோலை உரித்தவன்: சில ரிஷிகள் தங்கள் யாகத்தின் திறைமையினாலே கர்வம் கொண்டிருந்தனர். அந்தக்  கர்வத்தினால் சிவ வழிபாடு அவசியம் இல்லை என்று கருதி, சிவபெருமானை அவமதிப்பவர்களாக இருந்தனர். அவர்களது கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். அதன்படி திருமால், பெண் வேடத்தில் மோகினியாக உடன் வர, தான் திகம்பரராகத் திருமேனி கொண்டு ரிஷிகள் வாழ்ந்த தாருகாவனத்தை அடைந்தார் சிவனார்.

திகம்பரரின் பிரகாசமான அழகையும், வாலிப வனப்பையும் கண்டு அவரது பேரழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், அவரைப் பின்தொடர்ந்தனர். அதே போல் மோகினியின் அழகில் மயங்கிய ரிஷிகள் யாகத்தைக் கைவிட்டு மோகினியைப் பின்தொடர்ந்தனர்.

தம் மனைவியரும் திகம்பரர் உடன் வருவதையும் கண்டனர்.

''நாங்கள் தவம் செய்யும் இடத்துக்கு ஏன் வந்தாய்?'' என்று திகம்பரரை நோக்கி ரிஷிகள் கேட்கவும், தாமும் தம் மனைவி மோகினியுடன் அங்கே தவம் செய்ய வந்ததாகக் கூறிச் சிரித்தார்.

இதனால் கோபமுற்று தீய வேள்வி ஒன்று செய்து, அதிலிருந்து பெரிய பூதத்தைத் தோற்றுவித்து திகம்பரரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர்.

அதன்படி அவர்கள் தொடங்கிய யாகத்தில் முதலில் ஒரு நெருப்புக் கோளம் வந்தது. அதை, திகம்பரரை அழிக்கும்படி ஏவினர் ரிஷிகள். திகம்பரராகிய சிவபெருமான் அதைத் தம் கையில் ஏந்தினார். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய பாம்பு, டமருகம் (உடுக்கை) ஆகியவற்றையும் கைகளில் ஏந்தி, மண்டை யோட்டை மாலையாகவும் அணிந்தார் சிவனார்.

இவை தவிர, யாகத்திலிருந்து அவர்கள் அனுப்பிய சிங்கத்தை உரித்து, தமது கச்சாக அணிந்தார். பிறகு, பெரிய கருவண்டு ஒன்றை அனுப்பினர். சிவ பெருமான், ரீங்காரம் செய்து அதனைத் தமது நடனத்துக்கு சுருதி கூட்டுமாறு செய்தார். வலிமை யான பூதத்தை அவர்கள் ஏவ, அதைத் தனக்கு ஏவலனாக ஆக்கினார். அறியாமையின் வடிவானவனும், அநேக நோய்களை உண்டு பண்ணுபவனுமாகிய 'முயலகன்' என்ற குட்டைப் பூதத்தை அனுப்பினர். பெருமான் அவனைத் தமது திருவடி யின் கீழ் பாத மனையாக்கிக் கொண்டு, அவன் மேல் நடனமாடினார்.பெரிய முரட்டு யானையைத் தோற்றிவித்து அனுப்பினர். பெருமான் அதன் தோலை உரித்து அதைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். இதனால் அவர் கஜசம்ஹாரர், க்ருத்தி வாசர், கரி உரித்த பெருமான் என்று புகழப் பெற்றார்.

தீய வேள்விக்குத் துணை நின்ற வேத புருஷன், மான் வடிவம் கொண்டு சிவபெருமான் காலில் வீழ்ந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட, அந்த மானைத் தம் இடக் கரத்தில் ஏந்தி, எந்த நேரமும் தமது காதில் வேதம் ஓதுமாறு பணித்தார்.

இது ஒரு சிறு கதைதான். ஆனாலும் பிற்காலத்தில் எழுந்த சிற்பங்களிலும் வரையப்பட்ட  படங்களிலும் மான் முயலகன், யானைத்தோல் போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. இவை ஏன் என்று ஐயமுறுவோருக்கு விளக்கமாக இங்கு இக்கதை தரப்பட்டிருக்கின்றது. 

நீடிய வானோர் நெறியுடன் வாழ 
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச் 
செந்தழல் வேள்விவேத ஆகமஞ் சிறக்க 
அறம்பல பெருக மறம்பல சுருங்கத் 176 

பொருள்

உயர்ந்த தேவர்கள் நன்நெறியுடன் வாழ, அந்தணர் சிறப்புற, பசு இனம் பெருக, சிவந்த நெருப்புடன் செய்யும் வேள்விகளும், வேதங்களும் ஆகமங்களும் சிறக்க, பல தருமங்கள் பெருக, பாவங்கள் பல சுருங்க; 

சொற்பொருள்

நீடிய வானோர் - உயர்ந்த தேவர்கள்;
நெறியுடன் வாழ - நன்நெறியுடன் வாழ;
அந்தணர் சிறக்க - அந்தணர் சிறப்புற;
ஆனினம் பெருகச் - பசு இனம் பெருக;
செந்தழல் வேள்வி - சிவந்த நெருப்புடன் செய்யும் வேள்வி;
வேத ஆகமஞ் சிறக்க - வேதங்களும் ஆகமங்களும் சிறக்க;
அறம்பல பெருக - பல தருமங்கள் பெருக;
மறம்பல சுருங்கத் - பாவங்கள் பல சுருங்க; 

திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக் கையொடு 
ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந்துவர் வாயுந் 180 

பொருள்

பல திறன்களையுடைய அரசர்களின் மேன்மை பெருகவும், உலகம் மேம்பட்டு விளங்கவும், யானை முகமும், துளை உள்ள கையோடு, ஐந்து கரங்களும், இரண்டு மலர்ப் பாதங்களும், பவளம் போன்ற ஒளி உள்ள பளிச்சிடும் பசிய வாயும் கொண்ட; 

சொற்பொருள்

திறம்பல - பல திறன்களையுடைய;
அரசர் - அரசர்கள்;
செகதலம் விளங்க - உலகம் மேம்பட்டு விளங்க;
வெங்கரி முகமும் - யானை முகமும்;
வியன்புழைக் கையோடு - துளை உள்ள கையோடு; 
ஐங்கர தலமும் - ஐந்து கரங்களும் ;
மலர்ப்பதம் இரண்டும் -  இரண்டு மலர்ப் பாதங்களும்;
பவளத்து ஒளிசேர் - பவளம் போன்ற ஒளி உள்ள;
பைந்துவர் வாயுந் - பளிச்சிடும் பசிய வாயும்; 

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டுங் 
கோடிசூ ரியர்போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் 184 

பொருள்

முத்துப் பதித்த திடமான இரு தந்தங்களும், கோடி சூரியர்போல் பிரகாசமான மேனியும் பெட்டகம் போல் அகன்ற பெரிய குட உருவிலான வயிறும், நெற்றியில் கண்ணும், மூன்று புரி பூநூலும்; 

சொற்பொருள்

தவளக் கிம்புரி - முத்துப் பதித்த;
தடமருப்பு இரண்டுங் - திடமான இரு தந்தங்களும்;
கோடி சூரியர்போல் - கோடி சூரியர்போல்;
குலவிடு மேனியும் - பிரகாசமான மேனியும்;
பேழைபோல் அகன்ற - பெட்டகம் போல் அகன்ற;
பெருங்குட வயிறும் - பெரிய குட உருவிலான வயிறும்;
நெற்றியில் நயனமும் - நெற்றியில் கண்ணும்;
முப்புரி நூலும் - மூன்று புரி பூநூலும்; 

கற்றைச் சடையுங் கனகநீள் முடியுந் 
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
ஐங்கரத்து அண்ணல் வந்து அவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும் 188 

பொருள்

அடர்த்தியான சடையும், அழகிய நீண்ட முடியும், சுளகு போல் விரிந்த செவியும் ஐந்து கரங்களையுமுடைய தலைவன் வந்து அவதரித்தான். பொங்கும் பாம்பு அணிந்த புண்ணிய மூர்த்தியாய சிவனும்; 

சொற்பொருள்

கற்றைச் சடையும் - அடர்த்தியான சடையும்;
கனகநீள் முடியும் - அழகிய நீண்ட முடியும்;
தங்கிய முறம்போல் - சுளகு போல்;
தழைமடிச் செவியுமாய் - விரிந்த செவியும்;
ஐங்கரத்து அண்ணல் - ஐந்து கரங்களையுடைய தலைவன்;
வந்து அவதரித்தலும் - வந்து அவதரித்தலும்;
பொங்கரவு அணிந்த - பொங்கும் பாம்பு அணிந்த;
புண்ணிய மூர்த்தியும் - புண்ணிய மூர்த்தி; 

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி 
விண்ணு ளோர்களும் விரிந்தநான் முகனும்
மண்ணு ளோர்களும் வந்து உனை வணங்க
ஆங்கு அவர் தங்கட்கு அருள்சுரந்து அருளித் 192 

பொருள்

உமையும் மனமிக மகிழ்ந்து பிள்ளையை மகிழ்ச்சி ததும்பப் பார்த்துத் தேவர்களும், விரிந்த நான்கு முகங்களை யுடைய பிரமனும், பூவுலகத்தில் இருப்போரும் வந்து உனை வணங்க, அங்கு அவர்களுக்கு அருள் செய்து கொண்டிருக்கும் பிள்ளையார். 

சொற்பொருள்

மங்கை மனமிக மகிழ்ந்து -  உமையும் மனமிக மகிழ்ந்து;
உடன் நோக்கி -  மகிழ்ச்சி ததும்ப பார்த்து;
விண்ணு ளோர்களும் - தேவர்களும்;
விரிந்தநான் முகனும் - விரிந்த நான்கு முகங்களை யுடைய பிரமனும்;
மண்ணு ளோர்களும் - பூவுலகத்தில் இருப்போரும்;
வந்து உனை வணங்க - வந்து உனை வணங்க;
ஆங்கு அவர் தங்கட்கு - அங்கு அவர்களுக்கு;
அருள்சுரந்து அருளி - அருள் செய்து; 

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி அருந்தி
ஏரணி ஆலின் கீழ் இனிதிரு என்று 
பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக் 196 

பொருள்

தீமைகளை ஒழித்து, நன்நெறி அளித்து, உபவாசமிருந்தபின் பலகனிகளை ஆகாரமாக உட்கொன்டு இங்கு மகிழ்வோடு இரு என்று கூறிப் பூமியில் ஆல மரத்தின் கீழ் புதல்வனை இருத்தி; 

சொற்பொருள்

தீங்கது தீர்த்து - தீமை களை ஒழித்து;
செந்நெறி அளித்து - நன்நெறி அளித்து;
பாரண மாகப் - உபவாசமிருந்து;
பலகனி அருந்தி - பலகனிகளை ஆகாரமாக உட்கொன்டு;
ஏரணி ஆலின் கீழ் - ஆல மரத்தின் கீழ்;
இனிதிரு என்று - மகிழ்வோடு இரு என்று கூறி;
பூதலந் தன்னிற் - பூமியில்;
புதல்வனை இருத்தி - புதல்வனை இருத்தி; 


காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து 
தெய்வ நாயகன் சிறந்து இனிது இருந்தபின்
வானவ ராலும் மானுட ராலுங் 200 

பொருள்

காதல் மிக்க மென்மையான நடை உடைய பெண்ணும், தானும் மேகங்கள் தவழும் சோலைகள் உள்ள கைலாசத்தை அடைந்து இறைவன் சிறப்பாக மகிழ்ந்து இருந்தபின் வானவராலும், மானுடராலும், 

சொற்பொருள்

காதல்கூர் - காதல் மிக்க;
மடநடைக் கன்னியுந் தானும் - மென்மையான நடை உடைய பெண்ணும்;
மைவளர் சோலை - மேகங்கள் தவழும் சோலை;
மாநகர் புகுந்து - கைலாசத்தை அடைந்து;
தெய்வ நாயகன் - இறைவன்;
றந்து - சிறப்பாக;
இனிது இருந்தபின் - மகிழ்ந்து இருந்தபின்;
வானவராலும் - வானவராலும்;
மானுடராலுங் - மானுடராலும்; 

கஜாசுரன் வதை

கான் அமர் கொடிய டுவிலங் காலுங் 
கருவிக ளாலும் கால னாலும்
ஒருவகை யாலும் உயிர் அழி யாமல்
திரம் பெற மாதவஞ் செய்து முன் னாளில் 204 

பொருள் 

காட்டில் வாழும் கொடிய விலங்குகளாலும், படைக்கலன்களாலும், இயமனாலும், எந்த வகை யாலும் உயிர் அழியாமல் திரமாக வாழக்  கஜாசுரன் என்னும் அரக்கன் பெரிய தவம் செய்தான். 

சொற்பொருள்

கான் அமர் - காட்டில் வாழும்;
கொடிய – கொடிய;
கடுவிலங் காலும் - விலங்குகளாலும்;
கருவிக ளாலும் -  படைக்கலன்களாலும்; 
கால னாலும் - இயமனாலும்; 
ஒருவகை யாலும் - எந்த வகை யாலும்;
உயிர் அழியாமல் - உயிர் அழியாமல்;
திரம் பெற - திரமாக வாழ;
மாதவஞ் செய்து - கஜாசுரன் என்னும் அரக்கன் பெரிய தவம் செய்தான்; 
முன்னாளில் - முன்பு; 

வரம்பெறு கின்ற வலிமையி னாலே
ஐமுகச் சீயமொத்து அடற்படை சூழக்
கைமுகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி 208 

பொருள்

வரத்தின் வலிமையினாலே, பரந்த முகமுடைய சிங்கேறு போன்ற அவன், கொடுமை மிக்க படைகளோடு யானை முகம் படைத்த கஜாசுரன், தேவலோகத்தை அழித்துப்,  புலவர்களை வருத்திக் கொண்டிருந்தான். 

சொற்பொருள்

வரம்பெறு கின்ற - வரத்தின்;
வலிமையினாலே - வலிமையினாலே;
ஐமுக - பரந்த முக;
சீயமொத்து - சிங்கேறு;
அடற்படை சூழக் - கொடுமை மிக்க படைகளோடு;
கைமுகம் படைத்த கயமுகத்து அவுணன் - யானை முகம் படைத்த அரக்கன்;
பொன்னுலகு அழித்து - தேவலோகத்தை அழித்து;
புலவரை வருத்தி - புலவர்களை வருத்தி; 

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி 
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங் 
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி 212 

பொருள்

பூலோகத்தவரைத் துன்புறுத்திக் கொடிய கருமங்கள் செய்யும் அரக்கனின் கொடுமையைப் பார்த்து மனம் வருந்தி வச்சிராயுதத்தை உடைய இந்திரனும் தேவர்களும் நீல கண்டத்தையுடைய சிவனைப் போற்றி ( வேண்டினர்). 

சொற்பொருள்

இந்நிலத் தவரை - பூலோகத்தவரை;
இடுக்கண் படுத்தி - துன்புறுத்தி;
கொடுந்தொழில் புரியுங் - கொடிய கருமங்கள் செய்யும்;
கொடுமைகண்டு - கொடுமையைப் பார்த்து;
ஏங்கி - மனம் வருந்தி;
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் - குலிச படையுடைய (வச்சிராயுதம்) இந்திரனும்;
அமரருங் - தேவர்களும்;
கறைபடு கண்ட - நீல கண்டத்தையுடைய;
கடவுளைப் போற்றி - சிவனைப் போற்றி; 

முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன்
அஞ்சலீர் என்று அவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி 
ஆனை மாமுகத்து அவுணனொடு அவன்தன் 216 

பொருள்

முறையிடக் கேட்ட திரிபுரம் எரித்த சிவன் பயப்படாதீர் என்று அவர்க்கு அபயங் கொடுத்தார். பின்னர் அவர் ஐந்து கரங்களையுடைய யானை முகத்துப் பிள்ளையாரைப் பார்த்து, யானை முகத்துக் கஜாசுரனோடு; 

சொற்பொருள்

முறையிடக் கேட்டு - முறையிடக் கேட்ட;
முப்புரம் எரித்தோன் - திரிபுரம் எரித்த சிவன்;
அஞ்சலீர் என்று - பயப்படாதீர் என்று;
அவர்க்கு - அவர்க்கு;
அபயங் கொடுத்தே - அபயங் கொடுத்தார்;
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை - பின்னர் அவர் ஐந்து கரங்களையுடைய யானை முகத்துப் பிள்ளையாரை;
நோக்கி - பார்த்து;
ஆனை மாமுகத்து - யானை முகத்து;
அவுணனோடு அவன்தன் - கஜாசுரனோடு; 


ஞாழல்


சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது 
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி 
வென்றுவா என்று விடை கொடுத்து அருள 
ஆங்கு அவன் தன்னோடு அமர்பல உடற்றிப் 220 

பொருள்

மலை போல் வளர்ந்த பூதங்களைப் படையாகத் திரட்டி (அவனுடைய) சேனைகள் முழுவதும் அழிந்திடப் போர் செய்து, வென்றுவா என்று விடை கொடுத்து அருள, பிள்ளையாரும் பல போர்கள் செய்தார். 

சொற்பொருள்

சேனைகள் முழுவதும் - சேனைகள் முழுவதும்;
சிந்திடப் பொருது - அழிந்திடப் போர் செய்து;
குன்றுபோல் வளர்ந்த - மலை போல் வளர்ந்த;
குறட்படை கூட்டி - பூதங்களைப் படையாகத் திரட்டி;
வென்றுவா என்று - வென்றுவா என்று;
விடை கொடுத்து அருள - விடை கொடுத்து அருள;
ஆங்கு அவன் தன்னோடு - அங்கு கஜாசுரனோடு;
அமர்பல உடற்றிப் - பல போர்கள் செய்து, 

பாங்குறும் அவன்படை பற்று அறக் கொன்றபின்
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றை வெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற் 224 

பொருள்

நன்னெறியற்ற அவன்படை முற்றாக அழிந்தபின், சினங்கொண்டு தேரில் ஏறி கரிய முகத்தை உடைய கயமுகாசுரன் மேல் ஒற்றை வெள்ளைக் கொம்பை முறித்து அவன் உடம்பில்; 

சொற்பொருள்

பாங்குறும் - நன்னெறியற்ற;
அவன்படை - அவன்படை;
பற்று அறக் கொன்றபின் - முற்றாகக் கொன்றபின்;
தேர்மிசை ஏறி - தேரில் ஏறி;
சினங்கொடு - சினங்கொண்டு;
செருவிற் -  போரில்;
கார்முகம் வளைத்த - கரிய முகத்தை உடைய;
கயமுகாசுரன் மேல் - கயமுகாசுரன் மேல்;
ஒற்றை வெண் - ஒற்றை வெள்ளை;
மருப்பை ஒடித்து - கொம்பை முறித்து;
அவன் உரத்திற் - அவன் உடம்பில்; 

குறிப்பு

இந்தப்பாடலின்படி விநாயர் கயமுகாசுரனைக் கொல்வதற்காக ஒரு கொம்பை ஒடித்தார். ஒற்றைக் கொம்பைப் பற்றி வேறு ஒரு கதையும் உண்டு. வியாசர் மகாபாரதம் எழுத முற்படும்போது விநாயகரை எழுத்தாளராக வேண்டினார். விநாயகர் ஒரு தந்தத்தை ஒடித்து அதை எழுத்தாணியாகப் பாவித்து மகாபாரதத்தை எழுதினார் என்பது மற்றக் கதை. 

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே 
சோர்ந்து அவன் வீழ்ந்து துண்ணென எழுந்து 
வாய்ந்தமூ டிகமாய் வந்து அவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி 228 

பொருள்

அவன் மேல் ஏவினார். இரத்தப் பெருக்கு மேலிட்டு, அவன் சோர்ந்து வீழ்ந்து, திடீரென எழுந்து, எலி உருவம் எடுத்து மீண்டும் போருக்கு முற்பட்டான். வந்த எலியைத் தன் வாகனமாக்கிக் கொண்டார். 

சொற்பொருள்

குற்றிட எறிந்தான் - அவன் மேல் ஏவினார்;
குருதிசோர்ந் திடவே - இரத்தப் பெருக்கு மேலிட்டு; 
சோர்ந்து அவன் - அவன் சோர்ந்து;
வீழ்ந்து - வீழ்ந்து;
துண்ணென எழுந்து - திடீரென எழுந்து;
வாய்ந்த மூடிகமாய் வந்து - எலி உருவம் எடுத்து (மூடிகம் - மூஷிகம்);
அவன் பொரவே - அவன் போருக்கு முற்பட;
வந்த மூடிகத்தை - வந்த எலியை;
வாகனம் ஆக்கி - தன் வாகனமாக்கிக்கொண்டார். 

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் 
எறிந்தவெண் மருப்பு அங்கு இமைநொடி அளவிற்
செறிந்தது மற்றவன் திருக்கரத் தினிலே 
வெல்லவைக் கதிர்வேல் விழிப்படைத்து அருளும் 232 

பொருள்

எம் தந்தை விநாயகன் அப்பால் அவ்வாகனத்தில் ஏறினன் எறிந்தவெண் கொம்பு அங்கு இமைநொடி அளவில் அவர் திருக்கரத்தினிலே வந்து சேர்ந்தது. வெற்றிகொண்டு கதிர்வேல் விழிப்படைந்து அருளும், 

சொற்பொருள்

எந்தை விநாயகன் - எம் தந்தை விநாயகன்;
ஏறினன் இப்பால் - அப்பால் அவ்வாகனத்தில் ஏறினன்;
எறிந்தவெண் மருப்பு - எறிந்தவெண் கொம்பு;
அங்கு – அங்கு;
இமைநொடி அளவிற் - இமைநொடி அளவில்;
செறிந்தது - வந்து சேர்ந்தது;
மற்றவன் திருக்கரத் தினிலே - அவர் திருக்கரத்தினிலே;
வெல்லவைக் - வெற்றிகொண்டு;
கதிர்வேல் - கதிர்வேல்;
விழிப்படைத்து - விழிப்படைந்து;
அருளும்- அருளும்; 

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஓகையோடு எழுந்து அங்கு உயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற் 
கருச்சங் கோட்டிற் கயல்கமுகு ஏறுந் 236 

பொருள்

வல்லவையை தன் மனைவியாக மணந்து கொன்டு மகிழ்வோடு எழுந்து அங்கு படைகள் சூழ வெற்றிமாலை சூடி வரும்வழியில் கரிய வரி உடைய கயல் மீன்கள், கமுகு உயரம் வரை துள்ளி ஏறுவதை விநாயகர் கண்டார்; 

சொற்பொருள் 

வல்லவை தனை - வல்லவையை;
தன் - தன்;
மனை என - மனைவியாக;
மணந்தே - மணந்து கொன்டு;
ஓகையோடு - மகிழ்வோடு;
எழுந்து - எழுந்து;
அங்கு - அங்கு;
உயர்படை சூழ - படைகள் சூழ;
வாகையும் - வெற்றிமாலை;
புனைந்து - சூடி;
வரும்வழி தன்னிற் - வரும்வழியில்;
கருச்சங் கோட்டில் - கரிய வரி உடைய;
கயல் - கயல் மீன்கள்;
கமுகு - கமுகு உயரம் வரை;
ஏறுந் - துள்ளி ஏறும்; 

திருச்செங்காட்டிற் சிவனை அர்ச் சித்துக்
கணபதீச் சரம் எனுங் காரண நாமம்
பணபதி புகழ்தரு பதிக்கு உண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமனம் மகிழ 240 

பொருள்

திருச்செங்காட்டில் பணபதி என்னும்புகழ் பெற்ற திருத்தலத்தை உண்டாக்கி அங்கு சிவனை அவர் அர்ச்சித்தார். அவர்அர்ச்சித்த தலம் அவர் வணங்கியதனால் கணபதீச்சரம் என்னும் காரணப் பெயர் பெற்றது. சிவனும் பார்வதியும் மனம் மகிழ்ந்து, 

சொற்பொருள்

திருச்செங்காட்டிற் - திருச்செங்காட்டில்;
சிவனை அர்ச்சித்துக் - சிவனை அர்ச்சித்து;
கணபதீச்சரம் எனுங் - கணபதீச்சரம் என்னும்;
காரண நாமம் - கணபதி வணங்கியதனால் கணபதீச்சரம் என்னும் காரணப் பெயருடைய; 
பணபதி – ஒரு திருத்தலத்தின் பெயர்;
புகழ்தரு - புகழ் பெற்ற;
பதிக்கு உண்டாக்கி - திருத்தலத்தை உண்டாக்கி;
சங்கரன் பார்ப்பதி - சிவனும் பார்வதியும்;
தனிமனம் மகிழ – மனம் மகிழ்ந்து; 

 இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி 
இணங்கிய பெருமை பெற்று இருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர்கந் தருவர் 244 

பொருள்

அன்புடன் இங்குவந்து அடைந்த பின்னர் தேவ கணங்களுக்கு விநாயகரை அரசனாய் முடி சூட்டினர். அப்படி அங்கே இருக்கும்போது தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தருவர்கள்; 

சொற்பொருள்

இங்குவந்து - இங்குவந்து;
அன்புடன் - அன்புடன்;
எய்திய பின்னர் - அடைந்த பின்னர்;
கணங்களுக்கு - தேவ கணங்களுக்கு;
அரசாய் - அரசனாய்;
கதிர்முடி சூட்டி - முடி சூட்டினர்;
இணங்கிய பெருமை பெற்று - அங்கு பெருமை பெற்று;
இருந்திட ஆங்கே - அங்கே இருக்கும்போது;
தேவர்கள் - தேவர்கள்;
முனிவர் - முனிவர்;
சித்தர் - சித்தர்;
கந்தருவர் - இசைவல்ல தேவகுலத்தார்; 

ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதமுறை

யாவரும் வந்து இவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகர்க்கு உரிய விரதம் என்று எண்ணி 248 

பொருள்

(ஆகிய) எல்லோரும் வந்து அவருக்குத் தொண்டு செய்தார்கள்; அதிகமாகப் பேசப்படும் ஆவணி மாத வளர் பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர்க்கு உரிய விரதம் என்று தீர்மானித் தார்கள்; 

சொற்பொருள்

யாவரும் வந்து - எல்லோரும் வந்து; 
இவன் ஏவல் செய்திடுநாள் - அவருக்குத் தொண்டு செய்தார்கள்;
அதிகமாய் உரைக்கும் - அதிகமாகப் பேசப்படும்;
ஆவணித் திங்களின் - ஆவணி மாதத்தில்
மதிவளர் பக்கம் - வளர் பிறையில்; 
வந்திடு - வரும்;
சதுர்த்தியில் - சதுர்த்தியில் ( பூர்வபக்கத்துக்குப் பின் நான்காவது நாள்);
விநாயகர்க்கு உரிய விரதம் - விநாயகர்க்கு உரிய விரதம்;
என்று எண்ணி - என்று தீர்மானித்து;  

மனாதிகள் கழித்து மரபொடு நோற்றார் 
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெறுநாள்
ஒப்பரும் விரதத்து உறும் ஒரு சதுர்த்தியில் 
நோற்றுநற் பூசை நுடங்காது ஆற்றிப் 252 

பொருள்

மனப் புலன்களை நீக்கி முறைப்படி நோற்றனர். இப்படி நோற்றுக் குறிப்பிட்ட திதியில் ஒப்பற்ற சதுர்த்தி விரதத்திற்குரிய நாளில் பூசை தவறாமல் செய்தனர். 

சொற்பொருள்

மனாதிகள் கழித்து - மனப் புலன்களை நீக்கி;
மரபொடு நோற்றார் - முறைப்படி நோற்றனர்;
இப்படி நோற்றிட்டு - இப்படி நோற்று;
எண்ணிய பெறுநாள் - குறிப்பிட்ட சதுர்த்தித் திதியில்;
ஒப்பரும் விரதத்து - ஒப்பற்ற விரதத்திற்குரிய;
உறும் ஒரு சதுர்த்தியில் - சதுர்த்தியில்;
நோற்றுநற் - நோற்று;
பூசை நுடங்காது ஆற்றிப் - பூசை தவறாமல் செய்து; 

போற்றிசெய் திட்டார் புலவர் ஐங்கரனை 
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான் 
அனைவரும் கைதொழுது அடிஇணை போற்ற 256 

பொருள்

புலவர்கள் போற்றினர், ஐந்து கரங்களையுடைய விநாயகரை மணம் நிறைந்த பூக்களைத் தூவி வணங்கினர். தேவர்கள் முன் மலங்கள் அற்ற குமரர் நடனம் ஆடினார். அப்போது அனைவரும் கைதொழுது அவர் இரு பாதங்களையும் போற்றினர். 

சொற்பொருள்

போற்றி செய்திட்டார் புலவர் - புலவர்கள் போற்றினர்;
ஐங்கரனை - ஐந்து கரங்களையுடைய; 
மருமலர் தூவும் - மணம் நிறைந்த பூக்களைத் தூவி;
வானவர் முன்னே - தேவர்கள் முன்;
நிருமலன் குமரன் - மலங்கள் அற்ற குமரர்;
நிருத்தம் புரிந்தான் - நடனம் ஆடினார்;
அனைவரும் கைதொழுது - அனைவரும் கைதொழுது;
அடிஇணை போற்ற - அவர் இரு பாதங்களையும் போற்றினர்; 

நர்த்தன கணபதி 


சந்திரன் செருக்கு

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்தகாத் திரமும் 
தாழ்த்துளைக் கையுந் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் 260 

பொருள்

வளைந்த வீரக்கல் அணிந்த சந்திரன் செருக்குற்று அதனால்,பெட்டி போன்ற வயிறும், பெரிய உடலும், துளை உள்ள துதிக்கையையும், சுளகு போன்ற செவியும் உடைய விநாயகனைப் பார்த்து நகைத்தான். யானை முகக் கடவுளும், 

சொற்பொருள்

வனைகழற் சந்திரன் வீரக்கழல் - வளைந்த வீரக்கல் அணிந்த சந்திரன்;
மனச்செருக்கு அதனால் - செருக்குற்று அதனால்;
பேழைபோல் வயிறும் -  பெட்டி போன்ற வயிறும்;
பெருத்தகாத் திரமும் - பெரிய உடலும்;
தாழ்த்துளைக் கையுந் - துளை உள்ள துதிக்கையையும்; 
தழைமுறச் செவியுங் - சுளகு போன்ற செவியும் (முறம் - சுளகு);
கண்டனன் – பார்த்து;
நகைத்தான் - நகைத்தான்;
கரிமுகக் கடவுளும் - யானை முகக் கடவுளும்; 

கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி 
என்னைக் கண்டு இங்கு இகழ்ந்தனை சிரித்தாய் 
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற் 
பழியொடு பாவமும் பலபல விதனமும் 264 

பொருள்

பிள்ளையார் கோபம் கொண்டார். சந்திரனை நோக்கி இங்கு என்னைப் பார்த்து இகழ்ந்து சிரித்தாய். இத்தினத்தில் உன்னைக் கண்டவர் சொல்லும் பொழுது பழியும் பாவமும், பல துன்பங்களும் (அடைவர்); 

சொற்பொருள்

கொண்டனன் சீற்றங் - கோபம் கொண்டார்;
குபேரனை நோக்கி - சந்திரனை நோக்கி;
என்னைக் கண்டு இங்கு - இங்கு என்னைப் பார்த்து;
இகழ்ந்தனை சிரித்தாய் - இகழ்ந்து சிரித்தாய்;
உன்னைக் கண்டவர் - உன்னைக் கண்டவர்;
உரைக்கும் இத்தினத்திற் - இத்தினத்தில் ( சதுர்த்தியில்);
பழியொடு பாவமும் - பழியும் பாவமும்;
பலபல விதனமும் - பல துன்பங்களும்; 

அழிவும் எய் துவரென்று அசனிபோற் சபித்தான்
விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக் 
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற் 
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள் 268 

பொருள்

அழிவு அடைவார்களென்று இடி போல் சபித்தார். தேவர்கள் எல்லோரும் மனம் வருந்தி, கடைக்கண் அருள் செய்யும் கடவுள் இத் தினத்தில் கொடிய கோபம் கொண்டார். அந்நாள், 

சொற்பொருள்

அழிவும் எய் துவரென்று - அழிவு அடைவார்களென்று;
அசனிபோற் சபித்தான் - இடி போல் சபித்தான்;
விண்ணவர் எல்லாம் - தேவர்கள் எல்லோரும்;
மிகமனம் வெருவிக் - மனம் வருந்தி;
கண்ணருள் - கடைக்கண் அருள்;
கூருங் கடவுள் - செய்யும் கடவுள்;
இத் தினத்தில் - இத் தினத்தில்;
கோரவெஞ் சினமிக- கொடிய கோபம்;
கொண்டனன் அந்நாள் - கொண்டான். அந்நாள்; 

குறிப்பு

[நாலாம் பிறை பார்த்தால் தீங்கு விளையும் என்று இப்பொழுதும் ஒரு ஐதீகம் உண்டு.]                                                                                                                                                                                              சதுர்த்தி விரதம்

மார்கழித் திங்கள் மதிவளர் பக்கஞ் 
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார் 
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்  272 

பொருள்

மார்கழி மாதத்தில் வளர்பிறை பட்சத்தில் சதய நட்ஷத்திரத் தினத்தில் சட்டிவிரதம் நல்லது என்று மனதில் நினைத்துத் தேவர்கள் எல்லோரும் நோற்றனர். பூவுலகத்தில் உள்ளவர்கள் மேற்சொல்லிய விரதத்தினை;

சொற்பொருள் 

மார்கழித் திங்கள் - மார்கழி மாதத்தில்;
மதிவளர் பக்கஞ் - வளர்பிறை பட்சத்தில்;
சதயந் தொட்ட – சதய நட்ஷத்திரத் தினத்தில்;
சட்டிநல் விரதமென்று - சட்டிவிரதம் நல்லது என்று;
இதயத்து எண்ணி -  மனதில் நினைத்து 
யாவரும் நோற்றார் - தேவர்கள் எல்லோரும் நோற்றனர்;
இப்புவி மாந்தர் - பூவுலகத்தில் உள்ளவர்கள்;
இயம்பிய விரதம் - மேற்சொல்லிய விரதத்தினை;  

வைப்புடன் நோற்ற வகை இனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத் துதித்த தருமனும்
இளைய தம்பியர் நால்வருந்
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி 276 

பொருள்

முறைப்படி நோற்ற முறையை இனி சொல்வோம். குருமாரில் சிறந்தவரும், முடி அணிந்தவரும், குருகுலத்தில் பிறந்தவரும் ஆகிய தருமனும் அவனுடைய இளைய தம்பியர் நால்வரும் தேவகியின் மகனான கிருஷ்ணரின் முகத்தைப் பார்த்து;

சொற்பொருள்

வைப்புடன் நோற்ற - முறைப்படி நோற்ற;
வகை இனிச் சொல்வாம் - முறையை இனி சொல்வோம்;
குருமணி – குருமாரில்  சிறந்தவரும்;
முடிபுனை - முடி அணிந்த;
குருகுலத் துதித்த – குருகுலத்தில் பிறந்த; 
தருமனும் - தருமனும்;
இளைய தம்பியர் நால்வரும் - அவனுடைய இளைய தம்பியர் நால்வரும்;
தேவகி மைந்தன் - தேவகியின் மகனான கிருஷ்ணனின்;
திருமுகம் நோக்கி - முகத்தைப் பார்த்து; 

எண்ணிய விரதம் இடையூறு இன்றிப் 
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ்
செருவினில் எதிர்த்த செறுநரை வென்று 
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 280 

பொருள்

நினைத்த விரதம் தடங்கல் இல்லாமல் நோற்ற உடனேயே பலன் கிடைக்கக் கூடியதும், போரில் எதிர்த்த எதிரிகளை வென்று, மணம் நிறைந்த பூக்கள் சூடிய தோள்களில் வெற்றி வாகை சூடவும்; 

சொற்பொருள்

எண்ணிய விரதம் - நினைத்த விரதம்;
இடையூறு இன்றிப் - தடங்கல் இல்லாமல்;
பண்ணிய பொழுதே - நோற்ற உடனேயே;
பலிப்பு உண்டாகவுஞ் - பலன் கிடைக்கக் கூடியதும்; 
செருவினில் எதிர்த்த - போரில் எதிர்த்த ;
செறுநரை வென்று - எதிரிகளை வென்று;
மருமலர்ப் புயத்தில் - மணம் நிறைந்த பூக்கள் சூடிய தோள்களில்;
வாகை சூடவும் - வெற்றி வாகை சூடவும் (சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூடுவர்.) 

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை 
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டளி துதையும் பசுந்துழாய் மார்பனுங் 
கேட்டருள் வீர் எனக் கிளத்துதல் உற்றான் 284 

பொருள்

“எந்தத் தெய்வத்தை வணங்கி, எவ்விரதத்தை அனுட்டித்து வழிபட்டால் (முன்னே கூறியவை) நமக்குக் கிட்டும் என்று சொல்லவும்” என்று வேண்ட, இசை பாடும் வண்டுகள் மொய்க்கும் பசிய துளசி மாலை அணிந்த மார்பை உடையவனும் ( கிருஷ்ணன்), “சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொல்லத் தொடங்கினான். 

சொற்பொருள்

எந்தத் தெய்வம் - எந்தத் தெய்வத்தை வணங்கி;
எவ்விர தத்தை - எவ்விரதத்தை அனுட்டித்து;
வந்தனை செய்யில் - வழிபட்டால்;
வருநமக்கு உரையென - முன்னே கூறியவை நமக்குக் கிட்டும் என்று சொல்லவும் என்று வேண்ட;
பாட்டளி துதையும் - இசை பாடும் வண்டுகள் மொய்க்கும்;
பசுந்துழாய் - பசிய துளசி மாலை அணிந்த;
மார்பனும் - மார்பை உடையவனும்;
கேட்டருள்வீர் என - சொல்கிறேன் கேளுங்கள் என்று;
கிளத்துதல் உற்றான் – சொல்லத் தொடங்கினான்;  

அக்குநீ றணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி 
ஓடவைத் திடும்பொன் ஒத்தொளி விளங்குங்
கோடி சூரியற்போற் குலவிய மேனியன் 288 

பொருள்

உத்திராட்சத்தையும் திருநீற்றயும் அணியும் சிவன் அளித்த முதற் பிள்ளை, விக்கினங்களைத் தீர்க்கும் விநாயக மூர்த்தி, உருகி ஓடும் பொன்போல் பிரகாசிக்கும், ஒளி விளங்கும் கோடி சூரியர் போல் ஒளி வீசுகின்றவருமான விநாயகர் புகழ்ந்து பாராட்டப்பட்ட மேனி உடையவர்; 

சொற்பொருள்

அக்கு - உத்திராட்சத்தையும்;
நீறணியும் - திருநீற்றயும் அணியும்;
அரன் - சிவன்;
முதல் அளித்தோன் - அளித்த முதற் பிள்ளை;
விக்கினந் தீர்க்கும் - விக்கினங்களைத் தீர்க்கும்;
விநாயக மூர்த்தி - விநாயக மூர்த்தி;
ஓடவைத் திடும்பொன் - உருகி ஓடும் பொன்போல் பிரகாசிக்கும்;
ஒத்தொளி விளங்குங் - ஒளி விளங்கும்;
கோடி சூரியற்போற் - கோடி சூரியர் போல் பிரகாசிப்பவர்;
குலவிய - புகழ்ந்து பாராட்டப்பட்ட;
மேனியன்- மேனியன்; 

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புயம் உடையோன் 
சர்வ ஆபரணமுந் தரிக்கப் பட்டவன் 
உறுமதிக் குழவிபோல் ஒரு மருப்பு உடையோன் 292 

பொருள் 

மதம் கொண்ட யானையின் முகத்தையும் பெரிய உடம்பினையும் மலைக் குன்று போன்ற நான்கு தோள்களையும் எல்லா ஆபரணங்களையும், பிறைச் சந்திரன் போல வளைந்த ஒரு கொம்பையும் உடையவர்; 

சொற்பொருள்

கடகரி - மதம் பெருக்கும் யானையின்;
முகத்தோன் -  முகத்தையுடையவன்;
காத்திரம் பெருத்தோன் - பெரிய உடம்பினை உடையவன்; 
தடவரை போலுஞ் - மலைக் குன்று போன்ற; 
சதுர்ப்புயம் உடையோன் - நான்கு தோள்களை உடையவர்; 
சர்வ ஆபரணமும் - எல்லா ஆபரணங்களும்; 
தரிக்கப் பட்டவன் - அணிந்தவர்;
உறுமதிக் குழவிபோல் - பிறைச் சந்திரன் போல வளைந்த;
ஒரு மருப்பு உடையோன் - ஒரு கொம்பு உடையோன்; 


செண்பகம்

ஒரு கையில் தந்தமும் ஒரு கையிற் பாசமும்
ஒருகையில் மோதகமும் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறுநினை வின்படி 
சித்திசெய் வதனாற் சித்திவி நாயகன் 296 

பொருள்

ஒரு கையில் கொம்பும், இன்னொரு கையில் பாசமும், இன்னொரு கையில் மோதகமும், மற்றக் கையில் செபமாலையும் வைத்துக்கொண்டிருக்கும் விநாயகப்பெருமான் வேண்டியவர் வேண்டியவாறு பலன் தருவதினால், அவரை நாம் சித்திவி நாயகர் என்று அழைக்கின்றோம். 

சொற்பொருள்

ஒரு கையில் தந்தமும் - ஒரு கையில் கொம்பும்;
ஒரு கையிற் பாசமும் - ஒரு கையிற் பாசமும்;
ஒருகையில் மோதகம் - ஒருகையில் மோதகமும்;
ஒருகையில் - ஒருகையில்;
செப்பஞ்செய் உத்தம மாலையோன் - செபஞ்செய்வதற்கு வேண்டிய செபமாலையோன்;
உறுநினை வின்படி - வேண்டியவாறு;
சித்திசெய்வதனால் - சித்தி செய்வதனால்;
சித்திவி நாயகன் - சித்திவி நாயகன் என்று அழைக்கப்படுகின்றார்; 

என்று இமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தருந்திரு நாமம் படைத்தோன்
புரவலர் காணப் புறப்படும் போதுஞ் 
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 300 

பொருள்

தேவர்களும் பூலோகத்தில் உள்ளவர்களும் வணங்கப் பலன் தருகின்றதனால் சித்திவி நாயகன் என்ற பெயரை அவர் பெற்றார். அரசனை அல்லது வள்ளல்களை பார்ப்பதற்குப் புறப்படும் போதும், போரில் யுத்தம் செய்திடும் போதும், 

சொற்பொருள்

என்று - என்று;
இமையவரும் - தேவர்களும்;
யாவருந் - பூலோகத்தில் உள்ளவர்களும்;
துதிப்ப - வணங்க;
நன்றி தருந் - பலன் தருகின்றதனால்;
திருநாமம் - சித்திவி நாயகன் என்ற பெயரை;
படைத்தோன் - பெற்றார்;
புரவலர் - அரசனை அல்லது வள்ளல்களை;
காணப் - பார்ப்பதற்கு;
புறப்படும் போதும் - புறப்படும் போதும்;
செருவினில் - போரில்;
யுத்தஞ் செய்திடும் போதும் - யுத்தம் செய்திடும் போதும்; 

                                   (ஏடு துவக்குதல்)

வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும்
உத்தியோ கங்கள் உஞற்றிடும் போதும் 
ஆங்கு அவன் தன்னை அருச்சனை புரிந்தால் 
தீங்கு உறாது எல்லாஞ் செயம் உண்டாகும் 304 

பொருள்

சிறு பிள்ளைகள் படிக்க ஆரம்பிக்கும் போதும், காரியங்கள் செய்யும் போதும் அருச்சனை செய்தால் தீங்கு ஏற்படாது எல்லாஞ் வெற்றி யாகும். 


சொற்பொருள்

வித்தியாரம்பம் - படிக்கத் தொடங்கல் (ஏடு துவக்கம்);
விரும்பிடும் போதும் - விரும்பும் போதும்;
உத்தியோகங்கள் -  காரியங்கள்;
உஞற்றிடும் போதும் - செய்யும் போதும்;
ஆங்கு - அங்கு;
அவன் தன்னை - விநாயகரை;
அருச்சனை புரிந்தால் - அருச்சனை செய்தால்;
தீங்கு உறாது - தீங்கு ஏற்படாது;
எல்லாஞ் செயம் உண்டாகும் - எல்லாம் வெற்றி யாகும்; 

கரதலம் ஐந்துடைக் கணபதிக்கு உரிய 
விரதம் ஒன்று உளது அதை விரும்பிநோற் றவர்க்குச் 
சந்ததி தழைத்திடுஞ் சம்பத்து உண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும் 308 

பொருள்

கைகள் ஐந்து உடைய கணபதிக்கு உரிய விரதம் ஒன்று உண்டு. அதை விரும்பி நோற்றவர்க்குச் சந்ததி சிறப்படையும், செல்வம் உண்டாகும், மனதில் நினைத்தவை கைகூடும்.  

சொற்பொருள்

கரதலம் - கைகள்;
ஐந்துடை - ஐந்து உடைய;
கணபதிக்கு - கணபதிக்கு;
உரிய விரதம் - உரிய விரதம்;
ஒன்று உளது - ஒன்று உண்டு;
அதை - அதை;
விரும்பி நோற்றவர்க்கு - விரும்பி நோற்றவர்க்கு;
சந்ததி தழைத்திடும் - சந்ததி சிறப்படையும்;
சம்பத்து உண்டாம் - செல்வம் உண்டாகும்;
புந்தியில் - மனதில்;
நினைந்த பொருள் - நினைந்த பொருள்;
கைகூடும் - கிடைக்கும்; 

மேலவர் தம்மையும் வென்றிட லாம் எனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு 
நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும் 
புகர்முகக் கடவுளைப் பூசைசெய் விதமும் 312 

பொருள்

தேவர்களையும் வென்றிடலாம் என்று தேவகி மைந்தன் (கண்ணன்) சொன்னார். சொல்வதற்கும் அரிய மகிமையுடைய விநாயகர் சஷ்டி விரதத்தையும் அதனை அனுட்டிக்கும் முறையையும் பின்பு சொன்னார்.

சொற்பொருள்

மேலவர் தம்மையும் வென்றிடலாம் - தேவர்களையும் வென்றிடலாம்;
என - என்று;
தேவகி மைந்தன் - தேவகியின் மைந்தனான கண்ணன்;
செப்பிடக் கேட்டு - சொல்லக் கேட்டு; 
நுவலரும் - சொல்ல முடியாத;
விரதம் - விரதம்;
நோற்றிடும் இயல்பும் - அனுட்டிக்கும் முறை; 
புகர்முகக் கடவுளை - யானை முகக்கடவுளை (புகர் முகம் - an elephant as having a spotted face );
பூசைசெய் விதமும் - பூசைசெய்யும் விதமும்; 

குறிப்பு

பூசைக் கிரியைகள் பஞ்சோபசாரம் (5 உபசாரங்கள்) தசோபசாரம்(10 உபசாரங்கள்) சோடச உபசாரம் (16 உபசாரங்கள்) எனப் பலவகைப்படும். பெரிய கோவில்களில் 16 உபசாரங்களைத்  தினமும் செய்வார்கள். சிறிய கோவில்களில் 16 உபசாரங்களை விசேஷ நாட்களிற் செய்வார்கள். மற்ற நாட்களின் வசதிக்கேற்ப 5 அல்லது 10 உபசாரங்களைச் செய்வார்கள். வீடுளிலும் இப்படியே 5 - 16 உபசாரங்களை வசதிக்கேற்பச் செய்யலாம். 

சோட (16) உபசார பட்டியல்:

ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டவம், தேனுமுத்திரை, பாத்தியம், அசமனீயம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பாணீயம், செபசமர்ப்பணம், ஆராத்திரிகை. 

சோடச பொருள்களின் பட்டியல்:

குடை, ஸ்தாபனம், பாத்யம் கொடுத்தல், ஆசனமளித்தல்,
அர்க்கியம், அபிஷேகம், வஸ்திரம், சந்தனம், புஷ்பாஞ்சலி
தூயதீபம், நைவேத்தியம், பலி போடுதல், ஹோமம், ஸ்ரீபலி,
கேயம் வாத்தியம், நர்த்தனம், உத்வாஸனம். 

விரித்து எமக்கு உரைத்திட வேண்டும் என்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்து உரை செய்வான்
தேருநீர் ஆவணித் திங்களின்
மதிவளர் பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின் 316 

பொருள்

விபரமாக எமக்குச் சொல்ல வேண்டும் என்று பஞ்சபாண்டவர்கள் கேட்கக் கண்ணன் விரிவாகக் கூறினார். இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆவணி மாதத்தில் பூர்வ பட்ஷத்தில் வரும் சதுர்த்தியில், 

சொற்பொருள்

விரித்து - விபரமாக;
எமக்கு - எமக்கு;
உரைத்திட வேண்டும் - சொல்ல வேண்டும்;
என்று - என்று;
இரப்ப – கேட்க;
வரைக்குடை கவித்தோன் - கண்ணன்;
வகுத்து - விரிவாக;
உரை செய்வான் - கூறினார்;
தேருநீர் - தெரிந்து கொள்ளுங்கள்;
ஆவணித் திங்களின் - ஆவணி மாதத்தில்;
மதிவளர் - வளர் பிறை;
பூர்வ பக்கம் - பூர்வ பட்ஷத்தில்;
புணர்ந்திடு - வரும்;
சதுர்த்தியின் - சதுர்த்தியில்; 


தாமரை

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து 
சந்தி வந்தனந் தவறாது இயற்றி 
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பக்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320 

பொருள்

விடியற்காலையில் முறைப்படி நீராடி காலையிலும் மாலையிலும் வணக்கம் (சந்தி வந்தனம் - இரவும் பகலும் சந்திக்கும் நேரம்,) தவறாது செய்யவேண்டும். அன்றய தினத்தில் விநாயகருக்கு அன்போடு அர்ச்சனை செய்யவேண்டும். 

சொற்பொருள்

முந்தும் - முன்;
புலரியின் - விடியல்;
முறைநீர் - முறைப்படி நீரில்;
படிந்து - மூழ்கி;
சந்தி வந்தனந் -  காலையிலும் மாலையிலும் வணக்கம் (சந்தி - இரவும் பகலும் சந்திக்கும் நேரம், காலையிலும் மாலையிலும் வரும்);
தவறாது - தவறாது;
இயற்றி - செய்து;
அத்தினம் அதனில் - அன்றய தினத்தில்;
ஐங்கரக் கடவுளைப் - ஐந்து கரங்களையுடைய கடவுளை;
பக்தியோடு - அன்போடு;
அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் - அர்ச்சனை செய்ய வேண்டும்; 

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்றன்
ஒள்ளிய அருள்திரு உருஉண் டாக்கிப் 
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் 
ஆசி(இ)லா மண்ணால் அமைத்தலும் தகுமால் 324 

பொருள்

வெள்ளியாலோ பொன்னாலோ செய்த அவருடைய ஒளியுள்ள கருணை கூர்ந்த உருவத்தை வீட்டில் வைத்துப் பூசிக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தூய்மையான மண்ணாலும் அவருடைய உருவத்தைச் செய்யலாம். 

சொற்பொருள்

வெள்ளியால் - வெள்ளியாலோ;
பொன்னால் - பொன்னாலோ;
விளங்கும் - விளங்கும்;
அவன்றன் - அவருடைய;
ஒள்ளிய – ஒளியுள்ள;
அருள் - கருணை;
திருஉரு - உருவத்தை;
உண் டாக்கி - செய்து
பூசனை புரிய - பூசிக்க;
புகன்றனர் - சொல்லியிருக்கிறார்கள்;
பெரியோர் - பெரியவர்கள்;
ஆசி(இ)லா - தூய்மையான;
மண்ணால் - மண்ணால்;
அமைத்தலும் - செய்தலும்;
தகுமால் - தகும்; 

குறிப்பு

சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம்,

பூசைசெய் திடும் இடம் புனிதமது ஆக்கி 
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகங் கோசிகங் கொடிவிதானித்து 
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி 328 

பொருள்

பூசைசெய்கின்ற இடத்தை துப்பரவாக்கி வாசமுள்ள பூமாலை தூக்கி, பட்டுச்சீலையினால் வெள்ளை கட்டி, குடத்தை நூலால் சுற்றி நிறைகுடம் வைக்கவேண்டும். 

சொற்பொருள்

பூசைசெய்திடும் இடம் - பூசைசெய்கின்ற இடத்தை;
புனிதமது ஆக்கி - துப்பரவு செய்து;
வாசமென் மலரின் - வாசமுள்ள மெல்லிய பூக்களால்;
மஞ்சரி தூக்கிக் - பூமாலை தூக்கி;
கோடிகம் - சீலை;
கோசிகம் - பட்டுச்சீலை;
கொடிவிதானித்து - வெள்ளை கட்டி;
நீடிய நூல்வளை - குடத்தை நூலால் சுற்றி;
நிறைகுடத்து இருத்தி - நிறைகுடம் வைத்து; 

விந்தை சேர் சித்தி விநாயகன் உருவைச் 
சிந்தையின் நினைந்து தியானம் பண்ணி 
ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம் 
வாகா ராச மனம் வரை கொடுத்து 332 

பொருள்

வினோதமான சித்தி விநாயகரின் உருவத்தை மனதில் தியானிக்க வேண்டும். ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம் என்னும் கிரிகைகளால் அவரை அந்த நிறைகுடத்தில் தங்க வைக்க வேண்டும். அதற்குப் பின் நீர் கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஆசமனம் வரையிலான எல்லா உபசாரங்களையும் செய்யவேண்டும். கால்கழுவக் கொடுக்கும் நீரும் இவ் வுபசாரத்தில் அடங்கும்.

சொற்பொருள் 

விந்தை சேர் - வினோதமான;
சித்தி விநாயகன் - சித்தி விநாயகன்;
உருவை - உருவத்தை;
சிந்தையில் - மனதில்;
நினைந்து - நினைத்து;
தியானம் பண்ணி - தியானம்;
ஆவாகனம் - ஆவாகனம், ஸ்தாபனம்,சந்நிதானம் என்னும் கிரிகைகளால் அவரை அந்த நிறைகுடத்தில் தங்க வைத்து; முதல் - அது முதலாக;
அர்க்கியம் - நீர் கொடுத்தல்;
பாத்தியம் - சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்;
வாகார் - அழகிய;
ஆசமனம் - மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல்;
வரை கொடுத்து - வரை கொடுத்து; 

ஐந்து அமிர் தத்தால் அபிடே கித்துக் 
கந்தஞ் சாத்திக் கணேசமந் திரத்தால் 
ஈசுர புத்திரன் என்னும்மந் திரத்தால் 
மாசு அகல் இரண்டு வத்திரஞ் சாத்திப் 336 

பொருள்

பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வாசனைத்திரவியம் சாத்தி, 'கணேஷாய நம', 'ஈசுரபுத்ராய நம' என்னும் மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குற்றமற்ற இரண்டு வஸ்த்திரம் சாத்தவேண்டும். 

சொற்பொருள்

ஐந்து அமிர் தத்தால் - பஞ்சாமிர்தத்தால்;
அபிடே கித்துக் - அபிஷேகம் செய்து;
கந்தஞ் சாத்திக் - வாசனைத்திரவியம் அல்லது சந்தனம்;
கணேச மந்திரத்தால் - 'கணேஷாய நம' என்னும்மந்திரம்;
ஈசுர புத்திரன் என்னும்மந் திரத்தால் - 'ஈசுரபுத்ராய நம' என்னும்மந்திரத்தால்;
மாசு அகல் - குற்றமற்ற;
இரண்டு வத்திரஞ் சாத்தி - இரண்டு வஸ்த்திரம் சாத்தி; 

பொருந்து உமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப் 
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே 340 

பொருள்

உமை மகனாகச் சொல்லும் 'உமாசுதாயனம' என்னும் மந்திரத்தை உச்சரித்து கருப்பூரத் தீபம் காட்டி, பசுமையான அறுகம்புல்லு சாத்தி, இருபத்தொரு விதமான இலைகளும் மலர்களும் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். 

சொற்பொருள்

பொருந்து - பொருந்து;
உமை சுதனாப் - உமை மகனாக;
புகலு மந்திரத்தால் - சொல்லும் 'உமாசுதாயனம' என்னும் மந்திரத்தை உச்சரித்து;
திருந்தும் - திருந்தும்;
பளிதத் தீபம் - கருப்பூரத் தீபம்;
கொடுத்து - காட்டி;
பச்சறுகு உடன் - பசுமையான அறுகம்புல்லு 
இருபத்தொரு விதமாக - இருபத்தொரு விதமான;
பத்திர புட்பம் - இலைகளும் மலர்களும்;
பலபல – பல;
கொணர்ந்தே - கொண்டுவந்து; 

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன் 
குமார குரவன் பாசஅங் குசகரன் 
ஏக தந்தன் ஈசுரன் புத்திரன் 
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் 344 

பொருள்

உமாசுதாயநம, கணபதியாயநம, கஜமுகாயநம, குமரகுருவேநம, பாசாங்குதார்யாயநம, ஏகதந்தாயநம, ஈசுரபுத்திராயநம, மூஷிகவாகனயநம, 

சொற்பொருள்

உமாசுதன் - உமாசுதாயநம (உமாதேவியின் மகன்);
கணாதிபன் - கணபதியாயநம (தேவகணங்களின் தலைவன்);
உயர்கரி முகத்தோன் - கஜமுகாயநம (யானை முகத்தையுடையவன்);
குமார குரவன் - குமரகுருவேநம (இளைய குரு);
பாசஅங் குசகரன் - பாசாங்குதார்யாயநம; (பாசக்கயிற்றினை கையில் வைத்திருப்பவன்);
ஏக தந்தன் - ஏகதந்தாயநம (ஒற்றைக்கொம்பை உடையவன்);
ஈசுரன் புத்திரன் - ஈசுரபுத்திராயநம (சிவனின் மகன்);
ஆகு வாகனன் - மூஷிகவாகனயநம (எலி வாகனன்);
அருள்தரு - அருள் செய்கின்ற;
விநாயகன் - விநாயகன்; 

சர்வகா ரியமுந் தந்து அருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி என்னும்நா மங்களால் 
ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்  348 

பொருள்

சர்வகார்யப்ரணாயநம (எல்லாவற்றயும் தந்து) அருள் செய்பவன் ஹேரம்பமூர்த்தியேநம (உதவியற்றவர்களைப் பாதுகாப்பவர்) என்னும் பெயர்களால் ( மந்திரங்களுடன்) ஆரம்பித்து அர்ச்சனை பண்ணி மோதகம் அப்பம் முதலிய பணி காரங்கள் படைக்க வேண்டும்.  

சொற்பொருள்

சர்வகா ரியமுந் தந்து - சர்வகார்யப்ரணாயநம (எல்லாவற்றயும் தந்து);
அருள் புரிவோன் - அருள் செய்பவன்;
ஏரம்ப மூர்த்தி - ஹேரம்பமூர்த்தியேநம (உதவியற்றவர்களைப் பாதுகாப்பவர்);
என்னும்நா மங்களால் - பெயர்களால்;
ஆரம் பத்துடன் - (மந்திரங்களுடன்) ஆரம்பித்து;
அர்ச்சனை பண்ணி - அர்ச்சனை பண்ணி;
மோதகம் - மோதகம்;
அப்பம் - அப்பம்;
முதற்பணி காரந் - முதலிய பணி காரங்கள் படைக்க வேண்டும். 

குறிப்பு

இந்நூலாசிரியர் மேலே சொல்லப்பட்ட விநாயகரின் பெயர்கள் சமஸ்கிருத மந்திரங்களின் மொழி பெயர்ப்பே. சமஸ்கிருதத்தில் சொல்லவேண்டும் என்கிற நியதி இல்லை. செய்யுளில் வரும் தமிழ் மந்திரங்களையே சொல்லி அர்ச்சிக்கலாம். 

தீதகல் மாங்கனி தீங்கத லிப்பழம் 
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு 
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் 
பருப்புநெய் பொரிக்கறி பால் தயிர் போனகம் 352 

பொருள்

நல்லினத்து மாங்கனி, இனிய வாழைக்கனி, பலாக்கனி, விளாங்கனி, மாதுளங் கனி, என்பவற்றோடு தேங்காய் (பருப்பு, நெய், பொரிக்கறி, பால், தயிர்) ஆகியவற்றுடன் அன்னம் படைக்கவேண்டும். 

சொற்பொருள்

தீதகல் மாங்கனி - நல்லினத்து மாங்கனி;
தீங்கதலிப்பழம் -  இனிய வாழைக்கனி;
வருக்கை - பலாக்கனி;
கபித்த - விளாம்பழம்;
மாதுளங் கனியொடு - மாதுளங் கனியோடு;
தரித்திடு – உண்ணும்;
நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் - நீண்ட ஓலை உடைய தென்னையில் காய்க்கும் மூன்று புடைப்பு உடைய தேங்காயும்;
பருப்பு - பருப்பு;
நெய் - நெய்;
பொரிக்கறி - புளியிடாமல் பொரித்த கறி;
பால் - பால்;
தயிர் - தயிர்;
போனகம் - (பருப்பு, நெய், பொரிக்கறி, பால் , தயிர்) ஆகியவற்றுடன் அன்னம்; 

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன் வைத்து
உருத்திரப் பிரிய என்று உரைக்கும்மந் திரத்தால்
நிருத்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து 
நற்றவர் புகன்றநா னான்கு உப சாரமும் 356 

பொருள்

விரும்பத்தக்க சுவை உடைய தீன்பண்டங்கள் பல விநாயகக் கடவுள் முன் நைவேத்தியம் வைத்து 'உருத்திரப் பிரியாயநம' என்ற மந்திரத்தைச் சொல்லி, பெரியோர்கள் சொல்லிய பதினாறு உபசாரங்களையும் செய்யவும். 

சொற்பொருள்

விருப்புள - விரும்பத்தக்க;
சுவைப்பொருள் - சுவை உடைய தீன்பண்டங்கள்;
மிகவும் - பல;
முன் வைத்து - முன் வைத்து;
உருத்திரப் பிரிய - உருத்திரப் பிரியாயநம  என்ற
மந்திரத்தைச் சொல்லி;
நிருத்தன் மகற்கு - நடனமாடும் சிவன் மகனுக்கு;
நிவேதனங் கொடுத்து - நைவேத்தியம் பண்ணி;
நற்றவர் -  பெரியோர்கள்;
புகன்றநா னான்கு - கூறிய பதினாறு;
உப சாரமும் - உப சாரங்கள் செய்யவும்;  

குறிப்பு 

[நானான்கு உபசாரம்= பதினாறு (4x4) உபசாரம் 

சோடச உபசாரங்களாவன :

1. ஆவாகனம் - இறைவனை எழுந்தருளும் படி அழைத்தல், 

2 தாபனம் - இறைவனை அருள் செய்யும் நிமிர்த்தமாகக் குறிப்பிட்ட மூர்த்தியில் - வைக்கப்பட்டிருக்கும் சிலை அல்லது கும்பத்தில் - எழுந்தருள வேண்டுதல், 

3.சந்நிதானம் - நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக வேண்டுதல்,

4. சந்நிரோதனம் - இறைவன் என்றும் கருணையோடு இருக்க வேண்டும் என்று வேண்டுதல், 

5. அவகுண்டவம் - விக்கிரகத்தைச் சுற்றி கவச மந்திரத்தால் மூன்று கவசம் உண்டாக்க வேண்டும். பூஜைக்குத் தடைகள் வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரை ஆகிய முத்திரைகளை பூஜை செய்தல், 

6. அபிஷேகம் - அபிஷேகப் பொருள்களால் அபிஷேகித்தல், 

7. பாத்தியம் - சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த 4 பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இடுதல், 

8. அசமனீயம் - ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைத்தல், 

9. அருக்கியம் - எள், நெல், தர்ப்பை, நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, யவை (Barley) ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுத்தல், 

10. புஷ்பதானம் - அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரித்தல்; 

11. தூபம் - சாம்பிராணி புகை போடுதல், 

12. தீபம் - துணி, பஞ்சு இவைகளில் திரி செய்து தீபம் ஏற்றுதல், 

13. நைவேத்தியம் - பல உணவுப்பொருட்களைப் படைத்தல்;

14. பாணீயம் - இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுத்தல், 

15. செபசமர்ப்பணம் - இறைவனின் மூல மந்திரத்தைச் சொல்லுதல், 

16. ஆராத்திரிகை. - மணி அடித்து ஆரத்தி செய்தல்; 

இப்படி 16 வகை உபசாரங்கள் ஆகமங்களில் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆலயங்களிலும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் என்ற அடிப்படையில் 6 வகையான உபச்சாரங்களே செய்யப்படுகின்றன. வீடுகளில் கால இட வசதிக்கேற்ப உபசாரங்களை அமைத்துக் கொள்ளலாம். இதைவிட குறைந்த அங்கங்களைக் கொண்ட தசோபசாரம், பஞ்சோபசாரம் என்னும் விதி முறைகளும் உண்டு . 

பத்து அங்கங்களைக் கொண்ட தசோபசாரம் 

ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்திரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனியம், அருக்கியம், புட்பதானம்.

இவை பத்தும் மேற்கூறிய 16 உபசாரங்களுள் அடங்கும். 

ஐந்து அங்கங்களைக் கொண்ட பஞ்சோபசாரம்

1. சுவாமி சிலை அல்லது படத்துக்குச் சந்தனமிடுதல்
2. பூக்கள் கொண்டு பூசித்தல்
3. தீபமேற்றிக் காட்டுதல்
4. தூபம் போடுதல்
5. நைவேத்தியம் (உணவு) படைத்தல்.

இப்படியான ஐந்து உபசாரங்களைத்தான் வீடுகளில் பூசை செய்யும் பெரும்பாலோர் கடைப்பிடிக்கின்றனர். 

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து 
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச் 
சந்தனம் முத்துத் தானந் தக்கிணை 360 

பொருள்

பூசையினால் விநாயகரின் மனம் மகிழச் செய்து, அந்தணர்களுக்கு ஆறு சுவையோடு அன்னதானம் செய்யவேண்டும். சந்தனம் கொடுத்து அவர்களுக்கு முத்துக்களைத் தக்ஷிணையாகக் கொடுக்கலாம். 

சொற்பொருள்

மற்றவன் - விநாயகன்;
திருவுளம் - மனம்;
மகிழ்ந்திடச் செய்து - மகிழ்வித்து;
எண்ணுந் தகுதி ­- கருதப்படக்கூடிய தகுதி உள்ள;
இருபிறப் பாளர்க்கு - அந்தணர்களுக்கு;
உண்அறு சுவைசேர் - அறு சுவையோடு;
ஓதனம் நல்கிச் - உணவு கொடுத்து;
சந்தனம் - சந்தனம் கொடுத்து;
முத்துத் தானந் - முத்துக்களைத் தானமாகக் கொடுத்து;
தக்கிணை - தக்ஷிணை; 

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகு விநாயகத் திருவுரு வத்தைத் 
தரித்தவத் திரத்துடன் தானமாக் கொடுத்து 
நைமித் திகம் என நவில் தரு மரபால் 364 

பொருள்

அந்தணர்களுக்குக் கொடுத்தபின் பூசகருக்கு விநாயகருக்குச் சாத்திய வஸ்திரத்தைத் தானமாக் கொடுப்பது நைமித்தியம் என்று சொல்லப்படும் ஒரு மரபாகும். 

சொற்பொருள்

அந்தணர்க்கு ஈந்திட்டு - அந்தணர்க்குக் கொடுத்து;
அருச்சகன் தனக்கு - பூசை செய்தவருக்கு;
திருத்தகு - பரிசுத்தம் பொருந்திய;
விநாயகத் திருவுருவத்தைத் - விநாயகருக்குச் சாத்திய;
தரித்தவத்திரத்துடன் - வஸ்திரத்தை;
தானமாக் கொடுத்து - தானமாக் கொடுத்து;
நைமித்திகம் - நைமித்தியம் ( நித்திய பூசைகளில் குறையேதும் இருப்பின் அதற்கு பிராயச்சித்தமாக செய்யப்படுவது நைமித்தியம். கோவில்களில் இது திருவிழா எனப்படும்);
என நவில் - என்று சொல்லப்படும்;
தரு மரபால் - மரபு முறைப்படி; 

இம்முறை பூசனை யாவர்செய் தாலும் 
எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர் 
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர் 
அரன் இவன் தன்னை முன் அர்ச்சனை பண்ணி 368 

பொருள்

இப்படி விநாயகருக்குப்  பூசை யார் செய்தாலும் எண்ணிய கருமம் எல்லாம் நிறைவேறும்; போரில் வெற்றி கிட்டும். சிவபெருமான் முன்னர் விநாயகரை வழிபட்டு, 

சொற்பொருள்

இம்முறை - இவ்வகையாக;
பூசனை - பூசை;
யாவர்செய் தாலும் - யார் செய்தாலும்;
எண்ணிய கருமம் - எண்ணிய கருமம்;
யாவையும் - எல்லாம்;
முடிப்பர் - நிறைவேறும்;
திண்ணிய -  நெருக்கடியான;
செருவிற் - போரில்;
செயம்மிகப் - பெரிய வெற்றி;
பெறுவர் - பெறுவர்;
அரன் - சிவன்;
இவன் தன்னை - விநாயகரை;
முன் - முன்பு;
அர்ச்சனை பண்ணி - அர்ச்சனை பண்ணி; 


பாதிரிப்பூ


புரம் ஒரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி 
விருத்திரா சுரனை வென்றுகொன் றிட்டான் 
அகலிகை இவன் தாள் அர்ச்சனை பண்ணிப் 372 

பொருள்

சிவன் முப்புரங்களைப் பொடியாகும்படி எரித்தார். சிவன் விநாயகரை வழிபட்டு விருத்திராசுரனை வெற்றி கொண்டார். அகலிகை விநாயகரை வழிபட்டு,

சொற்பொருள்

புரம் ஒரு மூன்றும் - முப்புரங்களை;
பொடிபட எரித்தான் - பொடியாகும்படி எரித்தார்;
உருத்திரன் - சிவன்;
இவனை உபாசனை பண்ணி - விநாயகரை வழிபட்டு;
விருத்திரா சுரனை - விருத்திராசுரனை;
வென்றுகொன் றிட்டான் - வெற்றி கொண்டார்;
அகலிகை அவன் தான் - அகலிகை விநாயகரை;
அர்ச்சனை பண்ணிப் - வழிபட்டு; 

குறிப்பு

[இந்திரன் விருத்திராசுரன் போர்! - சாந்திபர்வம் பகுதி – 281

அறவோனும், விஷ்ணு பக்தனும், உபநிஷத்துகள் மற்றும் வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதால் கிட்டும் உண்மை அறிவைக் கொண்டவனுமான விருத்திரன் அசுரர்களின் தலைவனாக விருந்தான். அவனுக்கும் தேவர்களின் தலைவனான இந்திரனுக்குமிடையில் போர் மூண்டது. போர்  நடந்துகொண்டிருக்கும்போது, இந்திரன் விருத்திரனால் பீடிக்கப்பட்டு மயங்கிய போது வசிஷ்டர் சாமங்களைச் சொல்லி அவனது மயக்கத்தைத் தெளிவித்தார். பிறகு அங்கிரஸின் மகனான பிருஹஸ்பதியும்,  முனிவர்களில் முதன்மையானவர்களும், விருத்திரனின் ஆற்றலைக் கொண்டு சிவனிடம் சென்று, அந்தப் பேரசுரனை அழிக்குமாறு அவனை {சிவனைத்} தூண்டினர். சிவனுடைய சக்தி, ஒரு கடும் நோயின் வடிவை ஏற்று, அசுரர்களின் தலைவனான விருத்திரனின் உடலில் ஊடுருவியது. விஷ்ணு, இந்திரனின் வஜ்ராயுதத்திற்குள் நுழைந்தான். திடீரென அசுரர்கள் அனைவரும் நினைவிழப்பால் பீடிக்கப்பட்டனர். ஒரு கணத்தில் அவர்களது மாயாசக்திகளும் மறைந்து போயின. 

இத்தருணத்தில் விருத்திரன் இந்திரனால் வீழ்த்தப்பட்டான். இந்தக் கதை மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னதாக அமைந்திருக்கிறது.] 

பகர்தருங் கணவனைப் பரிவுடன் அடைந்தாள் 
தண்ஆர் மதிமுகத் தாள்தம யந்தி 
அன்னாள் இவனை அர்ச்சனை பண்ணி 
நண்ணார் பரவும் நளனை அடைந்தாள் 376 

பொருள்

(அகலிகை) புகழ்பெற்ற (கௌதம முனிவர்) கணவனை அடைந்தாள். குளிர்ச்சி மிக்க சந்திரனைப்போன்ற முகத்தை உடைய தமயந்தி விநாயகரை வழிபட்டுப் பகைவரும் போற்றும் நளனைக் கணவனாக அடைந்தாள். 

சொற்பொருள்

பகர்தருங் - புகழ்பெற்ற;
கணவனை - கணவனை;
பரிவுடன் - பரிவோடு;
அடைந்தாள் - அடைந்தாள்;
தண்ஆர் - குளிர்ச்சி மிக்க;
மதிமுகத் தாள் - சந்திரனைப்போன்ற முகத்தை உடைய;
தமயந்தி அன்னாள் - தமயந்தி;
இவனை - விநாயகரை;
அர்ச்சனை பண்ணி - வழிபட்டு;
நண்ணார் பரவும் - பகைவரும் போற்றும்;

நளனை அடைந்தாள் - நளனை கணவனாக அடைந்தாள்; 

குறிப்பு

[கௌதம முனிவர் சப்தரிஷிகளுள் ஒருவர். வேத கால மகாரிஷிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளன.] 

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி 
வெங்கத நிருதரை வேர் அறக் களைந்து 
தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான்
பகீரதன் என்னும் பார்த்திவன் இவனை 380 

பொருள்

ஐந்து கரங்களுடைய விநாயகரை வழிபட்டு சினம் கொண்ட அரக்கரை வேரோடு அழித்து தசரதன் புத்திரன் இராமன் சீதையை மனைவியாக அடைந்தான். பகீரதன் என்னும் அரசன் விநாயகரை; 

சொற்பொருள்

ஐங்கரக் கடவுளை - ஐந்து கரங்களுடைய விநாயகரை;
அர்ச்சனை பண்ணி - வழிபட்டு;
வெங்கத - சினம் கொண்ட;
நிருதரை - அரக்கரை;
வேர் அறக் களைந்து - வேரோடு அழித்து;
தசரதன் மைந்தன் - தசரதன் புத்திரன் இராமன்;
சீதையை அடைந்தான் - சீதையை மனைவியாக அடைந்தான்;
பகீரதன் - பகீரதன்;
என்னும் பார்த்திவன் - என்னும் அரசன்;
இவனை - விநாயகரை; 

குறிப்பு

[இராமர் தனது விவாகத்தின் முன் விநாயகரை வழிபட்டதாக ஒரு குறிப்பும் வால்மீகி ராமாயணத்தில் காணப்படவில்லை. சீதையை இலங்கையிலிருந்து மீட்டுக்கொண்டு அயோத்தி நோக்கி வரும்போது ஒவ்வொரு இடங்களைக் காட்டி அவ்விடத்தின் சிறப்பையும் விளக்கிக்கொண்டு வருகிறார். அப்பொழுது ஒரு இடத்தைக்காட்டி இங்கு தான் சிவன் எனக்கு அருள் செய்தார் என்று கூறினார். இதை விட வேறொரு குறிப்பும் இல்லை.] 

மகிதலந் தன்னில் மலர்கொடு அர்ச் சித்து 
வரநதி தன்னை வையகத்து அழைத்தான் 
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் 
உருக்குமணி என்னும் ஒண்டொடி தன்னைச் 385 

பொருள்

பகீரதன் விநாயகரை மலர் தூவி வணங்கிக் கங்கையைப் பூமிக்கு அழைத்தான். அட்ட தேவதைகள் விநாயகரை வணங்கி எட்டு வகையான இன்பங்களையும் தேவாமிர்தமும் பெற்றனர். ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்த உருக்குமணி (மகாலக்ஷ்மி) என்னும் பெண்ணை; 

சொற்பொருள்

மகிதலந் தன்னில் - பூமியில்;
மலர்கொடு அர்ச்சித்து - மலர் தூவி வணங்கி;
வரநதி தன்னை - கங்கையை;
வையகத்து அழைத்தான் - பூமிக்கு அழைத்தான்; 
அட்ட தேவதைகளும் -  எட்டு  தேவதைகள்; 
அர்ச்சித்து - வணங்கி; 
இவனை - விநாயகரை;
அட்ட போகத்துடன் - எட்டு வகையான இன்பங்கள்;
உருக்குமணி என்னும் - உருக்குமணி என்னும்;
ஒண்டொடி தன்னைச் - ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள்; 

குறிப்பு

[ பகீரதன் சூரிய குலத்து திலீபனின் மகன். இராமரின் முன்னோன். தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்குக் கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காகப் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து பின் சிவபெருமானின் அருளுடன் கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், சாபத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைந்தனர்.

பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காக விநாயகப்பெருமானை வணங்கினான் என்பது வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அவன் பிரமாவையே வேண்டித் தவம் புரிந்தான் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.] 

அட்ட தேவதைகளும்:  இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன்,ஈசானம்

எட்டு வகையான இன்பங்கள்:  1. பெண், 2.ஆடை, 3.அணிகலன்,4. உணவு, 5.தாம்பூலம், 6.நறுமணம், 7.இசை, 8. பூவமளி(மலர்ப்படுக்கை). 

தேவாமிர்தமும் பெற்றனர்: விஷ்ணு இந்திரன் முதலாய தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெற்றனர். இங்கு அட்ட   தேவதைகள் பெற்றனன்ர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது .

சிசுபாலன் வதம்

செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான் 
கொண்டுபோம் அளவிற்குஞ்சர முகவனை 
வண்டுபாண் மிழற்றா மலர்கொடு அர்ச் சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு 389

பொருள் 

சிசுபாலன் உருக்குமணியை வலோத்காரமாகக் கவர்ந்து கொண்டுபோகும் போது நான் (கண்ணன்) தேன் வண்டுகள் மொய்க்காத மலர்கொண்டு யானை முகவனை வணங்கி சிசுபாலனை இடைவழியில் மறித்து அவனைத் தோற்கடித்து உருக்குமணியை அவனிடமிருந்து மீட்டுக்கொண்டேன். 

சொற்பொருள்

செருக்கொடு - வலோத்காரமாக;
வவ்வி - கவர்ந்து;
சிசுபா லன்றான் - சிசுபாலன்;
கொண்டுபோம் அளவிற் - கொண்டுபோகும் போது;
குஞ்சர முகவனை - யானை முகவனை;
வண்டு - வண்டுகள்;
பாண் -  தேன்;
மிழற்றா - மொய்க்காத, ரீங்கரம் செய்யாத (மிழற்று - மழலைச்சொற் பேசுதல்);
மலர்கொடு அர்ச் சித்துத் - மலர்கொண்டு வணங்கி;
தாரியின் - இடைவழியில் (தாரி- வழி);
மறித்தவன் - அவனை மறித்து;
தனைப்புறங் கண்டு - தோற்கடித்து; 

குறிப்பு

[சிசுபாலன் சேதிநாட்டு மன்னன்; கண்ணனுக்கு அத்தை மகன்; விதர்ப்ப நாட்டு அரசன் உருக்குமன் தன் மகளாகிய உருக்குமணியை இவனுக்கு மணம் பேசியிருந்தான். உருக்குமணிக்கு இவனை மணக்க விருப்பமில்லை. கண்ணன்மேற் காதல்கொண்டு தூதனுப்பிச் செய்தி தெரிவித்தாள். கண்ணன் வந்தவுடன் நந்தவனத்தில் இருவரும் கூடியிருந்தனர். சிசுபாலன் தனக்கு மணம் பேசிய உருக்குமணியைக் கவரப் போர் புரிந்து கண்ணனுக்குத் தோற்றோடினான். பின் தருமர் புரிந்த இராசசூய வேள்வியிற் கண்ணனுக்கு முதன்மை தரக்கூடா தென்று இழிவாகப் பேசிப் போர்புரிந்து கண்ணனாற் கொல்லப்பட்டான்.] 

யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் 
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து 
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்னில் எண்ணுதற்கு அரிதால் 393 

பொருள்

நானும் (கண்ணன்) அங்கு அவளை இன்பமுடன் மணந்துகொண்டேன். யானை முகக் கடவுளை வணங்கி அளவிறந்த பேர்கள் இவ்வுலகில் தங்கள் மன விருப்பங்களைக் கைகூடப் பெற்றனர். 

சொற்பொருள்

யாமும் அங்கு - நானும் (கண்ணன்) அங்கு;
அவளை - அவளை;
இன்புறப் - இன்பமுடன்;
பெற்றோம் - மணந்துகொண்டேன்;
புகர்முகக் - புள்ளிகள் நிறைந்த யானை முகம் உடைய (an elephant as having a spotted face);
கடவுளை - கடவுளை;
பூசனை புரிந்து - வணங்கி;
மிகமிக - மிக;
மனத்தில் விளைந்தன - மன விருப்பம்;
பெற்றார் - கைகூடப் பெற்றார்;
இப்புவி தன்னில் - இவ்வுலகில்;
எண்ணுதற்கு அரிதால் - அளவிறந்த பேர்கள்; 

அப்படி நீவிரும் அவனை அர்ச் சித்தால் 
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர் 
என்று கன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப 
அன்று முதல் தருமனும் அனுசரும் இவனைப் 397 

பொருள்

அதுபோல நீங்களும் அவனை வணங்கினால் எதை விரும்புகிறீர்களோ அதைப் பெறுவீர்கள் என்று கிருஷ்ணர் இவற்றைக் கூற அன்று தொடக்கம் தருமனும் தம்பிமாரும் விநாயகரை, 

சொற்பொருள்

அப்படி - அதுபோல;
நீவிரும் - நீங்களும்;
அவனை - அவனை;
அர்ச் சித்தால் - வணங்கினால்;
எப்பொருள் விரும்பினீர் - எதை விரும்புகிறீர்களோ;
அப்பொருள் - அதை; 
பெறுவீர் - பெறுவீர்கள்;
என்று - என்று;
கன்று எறிந்தோன் - கிருஷ்ணர்;
எடுத்திவை உரைப்ப - இவற்றைக் கூற;
அன்று முதல் - அன்று தொடக்கம்;
தருமனும் - தருமனும்;
அனுசரும் - தம்பிமாரும்;
இவனை - விநாயகரை வணங்கினர்;  

குறிப்பு

[கன்று எறிந்தோன்: வத்ஸாசுரன் என்ற அசுரன் கன்றுக் குட்டியின் ரூபத்தை எடுத்து யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்ல வந்தான். கிருஷ்ணர் அந்தக் கன்றுக் குட்டியின் இரண்டு பின்னங்கால்களைப் பிடித்து சுழற்றி எறிந்தார். அந்த கன்றுக் குட்டி வத்ஸாசுரனாக மாறி உயிரை விட்டது.] 

பூசனை புரிந்துகட் புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச் சிந்தையில்
நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு 
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார் 401

பொருள்

கண் பார்வை இழந்தோன் (திருதராட்டினன்) மைந்தரை அழித்து, அரசர் ஆகி மனதில் நினைத்தவற்றை உலகத்தில் வெற்றிகொண்டு எல்லையில்லா செல்வமுள்ள இராச்சியம் (பாண்டவர்கள்) பெற்றனர். 

சொற்பொருள்

பூசனை புரிந்து - வணங்கி;
கட் புலன் இலான் - கண் பார்வை இழந்தோன், திருதராட்டினன்;
மைந்தரை - மைந்தரை;
நாசனம் பண்ணி - அழித்து;
நராதிபர் ஆகி -அரசர் ஆகி;
சிந்தையில் - மனதில்;
நினைத்தவை - நினைத்தவற்றை;
செகத்தினிற் - உலகத்தில்;
செயங்கொண்டு - வெற்றிகொண்டு;
அந்தமில் -  எல்லையில்லா;
செல்வத்து - செல்வமுள்ள;
அரசியல் - இராச்சியம்;
பெற்றார்- பெற்றார்; 

முருகன் பிறப்பு

ஈங்கு இது நிற்க இவ்விர தத்து இயல்
ஓங்கிய காதைமற்று ஒன்று உரை செய்வாம் 
கஞ்சநான் முகன்தருங் காசிபன் புணர்ந்த 
வஞ்சகமனத்தாள் மாயைதன் வயிற்றிற் 405

பொருள்

இக்கதை இப்படி இருக்க இவ்விரதத்தின் மாண்பு மிக்க வேறு ஒரு கதை சொல்வேன். விஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து தோன்றிய நான்கு முகங்களையடைய பிரம்மனின் புத்திரன் காசிபன் மணந்த வஞ்சகமனத்தயுடைய மாயையின் வயிற்றில், 

சொற்பொருள்

ஈங்கு இது நிற்க - இக்கதை இப்படி இருக்க;
இவ்விர தத்து - இவ்விர தத்தின்;
இயல் ஓங்கிய - மாண்பு மிக்க;
காதைமற்று ஒன்று -  வேறு ஒரு கதை;
உரை செய்வாம் - சொல்வேன்;
கஞ்சநான் முகன் - விஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து தோன்றிய நான்கு முகங்களையடைய பிரமனின்;
தருங் காசிபன் - புத்திரன் காசிபன்;
புணர்ந்த - மணந்த;
வஞ்சகமனத்தாள் - வஞ்சகமனத்தயுடைய;
மாயைதன் வயிற்றில் - மாயையின் வயிற்றில்; 


மல்லிகை


சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே 
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும் 
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும் 409

பொருள்

சூரன் என்று ஒரு மகனும் அவனுக்குப் பின் தாரகன் சிங்கமுகன் என்னுமிரண்டு ஆண் மக்களும் தோன்றினர். கடல் சூழ்ந்த பூமி அனைத்தையும் அழித்து சீரான சுவர்க்கத்தின் வளத்தைக் கெடுத்தும் இந்திரன் முதலிய தேவர்களை அவர்கள் வருத்தி வந்தார்கள்.  

சொற்பொருள்

சூரன் என்று ஒருவனும் - சூரன் என்று ஒரு மகனும்; 
துணைவருந் தோன்றி - அவனுக்குப் பின் தாரகன் சிங்கமுகன் என்னுமிரண்டு ஆண் மக்களும் தோன்றினர்;
ஆர்கலி - கடல்;
சூழ்புவி - சூழ்ந்த பூமி;
அனைத்தையும் அழித்தே - அனைத்தையும் அழித்து; 
சீருடைச் சுவர்க்க - சீரான சுவர்க்கத்தின்;
திருவளங் கெடுத்தும் - வளத்தைக் கெடுத்தும்;
புரந்தரன் முதலிய - இந்திரன் முதலிய;
புலவரை வருத்தியும் - தேவர்களை வருத்தியும்;  

நிரந்தரந் தீய நெறிநடத் துதலால் 
ஆயிரங் கண்ண னும் அமரரும் முனிவரும் 
நீ இரங்கு எமக்கு என நெடுங்கரங் கூப்பி
இரசத கிரிஉறை இறைவனை வணங்கி 413 

பொருள்

எப்பொழுதும் தீய வழியில் செல்வதனால் ஆயிரங் கண்களையுடைய இந்திரனும், தேவர்களும், முனிவர்களும் எமக்கு நீ இரங்கு எனக் கை கூப்பிக் கைலையில் இறைவனை வணங்கி, 

சொற்பொருள்

நிரந்தரம் - எப்பொழுதும்;
தீய - தீய;
நெறிநடத் துதலால் - வழியில் செல்வதனால்;
ஆயிரங் கண்ண னும் - ஆயிரங் கண்களையுடைய இந்திரனும்;
அமரரும் - தேவர்களும்;
முனிவரும் - முனிவர்களும்;
நீ இரங்கு எமக்கு என - எமக்கு நீ இரங்கு என;
நெடுங்கரங் கூப்பி - கை கூப்பி;
இரசத கிரிஉறை - கைலையில் இருக்கும்;
இறைவனை - இறைவனை;
வணங்கி - வணங்கி; 

வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச் 
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக் 
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும் 
புதல்வனைத் தருவோம் போமின் நீர் என 417 

பொருள்

பல வரங்கள் பெற்ற சூரனின் கொடுமைகளைச் சிவனிடம் முறையிட, "பிரகாசமான மணிமுடி அணிந்த சூரனை வெல்ல ஒளிவீசுகின்ற வேலைக் கையில் வைத்திருக்கும் புதல்வனைத் தருவோம் நீங்கள் போங்கள்", என்று சிவன் கூறினார். 

சொற்பொருள்

வரமிகுஞ் சூரன் - பல வரங்கள் பெற்ற சூரனின்;
வலிமைகள் உரைக்கச் – வலிமைகளை சிவனிடம் முறையிட;
சுடர்விடு மணிமுடி - பிரகாசமான மணிமுடி அணிந்த;
சூரனை - சூரனை;
வெல்ல - வெல்ல;
கதிர்விடு வடிவேல் - ஒளிவீசுகின்ற வேலை;
கரதலத்து ஏந்தும் - கையில் வைத்திருக்கும்;
புதல்வனை - புதல்வனை;
தருவோம் - தருவோம்;
போமின் நீர் என - நீங்கள் போங்கள் என்று சிவன் கூறினார்; 

அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
சமர வேல்விழித் தையலுந் தானுங் 
கூடிய கலவியிற் கூடாது ஊடலும் 
ஓடிய வானோர் ஒருங்கு உடன் கூடிப் 421 

பொருள்

தேவர்களின் அரசனாகிய இந்திரனுக்குச் சிவன் விடை கொடுத்து அனுப்பியபின் போர்முகத்துக்கு ஏற்ற கூர்மை யான வேல் போன்ற கண்கள் உடைய தேவியும் தானும் கூடி இருக்கவேண்டிய வேளையில் கூடாது இருக்கையிலும், திரும்பிச் சென்ற தேவர்கள் ஒன்றுகூடினர். 

சொற்பொருள்

அமரர் கோனுக்கு - தேவர்களின் அரசனாகிய இந்திரனுக்கு;
அரன்விடை கொடுத்து - சிவன் விடை கொடுத்து;
சமர - போர்முகத்துக்கு என்ற கூர்மை நிறைந்த;
வேல்விழி - வேல் போன்ற கண்கள் உடைய;
தையலுந் தானும் - தேவியும் தானும்;
கூடிய கலவியில் - கூடி இருக்கும் வேளையில்;
கூடாது ஊடலும் - கூடாது இருக்கையிலும்;
ஓடிய - திரும்பிச் சென்ற; 
வானோர் - தேவர்கள்;
ஒருங்கு உடன் கூடிப் - ஒன்றுகூடி; 

பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச் 
சூரன் செய்யுந் துயரம் எல்லாம் 
ஊர்அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
காமனை எரித்த கடவுள் என்று அஞ்சிப் 425

பொருள்

அக்கினித் தேவனை அன்புடன் அழைத்துச் சூரன் செய்யும் துன்பங்கள் எல்லாம் ஊர்கின்ற பாம்பு அணிந்த சிவனிடம் கூறு என்று சொன்னார்கள். மன்மதனை எரித்த (சிவன்) கடவுள் என்று அக்கினி தேவன் பயந்தான். 

சொற்பொருள்

பாவகன் தன்னை -  அக்கினித் தேவனை;
ரிவுடன் அழைத்து - அன்புடன் ழைத்து;
சூரன் செய்யும் - சூரன் செய்யும் ;
துயரம் எல்லாம் - துன்பங்கள் எல்லாம்; 
ஊர்அரவு - ஊர்கின்ற பாம்பு;
அணிந்தோற்கு - அணிந்த சிவனிடம்;
உரையென உரைப்பக் - கூறு என்று சொன்னார்கள்;
காமனை எரித்த - மன்மதனை எரித்த;
கடவுள் என்று - கடவுள் என்று ( சிவன்);
அஞ்சிப் - பயந்து; 

குறிப்பு

[சிவபெருமான் மன்மதனை எரித்த கதை: சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளைத் தீர்க்கச் சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த பாணத்தினால் இறைவனின் தவம் கலைந்தது. இறைவன் கோபமுற்றுக் கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலாகினான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள வேண்டினாள். சிவபெருமான் கோபம் தனித்து ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் செய்யும்போது போது மன்மதனுக்குச்  சாபவிமோசனம் கிடைக்கும் என்று அருள் புரிந்தார்.] 

பாவகன் பயமுறப் பயம் உனக்கு ஏதென
உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான் 
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற் 
குற்றம் அடாது கூறுநீ சென்றென 429 

பொருள்

அக்கினி தேவன் பயப்பட, “நீ ஏன் பயப்படவேண்டும்
தன்னுடைய கையில் உன்னையே தரித்திருக்கிறார்
அவருடைய நெற்றியின் கண்ணும் நீயே ஆதலினால் 
குறை ஒன்றும் வராது நீ போய் இதைக் கூறு” 

சொற்பொருள்

பாவகன் பயமுறப் - அக்கினி தேவன் பயப்பட; 
பயம் உனக்கு ஏதென - நீ ஏன் பயப்படவேண்டும்;
உற்றிடுங் கரதலத்து - தன்னுடைய கையில்; 
உன்னையே தரித்தான் - உன்னையே தரித்திருக்கிறார்;
நெற்றியின் நயனமும் - அவருடைய நெற்றியின் கண்ணும்;
நீயே ஆதலில் - நீயே ஆதலினால்; 
குற்றம் அடாது - குறை ஒன்றும் வராது;
கூறுநீ சென்றென - நீ போய் இதைக் கூறு; 

வானவர் மொழிய மற்றவன் தானுந் 
தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமைஆ ளுடைய உமையா ளுடனே 
அமையா இன்பத்து அமர்ந்து இனிது இருந்த 433

பொருள்

என்று தேவர்கள் கூற, அக்கினி தேவர், தானும் அவ்விடத்திலிருந்து புறப்பட்டு எங்களை ஆட்கொள்கிற உமாதேவியுடன் இன்பத்தோடு இருக்கும்பொழுது, 

சொற்பொருள்

வானவர் மொழிய - தேவர்கள் கூற;
மற்றவன் தானும் - அக்கினி தேவர்; 
தானும் - தானும்;
அச் சபையில் தரியாது ஏகி - அவ்விடத்திலிருந்து புறப்பட்டு;
எமைஆ ளுடைய - எங்களை ஆட்கொள்கிற;
உமையா ளுடனே - உமாதேவியுடன்;
அமையா இன்பத்து - இன்பத்தோடு; 
அமர்ந்து இனிது இருந்த - இருக்கும்பொழுது; 

பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும் 
ஒள்ளிய மடந்தை ஓதுங்கிநா ணுதலுந் 
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே 
ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும் 437

பொருள்

அவர்கள் இருந்த பள்ளி அறையுள் அக்கினித் தேவர் அடைதலும் ஒளியுள்ள பெண், உமாதேவி வெட்கத்தினால் ஒருபுறம் ஒதுங்கத், தெளிவாகச் சிவபெருமான் அக்கினித் தேவரைக்  கண்டதும் குமரனை அவன்கையில் கொடுத்தார். 

சொற்பொருள்

பள்ளி மண்டபம் - அவர்கள் இருந்த பள்ளி அறையுள்;
பாவகன் - அக்கினித் தேவர்;
குறுகலும் - அடைதலும்;
ஒள்ளிய - ஒளியுள்ள;
மடந்தை - பெண், உமாதேவி
ஓதுங்கி நாணுதலும் -  வெட்கத்தினால் ஒருபுறம் ஒதுங்க;
தெள்ளிதில் - தெளிவாக;
பரமனும் -  சிவபெருமான்
தேயுவை - அக்கினித் தேவரை;
கண்டே - கண்டதும்;
ஆறுமுகப் பிள்ளையை - குமரனை;
அவன்கையில் - அவன்கையில்;
ஈதலும் - கொடுத்தார்; 

வறியவன் பெற்ற வான்பொருள் போலச் 
சோதி நீள்முடிச் சுடரோன் கொணர்ந்து 
வாத ராசன் மலர்க்கையிற் கொடுப்ப 
நீதி யோடு நின்றுகை யேந்திப் 441 

பொருள்

ஒரு வறியவனுக்குக் கிடைத்த அரும் செல்வம்போல சோதிபோன்ற நீண்ட முடி உடைய சிவபெருமான் கொண்டுவந்து அக்கினித் தேவர் மலர்போன்ற கைகளில் கொடுக்க முறைப்படி அவர் கையில் ஏற்றுக்கொண்டார். பின்பு குமரனை வாயுதேவரிடம் கொடுத்தார். 

சொற்பொருள்

வறியவன் பெற்ற - ஒரு வறியவனுக்குக் கிடைத்த;
வான்பொருள் போல - அரும் செல்வம்போல;
சோதி நீள்முடி - சோதிபோன்ற நீண்ட முடி உடைய;
சுடரோன் - சிவபெருமான்;
கொணர்ந்து - கொண்டுவந்து;
வாதராசன் - அக்கினி தேவர்; 
மலர்க்கையிற் - மலர்போன்ற கைகளில்; 
கொடுப்ப - கொடுக்க;
நீதி யோடு -  முறைப்படி;
நின்றுகை யேந்தி - கையில் ஏற்றுக்கொண்டார்; பின்பு குமரனை வாயுதேவரிடம் கொடுத்தார்: 

போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல் 
தரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத் 
தரும்புனற் கங்கையும் தாங்க ஒண்ணாமற் 
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத் 445

பொருள்

அறிவு படைத்த வாயுதேவர் அக்கினி ரூபமாயிருந்த குமாரனை அதிக நேரம் தாங்கமுடியாமல் நீர் தருகின்ற கங்கா தேவியின் கையில் கொடுத்தார் கங்கா தேவியும் தாங்கமுடியாமல் பெரிய அலைகள் வீசும் சரவணப் பொய்கையில் வைத்தார். 

சொற்பொருள்

போதநீள் வாயுவும் - அறிவு படைத்த வாயுதேவர்;
பொறுக்க  ஒண்ணாமல் - அக்கினி ரூபமாயிருந்த குமாரனை அதிக நேரம்
தாங்கமுடியாமல்:
தரும்புனல் - நீர் தருகின்ற;
கங்கை - கங்கா தேவியின்; 
தன்கையில் - கையில்;
கொடுப்ப - கொடுத்தார்;
தரும்புனற் கங்கையும் - கங்கா தேவியும்;
தாங்க ஒண்ணாமல் - தாங்கமுடியாமல்;
பொருந்திரை - பெரிய அலைகள் வீசும்;
சரவணப் பொய்கையில் - சரவணப் பொய்கையில்;
வைப்ப - வைத்தார்; 



புன்னை


தண்ஆர் வதனத் தாமரை ஆறுங் 
கண்ஆ றிரண்டுங் கரம்ஈ ராறும் 
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும் 
மாண்அயில் ஆதி வான்படை யுங்கொண்டு 449 

பொருள்

குளிர்மை நிறைந்த தாமரை மலர்கள் போன்ற முகங்கள் ஆறும் பன்னிரண்டு கண்களும் பன்னிரண்டு கைகளும் தூண் போன்ற திரண்ட பன்னிரண்டு தோள்களும் மாண்புமிக்க வேலும் தேவ சேனைகளுடன், 

சொற்பொருள்

தண்ஆர் வதனத் தாமரை - குளிர்மை நிறைந்த தாமரை மலர்கள் போன்ற முகங்கள்; 
ஆறும் - ஆறும்;
கண் ஆறிரண்டுங் - பன்னிரண்டு கண்களும்;
கரம் ஈராறும் - பன்னிரண்டு கைகளும்;
தூண் எனத் - தூண் போன்ற;
திரண்ட - திரண்ட;
தோள் ஈராறும் - பன்னிரண்டு தோள்களும்;
மாண்அயில் - மாண்புமிக்க;
ஆதி - வேலும்;
வான்படை யுங்கொண்டு - தேவ சேனைகளுடன்; 

அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும் 
மறுகிய உம்பர் மகிழ்வுடன் கூடி 
அறுமீன் களைப்பால் அளித்திர் என்று அனுப்ப 
ஆங்கவர் முலை உண்டு அறுமுகன் தானும் 453 

பொருள்

அறுமுகக் கடவுள் அங்கு அவதரித்திட, கலக்கமுற்றிருந்த தேவர்கள் மகிழ்வுடன் ஒன்று கூடி ஆறு கார்த்திகை நட்சத்திர பெண்களை அழைத்து பால் கொடுத்து வளருங்கள் என்று அனுப்பினர். அங்கு அவர்களுடைய முலைப் பாலை அருந்தி அறுமுகக் கடவுள்;

சொற்பொருள்

அறுமுகக் கடவுள் - அறுமுகக் கடவுள்;
அங்கு - அங்கு;
அவதரித் திடலும் - அவதரித் திட;
மறுகிய - கலக்கமுற்றிருந்த;
உம்பர் - தேவர்கள்;
மகிழ்வுடன் கூடி - மகிழ்வுடன் ஒன்று கூடி
அறு மீன் களை - ஆறு கார்த்திகை நட்சத்திர பெண்களை அழைத்து;
பால் - பால்;
அளித்திர் என்று -  கொடுத்து வளருங்கள் என்று;
அனுப்ப - அனுப்பினர்.
ஆங்கவர் - அங்கு அவர்களுடைய;
முலை - முலைப் பாலை;
உண்டு - அருந்தி;
அறுமுகன் தானும் - அறுமுகக் கடவுள்; 

ஓங்கிய வளர்ச்சி உற்றிடு நாளில் 
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு 
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து 
முருகு அலர் குழல் உமை முலைப்பால்ஊட்ட 457

பொருள்

ஓங்கி வளர்ந்து வரும் காலத்தில் சிவபெருமானும் உமாதேவியாரும் எருது வாகனத்தில் சென்று ஆறு தலை உடைய மகன் இருந்த இடமாகிய சரவணப் பொய்கை சென்றடைந்து நறுமணமுடைய மலர்கள் சூடிய முடி உடைய உமாதேவி முலைப்பால் ஊட்டினார். 

சொற்பொருள்

ஓங்கிய - ஓங்கி;
வளர்ச்சி உற்றிடு நாளில் - வளர்ந்து வரும் காலத்தில்;
விமலனும் உமையும் - சிவபெருமானும் உமாதேவியாரும் (விமலன் - மலங்கள் அற்றவர்);
விடையுகைத்து - எருது வாகனத்தில் சென்று;
ஆறு தலைமகன் இருந்த - ஆறு தலை உடைய மகன் இருந்த இடமாகிய;
சரவணத்து - சரவணப் பொய்கை;
அடைந்து -  சென்றடைந்து;
முருகு அலர் - நறுமணமுடைய மலர்கள் சூடிய;
குழல் - முடி;
உமை - உமாதேவி;
முலைப்பால் ஊட்ட - முலைப்பால் ஊட்டினார்; 

குறிப்பு
மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை.

இருவரும் இன்பால் எடுத்து எடுத்து அணைத்துத் 
தேவர்தம் படைக்குச் சேனா பதியெனக் 
காவல் கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி 
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத் 461 

பொருள்

இருவரும் இன்பத்துடன் தூக்கி அணைத்து தேவ சேனைக்கு சேனா பதியாகக் காக்கும்படி விருது அளித்துப் பிரகாசிக்கும் முடி சூட்டி கூர்மையான வேல் முதலிய பல ஆயுதங்கள் கொடுத்தனர். 

சொற்பொருள்

இருவரும் - இருவரும்;
இன்பால் - இன்பத்துடன்;
எடுத்து எடுத்து - தூக்கி;
அணைத்து - அணைத்து; 
தேவர்தம் படைக்கு - தேவ சேனைக்கு;
சேனா பதியென - சேனா பதியாக;
காவல் கொண்டு - காக்கும்படி;
அளிக்க - விருது அளித்து;
கதிர்முடி சூட்டி - பிரகாசிக்கும் முடி சூட்டி;
அயில் - கூர்மையான;
வேல் - வேல்;
முதற்பல - முதலிய பல;
ஆயுதங் கொடுத்து - ஆயுதங்கள் கொடுத்து; 

திசை எலாஞ் செல்லுந் தேரும் ஒன்று உதவிப் 
பூதப் படைகள் புடைவரப் போய்நீ 
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்று அனுப்ப 
இருளைப் பருகும் இரவியைப் போலத் 465 

பொருள்

எல்லாத்திக்குகளிலும் போகக்கூடிய தேர் ஒன்றும் கொடுத்துப் பூதப் படைகள் சூழ நீ போய்க் கொடுமை செய்யும் அவுணரை அழித்துவிடு என்று கூறி அனுப்பினர். இருளைப் போக்கும்சூரியனைப் போல, 

சொற்பொருள்

திசை எலாம் - எல்லாத்திக்குகளிலும்;
செல்லும் - போகக்கூடிய;
தேரும் ஒன்று -  தேர் ஒன்றும்; 
உதவி - கொடுத்து;
பூதப் படைகள் - பூதப் படைகள்;
புடைவர - சூழ;
போய்நீ - நீ போய்;
ஓதுறும் - கொடுமை செய்யும்;
அவுணரை - அரக்கரை;
ஒறுத்திடு - அழித்துவிடு;
என்று அனுப்ப -  என்று கூறி அனுப்பினர்;
இருளைப் பருகும் - இருளைப் போக்கும்;
இரவியைப் போல - சூரியனைப் போல; 

தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக் 
குருகுப் பேர்பெறுங் குன்றமுஞ் சூரன் 
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே 
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந் 469

பொருள்

ஒத்தவரென்று போருக்குக் (அவுணரை) கொல்லச் சென்ற அவர் கிரவுன்சம் என்று பெயர் பெற்ற மலையையும் சூரனுடைய அந்தரங்க உறுப்பையும் துளைத்து வேலை ஏவி எல்லோரும் வியப்படையும் படியாக இந்திரனுடைய மகளாம்,

சொற்பொருள்

தகுவரென்று - ஒத்தவரென்று;
அவரை - அவரை;
சமரிடை - போருக்கு;
முருக்கி - (அவுணரை) கொல்ல (முருகு – இளமை);
பேர்பெறுங் – கிரவுன்சம்;
குன்றமுஞ் - என்று பெயர் பெற்ற மலையையும்;
சூரன் - சூரனுடைய;
மருமமும் - அந்தரங்க உறுப்பையும்;
துளைபட - துளைத்து;
வடிவேல் விடுத்தே - வேலை ஏவி;
யாவரும் - எல்லோரும்;
வியப்புற - வியப்படையும்படியாக;
இந்திரன் மகளாம் - இந்திரனுடைய மகளாம்; 

தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு 
அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்  
குமர வேளுங் குவலயம் விளங்க 
அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான் 473 

பொருள்

தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்டு இந்திரனுக்குத் தேவலோகத்தை மீண்டும் கொடுத்து முருகன் உலகமறிய அமரா வதியில் இன்புடன் வாழ்ந்து வந்தார். 

சொற்பொருள்

தேவகுஞ் சரியை - தெய்வயானையை;
திருமணம் புணர்ந்திட்டு - திருமணம் செய்துகொண்டு;
அமரர் கோனுக்கு - இந்திரனுக்கு;
அமருலகு அளித்துத் - தேவலோகத்தை மீண்டும் கொடுத்து;
குமர வேளும் - முருகன்; 
குவலயம் விளங்க - உலகமறிய;
அமரா வதியில் - அமரா வதியில்;
அமர்ந்து இனிது இருந்தான் - இன்புடன் வாழ்ந்து வந்தார்; 

சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்டு 
அமரர் மாதர் அனைவரும் மயங்கி 
எண்டருங் கற்பினை இழந்தது கண்டே 
அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி 477 

பொருள்

போர் வேலுடைய சண்முகன் அழகைக் கண்டு தேவ மகளிர் அனைவரும் மயங்கி சிந்தனையைத் தூண்டுபவையினால் கற்பை இழந்தது கண்டு தேவர்கள் எல்லோரும் முறைப்படி ஒன்று சேர்ந்து, 

சொற்பொருள்

சமர - போர்;
வேலுடை - வேலுடைய;
சண்முகன் - சண்முகன்;
வடிவுகண்டு -  அழகைக் கண்டு;
அமரர் மாதர் - தேவ மகளிர்;
அனைவரும் மயங்கி 
எண்டரும் கற்பினை - சிந்தனையைத் தூண்டுபவை (எண்+தரும்);
கற்பினை - கற்பை (மானம்); 
இழந்தது கண்டே - இழந்தது கண்டு;
அண்டர் எல்லாம் - தேவர்கள் எல்லோரும்;
அடைவுடன் - முறைப்படி;
கூடி - ஒன்று சேர்ந்து; 


முல்லை

மாதொரு பாகனை வந்து அடி வணங்கி 
மருமலர்க் கடம்பன்எம் மாநகர் புகாமல் 
அருள்செய வேண்டும் நீ அம்பிகா பதியென 
இமையவர் உரைப்ப இறையவன் தானுங் 481 

பொருள்

உமாதேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமானை வந்து அடி வணங்கி, “முருகன் எங்கள் நகரத்திற்குள் வராமல் நீ அருள்செய்ய வேண்டும் அம்பிகையின் கணவனே”, என்று தேவர்கள் கூற, சிவபெருமானும், 

சொற்பொருள்

மாதொரு பாகனை - உமாதேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் (மாது - பெண்); 
வந்து - வந்து;
அடி வணங்கி - அடி வணங்கி;
மருமலர் - வாசனை மலர்கள்;
கடம்பன் - கடம்ப மாலை விரும்பி அணிவதனால் முருகனுக்கு கடம்பன் என்றுமொரு பெயருண்டு;
எம் மாநகர் - எங்கள் நகரத்திற்குள்;
புகாமல் - வராமல்;
அருள்செயவேண்டும் நீ - நீ அருள்செய்ய வேண்டும்;
அம்பிகா பதியென - அம்பிகையின் கணவனே;
இமையவர் உரைப்ப - என்று தேவர்கள் கூற;
இறையவன் தானும் - சிவபெருமானும்;  

குமரனைக் கோபங் கொண்டு முன் முனியக் 
காவல் கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ் 
சேவலங் கொடியோன் தேசம் போகத் 
திருந்திளை உமையாள் அருந்துயர் எய்தி 485 

பொருள்

மகன்மீது கோபம் கொண்டு கோபித்தார். பாதுகாத்தலை மேற்கொண்டு எம்வினை அற்றுப் போகும்படி அருள் செய்து சேவல் கொடியோன் வேறு தேசம் போனார். அதனால் உமாதேவி மிகவும் துயரப்பட்டாள். 

சொற்பொருள் 

குமரனை - மகன்மீது; 
கோபம் - கோபம்;
கொண்டு - கொண்டு;
முன் முனிய - கோபித்தார்;
காவல் கொண்டு - பாதுகாத்தலை மேற்கொண்டு;
எம்வினை - எம்வினை;
கட்டறுத்து - அற்றுப்போகும்படி; 
அருளுஞ் - அருள் செய்து;
சேவலங் - சேவல்;
கொடியோன் - கொடியோன்;
தேசம் போக - வேறு தேசம் போக;
திருந்திளை – (திருந்து+இளை)அழகிய மெல்லிய;
உமையாள் - உமாதேவி;
அருந்துயர் எய்தி - மிகவும் துயரப்பட்டாள்; 

வருந்திமுன் நிற்க மங்கையைப் பார்த்து 
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி 
அங்கையார் சூதெறிந்து ஆடுவோம் வாவென 
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக் 489 

பொருள்

மனம் வருந்தி முன்னே நின்ற உமாதேவியைப் பார்த்து, “பெண்ணே நீ வருந்தாதே காய்களை எறிந்து சூதாடுவோம் வா” என்று அழைத்தார். “வெற்றியையும் தோல்வியையும் சொல்பவர் யார்?”, என்று, 

சொற்பொருள்

வருந்தி - மனம் வருந்தி;
முன் நிற்க - முன்னே நின்ற;
மங்கையைப் பார்த்து - உமாதேவியைப் பார்த்து;
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி - பெண்ணே நீ வருந்தாதே;
அங்கையார் – அங்கையார்;
சூதெறிந்து - காய்களை எறிந்து; 
ஆடுவோம் - சூதாடுவோம்;
வாவென - வா என்று அழைத்தார்;
வென்றதும் - வெற்றியையும்; 
தோற்றதும் - தோல்வியையும்;
விளம்புவார் - சொல்பவர்;
யாரென - யார் என்று; 

குன்றமென் முலையாள் கூறிய சமயம் 
புற்று அரவு அணிந்த புனிதனைக் காண 
அங்கு உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற் 
சக்கர பாணியைச் சான்றெனக் குறித்து 493

பொருள்

மென்மையான முலையை உடைய உமாதேவி, சொன்னபோது புற்றில் வசிக்கும் பாம்பு அணிந்த, புனிதமானவனைக் (சிவபெருமானைக்) காண அங்கு வந்தனன் திருமால். பழவினை வலிமையினால், சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமால் சாட்சி (மத்தியஸ்தர்) என்று சிவபெருமான் கூறினார். 

சொற்பொருள் 

குன்ற - குறைபட;
மென் முலையாள் - மென்மையான முலையை உடைய உமாதேவி;
கூறிய சமயம் - சொன்னபோது;
புற்று அரவு - புற்றில் வசிக்கும் பாம்பு;
அணிந்த - அணிந்த;
புனிதனைக் காண - புனிதமானவனைக் காண;
அங்கு - அங்கு;
உற்றனன் - வந்தனன்;
திருமால் - திருமால்;
ஊழ்வினை - பழவினை;
வலியால் - வலிமையினால், கொடுமையினால்;
சக்கர பாணியை - சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமால்;
சான்றெனக் - சாட்சி (மத்தியஸ்தர்) என்று; 
குறித்து - கூறினார்; 

மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச் 
சாயக நேருந் தடநெடுங் கருங்கண் 
நாயகி வெல்ல நாயகன் தோற்ப 
இன்பவாய் இதழ் உமை யான்வென் றேன் என 497 

பொருள்

மிகப்பெரிய சூது விருப்புடன் ஆட, அரும்பு போன்ற திடமான நீண்ட கரிய கண்களையுடைய உமை நாயகி வெல்ல நாயகன் தோற்றார். இனியவை பேசும் உமை “யான் வென்றேன்” என, 

சொற்பொருள்

மிக்கதோர் - மிகப்பெரிய;
சூது - சூது;
விருப்புடன் ஆட - விருப்புடன் ஆட;
சாயக நேரும் - அரும்பு போன்ற; 
தடநெடுங் கருங்கண் - திடமான நீண்ட கரிய கண்களையுடைய உமை;
நாயகி வெல்ல - நாயகி வெல்ல;
நாயகன் தோற்ப - நாயகன் தோற்க;
இன்பவாய் இதழ் - இனியவை பேசும்;
உமை - உமை;
யான் வென்றேன் என – யான் வென்றேன் என; 

எம்பெரு மானும் யான்வென் றேன்என 
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி 
இருவரும் சாட்சி இவனைக் கேட்ப 
மாமனை வதைத்த மால் முகம் நோக்கிக் 501 

பொருள்

எம்பெரு மானும் “யான்வென்றேன்” என ஒருவர்க் கொருவர் மறுத்துப் பேசி இருவரும் நடுவரைக் கேட்டனர். மாமனைக் கொன்ற திருமால் முகம் நோக்கி, 

சொற்பொருள்

எம்பெரு மானும் - எம்பெரு மானும்;
யான்வென் றேன்என - யான்வென் றேன்என;
ஒருவர்க் கொருவர் - ஒருவர்க் கொருவர்;
உத்தரம் பேசி - மறுத்துப் பேசி;
இருவரும் - இருவரும்;
சாட்சி இவனைக் கேட்ப - நடுவரைக் கேட்டனர்;
மாமனை வதைத்த திருமால் - மாமனைக் கொன்ற திருமால்;

மால் முகம் - திருமால் முகம்;
நோக்கி - நோக்கி; 

குறிப்பு

[மாமனைக் கொன்ற திருமால்: பாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். 

கம்சன் தன் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற தீர்க்கதரிசனம் காரணமாக கிருஷ்ணரைக் கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். ஆனால் கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 

அக்ரூரர் யாதவ குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணி கிளைக்குலத்தவர். இவர் கிருஷ்ணரின் சித்தப்பா முறையாவார். கம்சனின் அரசவையில் அமைச்சராக இருந்தவர். கம்சனின் உத்தரவுப் படி, பிருந்தாவனத்திலிருந்த கிருஷ்ணரையும், பலராமரையும், மதுரா அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். 

அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமனும் கிருஷ்ணரூம் மதுராபுரி சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியைத் தனது தாய் வழித் தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்து விட்டு, கோகுலம் வாழ் யது குல மக்களுடன், சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தனர்.] 

காமனை எரித்தோன் கண்கடை காட்ட 
வென்ற நாயகி தோற்றாள் என்றுந் 
தோற்ற நாயகன் வென்றான் என்றும் 
ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக் 505

பொருள்

மன்மதனை எரித்த சிவபெருமான், கடைக்கண் காட்டி சமிக்கை செய்ய, வென்ற நாயகி தோற்றாள் என்றும் தோற்ற நாயகன் வென்றான் என்றும், திருமால் சிவபெருமான்தான் வென்றார் என்று பொய் சொன்னார். 

சொற்பொருள்

காமனை எரித்தோன் - மன்மதனை எரித்த சிவபெருமான்;
கண்கடை காட்ட - கடைக்கண் காட்ட, சமிக்கை செய்ய;
வென்ற நாயகி தோற்றாள் என்றும் - வென்ற நாயகி தோற்றாள் என்றும்;
தோற்ற நாயகன் வென்றான் என்றும் - தோற்ற நாயகன் வென்றான் என்றும்;
ஒன்றிய - தனித்த;
பொய் - பொய்;
கரி - திருமால்;

உடன் அங்கு உரைப்ப - சிவபெருமான்தான் வென்றார் என்று பொய் சொல்ல; 


வாகை

கன்றிய மனத்தொடு கவுரிஅங்கு உருத்து 
நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை உண்மை 
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய் 
மைக்கரி உரித்தோன் வதனம் நோக்கிப் 509 

பொருள்

வெகுண்ட மனத்துடன் உமாதேவி அங்கு சினந்து “நீ கண்டிருந்தும் உண்மை பேசவில்லை பேசுவது ஒன்று மனத்தினில் இருப்பது வேறொன்று”, கரிய யானையின் தோலை உரித்தவர் முகத்தை நோக்கி, 

சொற்பொருள்

கன்றிய - வெகுண்ட;
மனத்தொடு - மனத்துடன்;
கவுரி - உமாதேவி;
அங்கு -அங்கு;

உருத்து - சினந்து;
நோக்கிநீ இருந்தும் - நீ கண்டிருந்தும்;
நுவன்றிலை உண்மை - உண்மை பேசவில்லை;
வாக்கினில் ஒன்றாய் - பேசுவது ஒன்று;
மனத்தினில் ஒன்றாய் - மனத்தினில் இருப்பது வேறொன்று; 
மைக்கரி - கரிய யானை;
உரித்தோன் - தோலை உரித்தவர்;
வதனம் - முகத்தை;
நோக்கி - நோக்கி; 

குறிப்பு

மைக்கரி உரித்தோன்: 172 ஆம் வரியின் குறிப்பைப் பார்க்கவும். 

பொய்க்கரி உரைத்த புன்மையி னாலே 
கனல் என வயிற்றிற் கடும்பசி கனற்ற 
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க் 
கடகரி முகத்துக் கடவுள் வீற்று இருக்கும் 513 

பொருள்

திருமால் பொய் கூறிய இழிசெயலினாலே “தீ போன்ற வயிற்றில் கடும்பசி வாட்ட, நிலத்தினில் குருட்டு நீண்ட உடலுடைய பாம்பாக யானை முகத்துக் கடவுள் இருக்கும்”, 

சொற்பொருள்

பொய் - பொய்;
கரி - திருமால்;
உரைத்த - கூறிய;
புன்மையினாலே - இழிசெயலினாலே; 
கனல் என - தீ போன்ற;
வயிற்றில் - வயிற்றில்;
கடும்பசி கனற்ற – கடும்பசி வாட்ட;
நிலமிசை - நிலத்தினில்;
குருட்டு - குருட்டு;
நெட்டுடற் பாம்பாய் - நீண்ட உடலுடைய பாம்பாக;
கடகரி முகத்து - யானை முகத்து;
கடவுள் - கடவுள்;
வீற்று இருக்கும் - இருக்கும்; 

வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள் 
முளரிகள் பூத்த முகில் நிறத்து உருப்போய்த் 
துளவு அணி மருமனுந் துணைவிழி இழந்தே 
ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை 517 

பொருள்

“ஆலமர நிழலில் இரு” என்று சபித்தாள் தாமரை பூத்த முகில் நிறம் மறைந்து போக துளசி அணிந்த திருமாலும் கண் இழந்து அங்கு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை (30,000 மைல்), 

சொற்பொருள்

வடதரு நீழலில் - ஆலமரநிழலில்;
கிடவென - இருவென்று;
சபித்தாள் - சபித்தாள்;
முளரிகள் பூத்த - தாமரை பூத்த;
முகில் நிறத்து - முகில் நிறம்;
உருப்போய் - மறைந்து போக;
துளவு - துளசி;
அணி - அணிந்த;
மருமனும் - திருமாலும்;
துணைவிழி - கண்;
இழந்தே - இழந்து;
ஆண்டு - அங்கு;
அரைக் கணத்தில் - அரைக் கணத்தில்;
ஆயிரம் யோசனை - ஆயிரம் யோசனை (30,000 மைல்); 

நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து 
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்று இருக்குங் 
கிளர்ச்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால்
திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும் 521

பொருள்

நீண்ட மலைப்பாம்பு உடல் எடுத்து தந்தம் ஒன்று உடைய விரும்பியதைத் தருகின்ற விநாயகர் இருக்கும் மேலெழும்புகின்ற கொப்பு உடைய ஆலமரத்தின் கீழ் கிடந்த காரணத்தினால் மூன்று மதங்கள் கொண்ட யானையின் முகத்தையுடைய கடவுள்,

சொற்பொருள்

நீண்ட - நீண்ட;
பை - பை; 
பாந்தள் - மலைப்பாம்பு;
நெட்டுடல் எடுத்து - நீண்ட உடல் எடுத்து;
வளர்மருப்பு - தந்தம்;
ஒன்றுடை - ஒன்று உடைய;
வள்ளல் - கொடையாளி;
வீற்று இருக்கும் - இருக்கும்;
கிளர்ச்சினை - மேலெழும்புகின்ற கொப்பு;
ஆலின்கீழ் - ஆலமரத்தின் கீழ்;
கிடந்த தனனால் - கிடந்த காரணத்தினால்;
திரிகட - மூன்று மதங்கள் கொண்ட;
கரியின் - யானையின்;
திருமுகக் - முகத்தையுடைய;
கடவுளும் - கடவுள்; 


                 மார்கழி மாதப்  பிள்ளையார்  விரதம் 

வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே எழில்பெறு வடமரத்தின் கீழ் இருந்தான் 
கம்பமா முகத்துக் கடவுள்தன் பெருமையை 
அம்புவி யோருக்கு அறிவிப் போம் என 525

பொருள்

வழிபடும் அடியார் கொடியவினை தீர்த்து அழகிய ஆல மரத்தின் கீழ் இருந்து வந்தார். யானை மாமுகம் உடைய கடவுளினுடைய பெருமையை உலகத்தோருக்குத் தெரிவிப்பதற்காக, 

சொற்பொருள்

வழிபடும் -வழிபடும்;
அடியார் - அடியார்;
வல்வினை - கொடியவினை;
தீர்த்தே - தீர்த்து;
எழில்பெறு - அழகிய;
வடமரத்தின் - ஆல மரத்தின்;
கீழ் - கீழ்;
இருந்தான் - இருந்து வந்தார் ;
கம்பமா முகத்துக் - யானை மாமுகம் உடைய;
கடவுள்தன் - கடவுளினுடைய;
பெருமையை - பெருமையை;
அம்புவி யோருக்கு - உலகத்தோருக்கு;
அறிவிப் போம் என - தெரிவிப்பதற்காக; 

 உம்பர் உலகத்து ஓரெழு கன்னியர் 
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து 
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக் 
கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் நாளில் 529 

பொருள்

தேவர் உலகத்து ஏழு கன்னிப்பெண்கள் நூல் ஏணியில் பூமிக்கு இறங்கி வந்து விநாயகக் கடவுளை கைகளால் வணங்கிப் போற்றி கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகைத் திதி முடிந்து அடுத்த நாளில், 

சொற்பொருள்

உம்பர் - தேவர்;
உலகத்து - உலகத்து;
ஓரெழு கன்னியர் - ஏழு கன்னிப்பெண்கள்;
தம்பநூல் ஏணியில் - நூல் ஏணியில்;
தாரணி வந்து - பூமிக்கு இறங்கி வந்து;
கரிமுகக் கடவுளை - விநாயகக் கடவுளை; 
கைதொழுது - கைகளால் வணங்கி;
ஏத்தி - போற்றி;
கார்த்திகைக் கார்த்திகை - கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகைத் திதி;
கழிந்தபின் - முடிந்து அடுத்த;
நாளில் - நாளில்; 


காந்தள்  

ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி 
இருபத் தோர் இழை இன்புறக் கட்டி 
ஒரு போது உண்டி உண்டு ஒரு மனமாய் 
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும் 533
 

பொருள்

கட்டியிருக்கிற பட்டு ஆடையிலிருந்து நூல்களைக் கழற்றி இருபத்தொரு நூல்களைக் காப்பு நாணாகக் கட்டிக்கொண்டு நாளைக்கு ஒரு தடவை சாப்பிட்டு மனக்கட்டுப்பாடுடன் வேதத்தின் மூல மந்திரமாகிய 'ஓம்' என்னும் பீஜத்தையும், 

சொற்பொருள்

ஆர்த்த – கட்டியிருக்கிற;
கலிங்கத்து - பட்டு ஆடையிலிருந்து;
அணியிழை வாங்கி - நூல்களைக் கழற்றி;
இருபத் தோர் இழை - இருபத்தொரு நூல்களை;
இன்புறக் கட்டி - காப்பு நாணாகக் கட்டிக்கொண்டு;
ஒரு போது - நாளைக்கு ஒரு தடவை; 
உண்டி உண்டு - சாப்பிட்டு;
ஒரு மனமாய் - மனக்கட்டுப்பாடுடன்;
வேதத்து ஆதியும் - வேதத்தின் மூல மந்திரமாகிய 'ஓம்' என்னும் பீஜத்தையும்; 

ஆதிவி நாயகற்கு ஆன எழுத்தும் 
மூன்று எழுத் ததனால் மொழிந்தமந் திரமும் 
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே 
உரைதரு பதினாறு உபசா ரத்தால் 537

பொருள்

விநாயகற்கு உரிய 'கம்' என்னும் பீஜத்தையும்,

பூமியின் மூல மந்திரமாகிய 'லம்' என்னும் பீஜத்தையும்

மூன்று பீஜங்களையும் சேர்த்து 'ஓம்கம்லம்' என்னும் மந்திரத்தைத், தேன் உள்ள மலர்களைத் தலையில் சூடியிருக்கும் தேவலோகப் பெண்கள், மனதினுள் செபித்துக்கொண்டு, சொல்லப்பட்ட 16 உபசாரங்களைச் செய்தனர். 

சொற்பொருள்

ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும் - விநாயகற்கு உரிய 'கம்' என்னும் பீஜத்தையும்;
பூமியில் எழுத்தும் - பூமியின் மூல மந்திரமாகிய 'லம்' என்னும் பீஜத்தையும்;
மூன்று எழுத் ததனால் மொழிந்தமந் திரமும் - மூன்று பீஜங்களையும் சேர்த்து 'ஓம்கம்லம்' என்னும் மந்திரத்தை;
தேன் தருங்குழலியர் -தேன் உள்ள மலர்களைத் தலையில் சூடியிருக்கும் தேவலோகப்  பெண்கள்;
சிந்தையுள் -  மனதினுள்;
செபித்தே - செபித்துக்கொண்டு;
உரைதரு - சொல்லப்பட்ட; 
பதினாறு - 16;
உபசா ரத்தால் - உபசாரங்களைச் செய்தனர்; 

வரைமகள் மதலையை வழிபாடு 
ஆற்றி இருபது நாளும் இப்படி நோற்று 
மற்றநாள் ஐங்கர மாமுகன் பிறந்த 
அற்றைநாட் சதயமும் ஆறாம் பக்கமுஞ் 541 

பொருள்

மலை மகளாகிய உமாதேவியின் குழந்தையை வழிபாடு செய்து இருபது நாளும் இப்படி விரதமிருந்து அடுத்த நாள் (21 ஆவது நாள்) ஐந்து கரங்களையும் யானை முகத்தையும் கொண்ட விநாயகப் பெருமான் பிறந்த சதய நட்சத்திரமும் சஷ்டித் திதியும், 

சொற்பொருள்

வரைமகள் - மலை மகளாகிய உமாதேவியின்;
மதலையை - குழந்தையை;
வழிபாடு - வழிபாடு;
ஆற்றி - செய்து;
இருபது நாளும் - இருபது நாளும்;
இப்படி - இப்படி;
நோற்று - விரதமிருந்து;
மற்றநாள் - அடுத்த நாள் (21 ஆவது நாள்);
ஐங்கர மாமுகன் - ஐந்து கரங்களையும் யானை முகத்தையும் கொண்ட விநாயகப் பெருமான்;
பிறந்த - பிறந்த;
அற்றைநாள் - அன்று;
சதயமும் - சதய நட்சத்திரமும்;
ஆறாம் பக்கமும் - சஷ்டித் திதியும்;  

சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி 
வாரண முகத்தோன் வருபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக்கு ஏற்றிக் 
குலவுபொற் கலைகள் கொடுவி தானத்து 545 

பொருள்

சேருகின்ற அத்தினத்தில் தெளிவான நீரில் மூழ்கி, யானை முகத்தையுடைய விநாயகர் இருக்கும் பெரிய கோவிலைச் சீராக மெழுகி விளக்கு ஏற்றினார்கள்.
பிரகாசிக்கின்ற பொன்னாடைகள் கொண்டு மண்டபத்திற்கு வெள்ளை கட்டினார்கள். 

சொற்பொருள்

சேரும் - சேருகின்ற;
அத் தினத்தில் - அத் தினத்தில்;
தெளிபுனல் ஆடி - தெளிவான நீரில் மூழ்கி;
வாரண - யானை;
முகத்தோன் - முகத்தையுடைய விநாயகர்;
வருபெருங் கோயில் - இருக்கும் பெரிய கோவில்;
சீர்பெற - சீராக;
மெழுகி - மெழுகி;
திருவிளக்கு ஏற்றி - விளக்கு ஏற்றினார்கள்;
குலவு - பிரகாசிக்கின்ற;
பொற் கலைகள் - பொன்னாடைகள்;  
கொடு - கொண்டு;
விதானத்து - மண்டபத்திற்கு வெள்ளை கட்டினார்கள்; 

மலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக் 
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை 
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப் 
பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச் 549

பொருள்

பல மலர்களை தொடுத்து மாலைகள் செய்தார்கள். கொலைபுரியும்வேற்படை உடைய முருகனுக்கு முன் பிறந்த யானை முகக் கடவுளை அபிஷேகம் செய்து
பொன்னாடையும் பருத்தி ஆடையும் அணிவித்தார்கள். 

சொற்பொருள்

மலர்பல -  பல மலர்களை;
தொடுத்திடு - தொடுத்து;
மாலைகள் - மாலைகள்;
ஆற்றிக் - செய்தார்கள்;
கொலைபுரி - கொலைபுரியும்;
வடிவேற் - வேற்படை உடைய;
குகற்கு - முருகனுக்கு;
முன் வருகை -  முன் பிறந்த;
மலைமுகக் கடவுளை - யானை முகக் கடவுளை;
மஞ்சனம் ஆட்டிப் - அபிஷேகம் செய்து;
பொற்கலை - பொன்னாடையும்;
நன்னூற் பூந்துகில் - பருத்தி ஆடையும்;
சாத்தி - அணிவித்தார்கள்; 

சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிச் 
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு 
குருந்து மல்லிகை கோங்கொடு பிச்சி 
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி 553 

பொருள்

புகழத்தக்க நறுமணமுள்ள சந்தனம் பூசி செருந்தி சண்பகம் செங்கழு நீர் குருந்து மல்லிகை கோங்கு பிச்சி கரிய நிறமுடைய புன்னை மணம் கமழும் பாதிரி, 

சொற்பொருள்

சொற்பெறு - புகழத்தக்க;
சந்தனச் சுகந்தம் - நறுமணமுள்ள சந்தனம்;
பூசி - பூசி;
செருந்தி - செருந்தி;
சண்பகம் - சண்பகம்;
செங்கழு நீரொடு - செங்கழு நீர்;
குருந்து - குருந்து;
மல்லிகை - மல்லிகை;
கோங்கொடு - கோங்கு;
பிச்சி - பிச்சி;
கருமுகை புன்னை - கரிய நிறமுடைய புன்னை;
கடிகமழ் - மணம் கமழும்;
பாதிரி - பாதிரி; 

மருவிரி ஞாழன் மகிழ் இரு வாட்சி 
தாமரை முல்லை தழை அவிழ் கொன்றை 
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை 
காந்தள் ஆத்தி கடம்பு செவ் வந்தி 557

பொருள்

மணம் வருகின்ற குங்குமப்பூ, மகிழ்ச்சி தரும் இரு வாட்சி, தாமரை,

முல்லை, இதழ் அவிழும், கொன்றைப் பூ, மலர்ந்த நொச்சி, மலர்ந்த கரிய  குவளை, காந்தள், ஆத்தி, கடம்பு, செவ்வந்தி,                     

சொற்பொருள்

மருவிரி - மணம் வருகின்ற;
ஞாழன் - குங்குமப்பூ;
மகிழ் - மகிழ்ச்சி தரும்;
இரு வாட்சி - இரு வாட்சி;
தாமரை - தாமரை;
முல்லை - முல்லை;
தழை அவிழ் - இதழ் அவிழும்;
கொன்றை பூ - கொன்றைப் பூ;
மலர் நொச்சி - மலர்ந்த நொச்சி;
பூத்த மைக் குவளை - மலர்ந்த கரிய குவளை;
காந்தள் - காந்தள்;
ஆத்தி - ஆத்தி;
கடம்பு - கடம்பு;
செவ்வந்தி - செவ்வந்தி; 

வாய்ந்தநல் எருக்கு மலர்க்கர வீரம் 
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு 
முத்தலைக் கூவிளம் முதலிய சாத்தித் 
தூபதீ பங்கள் சுகம்பெறக் கொடுத்தே 561 

பொருள்

நல்லினத்து எருக்கு, அலரி ஆகிய மலர்கள் தூவினார்கள். பசிய நொச்சி, கொடியாகப் படர்கின்ற அறுகு, மூன்று இலைகள் கொண்ட வில்வம், முதலிய பத்திரங்களைச்  சாத்தினார்கள். சாம்பிராணி போன்ற தூபம். தீபங்கள் சுகம்பெறக் காட்டினார்கள். 

சொற்பொருள்

வாய்ந்தநல் - நல்லிணத்து;
எருக்கு - எருக்கு;
மலர்க்கர வீரம் - அலரி ஆகிய மலர்களைத் தூவினார்கள்;
பச்சிலை நொச்சி - பசிய நொச்சி;
படர்கொடி அறுகு - கொடியாகப் படர்கின்ற அறுகு;
முத்தலை - மூன்று இலைகள் கொண்ட;
கூவிளம் - வில்வம்;
முதலிய சாத்தித் - முதலிய பத்திரங்களைச்  சாத்தினார்கள்;
தூப - சாம்பிராணி போன்ற தூபம்;
தீபங்கள் - தீபங்கள்;
கம்பெற - சுகம்பெற;
கொடுத்தே - காட்டினார்கள்; 

அப்பம் மோதகம் அவல் எள் ளுருண்டை 
முப்பழந் தேங்காய் முதிர்மொழிக் கரும்பு 
சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன் 
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்  565 

பொருள்

அப்பம், மோதகம், அவல், எள்ளுருண்டை, முக்கனி, தேங்காய், கணுக்கள் உள்ள கரும்பு, சீனி, தேன், சர்க்கரை, செவ்விள நீருடன், பால், நறுமணம் வீசும் நெய், தயிர், பருப்புடன், அன்னம், 

சொற்பொருள்

அப்பம் - அப்பம்;
மோதகம் - மோதகம்;
அவல் - அவல்;
எள்ளுருண்டை - எள்ளுருண்டை;
முப்பழம் - முக்கனி;
தேங்காய் - தேங்காய்;
முதிர்மொழி - கணுக்கள் உள்ள.
கரும்பு - கரும்பு;
சீனி - சீனி;
தேன் - தேன்;
சர்க்கரை - சர்க்கரை;
செவ்விள நீருடன் - செவ்விள நீருடன்;
பால் - பால்;
நறு நெய் - நறுமணம் வீசும் நெய்;
தயிர் - தயிர்;
பருப்புடன் - பருப்புடன்;
போனகம் - அன்னம்; 

கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன் 
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி 
நோற்பது கண்டு நோலாது இருந்த 
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும் 569 

பொருள்

தேவருலகத்துக் கற்பக மரம் போல விரும்பியதைத் தரும் கடவுள் மகிழ்வெய்தும்படி அவர் முன்னிலையில் அழகுறப் படைத்தார்கள். பூசை செய்தார்கள். அவர்கள் நோன்பு நோற்பது கண்டு நோலாமல் இருந்த பாம்பு உருவில் இருந்த ஐந்து ஆயுதங்கள் தரித்த மகா விஷ்ணுவும், 

சொற்பொருள்

கற்பக - தேவருலகத்துக் கற்பக மரம் போல விரும்பியதைத் தரும்; (இன்னுமொரு பொருள் பா​றை​யைப் பிளந்து செய்யப்பட்டது என்பது.)

கடவுள் - கடவுள்;
களித்திட - மகிழ்வெய்தும்படி;
திருமுன் - முன்னிலையில்;
பொற்புறப் படைத்து - அழகுறப் படைத்தார்கள்;
பூசனை பண்ணி - பூசை செய்தார்கள்;
நோற்பது கண்டு - அவர்கள் நோன்பு நோற்பது கண்டு;
நோலாது இருந்த - நோலாமல் இருந்த;
பாப்புரு வாகிய - பாம்பு உருவில் இருந்த;
பஞ்சா யுதனும் - ஐந்து ஆயுதங்கள் தரித்த மகா விஷ்ணுவும்; 

குறிப்பு

விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள்: சங்கு, சக்கரம், கதை, வில், வாள். 

யாப்புறு கொங்கையீர் யானும் நோற் பேனென 
ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப் 
பாங்கொடுஇவ் விரதம் பரிந்துநோற் பித்தார் 
அண்டர்நா யகனாம் ஐங்கரன் அருளால் 573

பொருள்

நிரம்பிய கொங்கையுடையவர்களே நானும் நோற்பேன் என்று அங்கு அவன் தனக்கும் வேண்டி முறைப்படி இந்த விரதத்தை நோற்றார். தேவர்களின் தலைவனாகிய ஐந்து கரங்கள் கொண்ட விநாயகப் பெருமான் அருளால், 

சொற்பொருள்

யாப்புறு - நிரம்பிய;
கொங்கையீர் - கொங்கையுடையவர்களே;
யானும் - நானும்;
நோற் பேனென - நோற்பேன் என்று;
ஆங்கு - அங்கு;
அவன் - அவன்;.
தனக்கும் - தனக்கும்;
வேண்டுவது அளித்து - வேண்டி;
பாங்கொடு - முறைப்படி;
இவ் விரதம் - இந்த விரதத்தை; 
பரிந்துநோற் பித்தார் – பரிந்து நோற்றார்;
அண்டர் - தேவர்களின்;
நாயகனாம் - தலைவனாகிய;
ஐங்கரன் - ஐந்து கரங்கள் கொண்ட விநாயகப் பெருமான்;
அருளால் - அருளால்;

 

குருந்து


விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே 
உஞ்ஞைமா நகர்புகுந்து உமையொடு விமலன் 
கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும் 
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின் 577

பொருள்

விஷ்ணுவும் பழைய உருவம் பெற்று உச்சைனி நகரத்திற்கு சென்றார். உமா தேவியாரோடு மலங்கள் அற்ற சிவனின் தாமரை போன்ற மலர்ப்பாதங்களை வணங்கினார். பஞ்சு போன்ற மெல்லிய பாதங்களை உடைய உமாதேவியார் மனதில், 

சொற்பொருள் 

விண்டுவும் - விஷ்ணுவும்;
பண்டுஉள - பழைய; 
வேடம் - உருவம்;
பெற்றே - பெற்று;
உஞ்ஞைமா நகர்புகுந்து - உச்சைனி நகரத்திற்கு சென்றார்;
உமையொடு - உமா தேவியாரோடு;
விமலன் - மலங்கள் அற்ற சிவன்;
கஞ்சநாண் - தாமரை போன்ற;
மலர்ப்பதம் - மலர்ப்பாதங்களை;
கைதொழு திடலும் - வணங்கினார்;
பஞ்சிமென் - பஞ்சு போன்ற மெல்லிய; 
சீறடி - பாதங்களை உடைய;
பார்ப்பதி - உமாதேவியார்;
நெஞ்சின் - மனதில்; 

வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி 
யான் இடுஞ் சாபம் நீங்கியது ஏன் என 
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப 
இறையவன் இதற்குக் காரணம் ஏதென 581 

பொருள்

கடுங்கோபம் மிக, மலங்கள் அற்ற சிவனைப் பார்த்து “நான் இட்ட சாபம் ஏன் நீங்கியது” என்று மானின் கண் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவி மணிகள் பொருந்திய கதவினைச் சாத்தினாள். சிவபெருமான் இதற்கு (சாபம் நீங்கியதற்கு) காரணம் என்னவென்று திருமாலிடம் கேட்டார். 

சொற்பொருள்

வெஞ்சினம் - கடுங்கோபம்;
மிகுந்து - மிக;
விமலனை - மலங்கள் அற்ற சிவனை;
நோக்கி - பார்த்து;
யான் இடுஞ் சாபம் - நான் இட்ட சாபம்; 
நீங்கியது ஏன் என - ஏன் நீங்கியது என்று;
மானெடுங் கண்ணி - மானின் கண் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவி;
மணிக்கதவு அடைப்ப - மணிகள் பொருந்திய கதவினைச் சாத்தினாள்;
இறையவன் - சிவபெருமான்;
இதற்கு - இதற்கு(சாபம் நீங்கியதற்கு);
காரணம் - காரணம்;
ஏதென - என்னவென்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார்; 

மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான் 
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளை அன்று எனக்குத் 
தந்து அருள் புரிந்த தவப்பயன் ஈதெனச் 
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும் 585

பொருள்

பொங்கும் அலைகள் கொண்ட பாற்கடலில் துயிலும் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து கூறினார்; “வளைந்த கொம்பு ஒன்று உடைய பிள்ளையார் அன்று எனக்கு தந்து அருள் செய்தார். நான் நோற்ற நோன்பின் பயன் இது”. 

சொற்பொருள்

மறிகடல் - பொங்கும் அலைகள் கொண்ட பாற்கடல்;
துயிலும் - துயிலும்;
மாயவன் - மகாவிஷ்ணு;
உரைப்பான் - கூறினார்;
பிறைமருப்பு - வளைந்த கொம்பு;
ஒன்றுடை - ஒன்று உடைய;
பிள்ளை -பிள்ளையார்;
அன்று - அன்று;
எனக்கு - எனக்கு;
தந்து - தந்து;
அருள் புரிந்த - அருள் செய்தார்;
தவப்பயன் - நான் நோற்ற நோன்பின் பயன்;
ஈதென - இது என்று;
சிந்தை -  மனம்;
மகிழ்ந்து - மகிழ்ந்து;
தேவர் தேவனும் - தேவர்கள் தலைவனும்;  

பூங்கொடி அடைத்த பொன் தாழ் நீங்கச் 
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி 
இக்கதை சொல்ல அக்கணி சடையனும் 
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின் 589

பொருள்

உமாதேவி மூடிய பொன்னாலான பூட்டுத் திறக்க, கூரிய சக்கரத்தைக் கையில் ஏந்திய மகாவிஷ்ணு இக்கதை சொல்ல, எலும்பு மாலை சூட்டப் பெற்ற சடையனும் (சிவபெருமான்) மிக நல்ல சஷ்டி விரதம் விருப்பமுடன் நோற்றார்,

சொற்பொருள்

பூங்கொடி - உமாதேவி;
அடைத்த - மூடிய;
பொன் தாழ் - பொன்னாலான பூட்டு;
நீங்க - திறக்க;
சாங்குமுன் - ஒருவித அம்பு;
உரைத்த - கூறிய;
சக்கர பாணி - சக்கரத்தைக் கையில் ஏந்திய மகாவிஷ்ணு;
இக்கதை சொல்ல - இக்கதை சொல்ல;
அக்கணி - எலும்பு மாலை சூட்டப் பெற்ற;
சடையனும் - சடையனும்;
மிக்கநல் - மிக நல்ல;
விரதம் -  சஷ்டி விரதம்;
விருப்புடன் - விருப்பமுடன்;
நோற்றபின் - நோற்றபின்; 

மாதுமை அடைத்த வன்தாழ் 
நீக்கி நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான் 
நானோ வந்து நகையா னது எனத் 
தேன் நேர் மொழியாள் தெளியக் கூறென 593 

பொருள்

உமாதேவி, அடைத்த கதவு திறந்து சிவனிடம் வந்து சேரசிவன் சிரித்தார், “நான் வந்தது ஏன் சிரிப்பிற்கு இடமானது என்று தெளிவாகக் சொல்லுங்கள்” என்று தேன் போன்ற இனிய குரலையுடைய உமை கேடடாள்.

சொற்பொருள்

மாதுமை - உமாதேவி;
அடைந்த - அடைத்த
வன்தாழ் - கதவு;
நீக்கி - திறந்து;
நாதனை - சிவனிடம்;
நணுகிட - வந்து சேர;
நம்பனும் - கடவுள், சிவன்;
நகைத்தான் - சிரித்தார்;
நானோ வந்து - நான் வந்தது;
நகையானது எனத் - ஏன் சிரிப்பிற்கு இடமானது என்று;
தேன் நேர் - தேன் போன்ற இனிய; 
மொழியாள் – குரலையுடைய; 
தெளியக் கூறென - தெளிவாகக் சொல்லுங்கள் என்று உமை கேடடாள்; 

நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் 
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து 
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென 
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப் 597 

பொருள்

“நல்ல சந்திரனைப் போன்ற நெற்றி உடையவளே [குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நால் வகைப் பட்ட நிலமுடைய] பூமியில் உன்மகன் நோன்பின் உறுதிப்பாட்டை நினைந்து மனம் மகிழ்ந்து சிரித்தேன்” என்று சொன்னார். முடிவில்லாத தேவனைத் தெரிந்தெடுத்த அணிகலன் அணிந்தவள் வணங்கி, 

சொற்பொருள்

நன்மதி - நல்ல சந்திரனைப் போன்ற;
நுதலாய் - நெற்றி உடையவளே;
நானிலந் தன்னில் - [குறிஞ்சி,முல்லை, நெய்தல், மருதம் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடைய] பூமியில்;
உன்மகன் - உன்மகன்;
நோன்பின் - நோன்பின்;
உறுதி அறிந்து - உறுதிப்பாட்டை;
சிந்தை - மனம்;
மகிழ்ந்து - மகிழ்ந்து;
சிரித்தேன் யானென - சிரித்தேன் என்று சொன்னார்;
அந்தமில் முடிவில்லாத;
அரனை - தேவனை;
ஆயிழை - (ஆய்- + இழை) தெரிந்தெடுத்த அணிகலன் அணிந்தவள்;
வணங்கி- வணங்கி;  

பெருஞ்சூர் அறவேல் போக்கிய குமரன் 
வரும்படி யானும் வருந்திநோற் பேனென 
இறைவன் கதை சொல் ஏந்திழை நோற்றபின் 
குறமட மகளைக் குலமணம் புணர்ந்தோன் 601 

பொருள்

சூரபத்மனை அழிக்கும்படியாக வேலெறிந்த (தேசாந்தரம் போன) குமரன் மீண்டும் என்னிடம் வரும்படி நானும் வருந்தி நோற்பேன் என்று சொன்னார். இறைவன் சஷ்டி விரதத்தின் வரலாற்றைக் கூற அழகிய ஆபரணம் அணிந்த உமாதேவி அவ்விரதத்தை நோற்றபின் குறவர் குலத்திலே பிறந்த வள்ளியம்மையாரை திருமணம் செய்துகொண்ட குமரன்,

சொற்பொருள்

பெருஞ்சூர் - சூரபத்மனை;
அற - அழிக்கும்படியாக;
வேல் போக்கிய - வேலெறிந்த;
குமரன் - (தேசாந்தரம் போன) குமரன்;
வரும்படி - மீண்டும் என்னிடம் வரும்படி;
யானும் - நானும்;
வருந்திநோற் பேனென - வருந்திநோற் பேன் என்று சொன்னார்;
இறைவன் - இறைவன் ;
கதை சொல் - சஷ்டி விரதத்தின் வரலாற்றைக் கூற;
ஏந்திழை - அழகிய ஆபரணம் அணிந்த உமாதேவி;
நோற்றபின் - அவ்விரத்ததை நோற்றபின்;
குறமட மகளை - குறவர் குலத்திலே பிறந்த வள்ளியம்மையாரை; 
குலமணம் - திருமணம்;
புணர்ந்தோன் - செய்துகொண்ட குமரன்; 

சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து 
தாதுமை வண்டு உழுந் தாமத் தாமனும் 
மாதுமை யாளை வந்து கண் டனனே 
கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனத் 605 

பொருள்

பிரகாசிக்கின்ற வேற்படை உடையோன் பழைய வினை தீர்ந்து கரிய வண்டுகள் விழுந்து மகரந்தங்களை உண்ணும் தாமரை மாலை அணியும் சிவபெருமானையும் உமாதேவியாரையும் வந்துசந்தித்தார். நீ கண்ணில்லாத பாம்பு ஆகு என்று

சொற்பொருள்

சுடர்வடி வேலோன் - பிரகாசிக்கின்ற வேற்படை உடையோன்; 
தொல்வினை - பழைய வினை;
தீர்ந்து - தீர்ந்து;
தாது மை வண்டு - கரிய வண்டுகள்;
உழுந் தாமத் - விழுந்து மகரந்தங்களை உண்ணும்;
தாமனும் - தாமரை மாலை அணியும் சிவபெருமானையும்;
மாதுமை யாளை - உமாதேவியாரையும்;
வந்து கண் டனனே - வந்துசந்தித்தார்;
கண்ண – கண்ணனே;
நீ கண்ணிலா – நீ கண்ணில்லாத;
கட்செவி யாகென - பாம்பு ஆகு என்று; 

குறிப்பு

“நீ கண்ணில்லாத” என்று தொடங்கும் 605 வரியிலிருந்து 615 வரி வரை நாரதர் சொல்லிய கதை. 

தண்ணருங் குழல் உமை சாபம் இட் டதுவும் 
அக்குநீறு அணியும் அரன் முதல் அளித்த 
விக்கின விநாயகன் விரதம் நோற்று அதன்பின் 
சுடர்கதை ஏந்துந் துளவ மாலையன் 609 

பொருள்

குளிர்ந்த கரிய கூந்தலுடைய உமாதேவி சாபம் இட்டகதையும், உருத்திராடசமும் திருநீறும் அணியும் சிவபெருமான் முதல் பெற்ற விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப்பெருமானின் சஷ்டி விரதம் நோற்று அதன்பின் ஒளியுள்ள கதாயுதத்தைக், கையில் வைத்திருந்து துளசி மாலை அணிந்த திருமால், 

சொற்பொருள்

தண்ணருங் குழல் - குளிர்ந்த கரிய கூந்தலுவடைய
உமை சாபம் - உமாதேவி சாபம் 
இட் டதுவும் - இட்டகதையும்;
அக்கு - உருத்திராட்சமும்;
நீறு - திருநீறும்;
அணியும் - அணியும்;
அரன் - சிவபெருமான்;
முதல் அளித்த - முதல் பெற்ற;
விக்கின - விக்கினங்களைத் தீர்க்கும்;
விநாயகன் - விநாயகப்பெருமானின்;
விரதம் - சஷ்டி விரதம்;
நோற்று - நோற்று;
அதன்பின் - அதன்பின்;
சுடர்கதை - ஒளியுள்ள கதாயுதத்தையும்;
ஏந்துந் - கையில் வைத்திருந்து;
துளவ - துளசி;
மாலையன் - மாலை அணிந்த திருமால்; 

விடப்பணி உருவம் விட்டுநீங் கியதும் 
பரிவுகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக் 
கவுரி அன்று அடைத்த கபாடந் திறந்ததும் 
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் 613 

பொருள்

விஷப்பாம்பு உருவம் விட்டு நீங்கியதும், அன்பு செய்யும், பஞ்ச கிருத்தியங்களை செய்யும் சிவபெருமானும், நோற்று உமை அன்று பூட்டிய கதவு திறந்ததும், வாசமுள்ள மெல்லிய கூந்தலையுடைய உமாதேவியார் நோற்று, 

சொற்பொருள்

விடப்பணி - விஷப்பாம்பு;
உருவம் - உருவம்;
விட்டு நீங்கியதும் - விட்டு நீங்கியதும்;
பரிவுகொள் - அன்பு செய்யும்;
கூத்துடை- பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும்;
பரமனும் - சிவபெருமானும்;
நோற்று - நோற்று;
கவுரி அன்று - உமை அன்று;
அடைத்த - பூட்டிய;
கபாடந் திறந்ததும் - கதவு திறந்ததும்;
வாச - வாசமுள்ள;
மென் குழலுடை - மெல்லிய கூந்தலையுடைய;
மாதுமை - உமாதேவியார்;
நோற்ப - நோற்று; 

குறிப்பு

பஞ்ச கிருத்தியங்கள்: படைத்தல்,  காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்; 

தேசம் போகிய செவ்வேள் வந்ததும் 
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் 
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே 
இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை 617

பொருள்

பரதேசம் போன குமரன் வந்து சேர்ந்ததுவும், (முன்னர்) தேவர்கள் நோற்று வரங்கள் பெற்றதும், ஆகிய கதைகளை நாரத முனிவர் சொல்லக் கேட்டு இப் பூவுலகில் இந்த இவ்விர தத்தை, 

சொற்பொருள்

தேசம் - பரதேசம்;
போகிய - போன;
செவ்வேள் - குமரன்;
வந்ததும் - வந்து சேர்ந்ததுவும்;
வானவர் - (முன்னர்) தேவர்கள்;
நோற்று - நோற்று;
வரங்கள் - வரங்கள்;
பெற்றதும் - பெற்றதும் ஆகிய கதைகளை;
நாரத முனிவன் - நாரத முனிவர்;
நவின்றிட - சொல்ல;
கேட்டே - கேட்டு;
இந்நிலந் தன்னில் - இப் பூவுலகில்;
இவ்விர தத்தை - இந்த இவ்விரதத்தை;

மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் 
காயத் தெழுந்த கடும்பிணி தீர்ந்து 
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 
தடமுலைத் திலோத்தமை தனைமணம் புணர்ந்து 621 

பொருள்

மன்னன் வச்சிரமாலி முன்னர் நோற்று தன் உடம்பில் தோன்றிய கொடிய நோய் தீர்ந்து இந்தப் பூமியில் மன்னனாக வாழ்ந்து பெரிய முலை அழகியான திலோத்தமையை விவாகம் செய்துகொண்டு,

சொற்பொருள்

மன்னவன் - மன்னன்;
வச்சிர மாலி - வச்சிர மாலி;
முன் நோற்று - முன்னர் நோற்று;
காயத் தெழுந்த - தன் உடம்பில் தோன்றிய;
கடும்பிணி - கொடிய நோய்;
தீர்ந்து - தீர்ந்து;
மாயிரும் புவியின் (மா+இரும்) - இந்தப் பூமியில்;
மன்னனாய் - மன்னனாக;
வாழ்ந்து - வாழ்ந்து;
தடமுலைத் - பெரிய முலை அழகியான;
திலோத்தமை - திலோத்தமையை;
தனைமணம் புணர்ந்து - விவாகம் செய்துகொண்டு; 

மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக் 
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் 
பரிவொடுஇவ் விரதம் பாரகந் தன்னில் 
விரைகமழ் நறுந்தார் விக்கிரமா தித்தன் 625 

பொருள்

இளம் காளைகள் போல் பல மைந்தர்களைப் பெற்று வாழ்க்கை முடிவில் திருக்கைலாயத்தை அடைந்து இன்புற்றான். இரக்கத்தோடு இந்த விரதத்தை இப் பூமியில் வாசனை வீசுகின்ற நறு மனம் கமழும் மாலை அணிந்த விக்கிரமாதித்தன், 

சொற்பொருள்

மழவிடை - இளம் காளைகள்;
போற்பல - போல்பல;
மைந்தரை - மைந்தர்களை;
பெற்று - பெற்று;
கடைமுறை - வாழ்க்கை முடிவில்;

வெள்ளியங் கயிலையில் - திருக்கைலாயத்தை;
உற்றான் - அடைந்து இன்புற்றான்;
பரிவொடு - இரக்கத்தோடு;
இவ் விரதம் - இந்த விரதத்தை;
பாரகந் தன்னில் - இப் பூமியில்;
விரைகமழ் - வாசனை வீசுகின்ற;
நறுந்தார் - நறு மனம் கமழும் மாலை அணிந்த;
விக்கிரமா தித்தின் - விக்கிரமாதித்தன்; 

மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் 
மற்றவன் காதன் மடவரல் ஒருத்தி 
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி 
மெத்த அன் புடன் இவ் விரதம் நோற் பேனென 629 

பொருள்

கடல் சூழ்ந்த இராச்சியம் வேண்டி வருந்தி நோற்றிடும் போது அவன் காதல் மனைவி ஒருத்தி இல்லை என்னும்படியான சிறிய இடையை உடையவள், இலக்கணசுந்தரி என்னும் பெயர் கொண்டவள், மிகுந்த அன்புடன் இவ்விரதத்தை அனுட்டிப்பேன் என்று விரதம் பூண்டாள். சொற்பொருள் 

சொற்பொருள்

மறிகடற் - கடல் சூழ்ந்த;
புவிபெற - இராச்சியம் வேண்டி;
வருந்தி - வருந்தி;
நோற்றிடுநாள் - நோற்றிடும்போது
மற்றவன் - அவன்;
காதன் மடவரல் - காதல் மனைவி;
ஒருத்தி - ஒருத்தி;
இற்றிடும் - இல்லை என்னும்படியான 
இடையாள் - சிறிய இடையை உடையவள்;
இலக்கண சுந்தரி - இலக்கணசுந்தரி என்னும் பெயர் கொண்டவள்;
மெத்த அன் புடன் - மிகுந்த அன்புடன்;
இவ் விரதம் - இவ்விரதத்தை;
நோற் பேனென - அனுட்டிப்பேன் என்று விரதம் பூண்டாள்; 

அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் 
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் 
உற்ற நோன்பின் உறுதி மறந்து 
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து 633 

பொருள்

கையில் காப்புக் கட்டி மனம் மகிழ்ந்து சிலநாள் விரதம் இருந்தபின் செய்துகொண்டிருக்கும் விரதத்தின் உறுதி மறந்து கட்டிய காப்பை அப்பெண் (இலக்கணசுந்தரி) அவிழ்த்து, 

சொற்பொருள்

அத்தந் – கை;
தன்னில் - தன்னில்;
அணியிழை - காப்பு;
செறித்து - கட்டி;
சித்தம் - மனம்;
மகிழ்ந்து - மகிழ்ந்து;
சிலநாள் - சிலநாள்;
நோற்றபின் -  விரதம் இருந்தபின்;
உற்ற நோன்பின் - செய்துகொண்டிருக்கும் விரதத்தின்;
உறுதி மறந்து - உறுதி மறந்து;
கட்டிய - கட்டிய;
இழையை - காப்பை; 
காரிகை - அப்பெண் (இலக்கணசுந்தரி);
அவிழ்த்து - அவிழ்த்து; 

வற்றிய கொவ்வையின் மாடே போட 
ஆங்கு அது தழைத்தே அலருந் தளிருமாய் 
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு 
வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை இருந்த 637 

பொருள்

காய்ந்த கொவ்வை மரத்தின் மேல் போட்டாள் அங்கு அது தழைத்து பூவும் தளிருமாக அழகாக ஓங்கி படர்வதைக் கண்டு வேப்பஞ் சேரியில் விக்கிரமாதித்தனால் வெறுக்கப்பட்டு சிறையிடப்பட்டு இருந்த அவனுடைய இன்னொரு மனைவி, 

சொற்பொருள்

வற்றிய - காய்ந்த;
கொவ்வையின் - கொவ்வை மரத்தின்;
மாடே - மேல்;
போட- போட்டாள்; 
ஆங்கு - அங்கு;
அது - அது;
தழைத்தே - தழைத்து;
அலருந் - பூவும்;
தளிருமாய் - தளிருமாக;
பாங்குற - அழகாக;
ஓங்கி - ஓங்கி;
படர்வது - படர்வதை;
கண்டு - கண்டு;
வேப்பஞ் சேரியிற் - வேப்பஞ் சேரியில்;
போய்ச்சிறை இருந்த - விக்கிரமதித்தனால் வெறுக்கப்பட்டு சிறையிடப்பட்டு இருந்த அவனுடைய இன்னொரு மனைவி; 

பூப்பயில் குழல்சேர் பொற்றொடி ஒருத்தி 
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் 
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 
இழையது கிடப்பக் கண்டு அவள் எடுத்துக் 641 

பொருள்

பூ நிறைந்த கூந்தலை உடைய பொன்னாலான காப்புகளை அணிந்த ஒருத்தி வஞ்சகம் இல்லாதவள் அந்த இடத்தில் கொவ்வை இலை கொய்வதற்காக வந்தபோது (காப்பு) நூல் கிடக்கக் கண்டு அவள் எடுத்து,

 

சொற்பொருள்

பூப்பயில் - பூக்கள் நிறைந்த;
குழல்சேர் - கூந்தலை உடைய;
பொற்றொடி - பொன்னாலான காப்புகளை; (பொற்கொடி என்று பொருள்கொள்வாரும் உளர்)
ஒருத்தி - ஒருத்தி;
அவ்வியம் - வஞ்சகம்; 
இல்லாள் - இல்லாதவள்;
அவ்விடந் தன்னிற் - அந்த இடத்தில்;
கொவ்வை - கொவ்வை;
அடகு - இலை;
கொய்வாள் - கொய்வதற்காக;
குறுகி - கணப்போது;
இழையது - (காப்பு) நூல்;
கிடப்பக் - கிடக்கக்;
கண்டு - கண்டு ;
அவள் - அவள்;
எடுத்து - எடுத்து; 

குழைதவழ் வரிவிழிக் கோதைகைக் கட்டி 
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் 
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் 
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து 645 

பொருள்

காதணியோடு உரசுகின்ற நீண்ட கண்களை உடைய பெண் கையில் காப்பாகக் கட்டி அப்பம், வெற்றிலை பாக்கு, பல நைவேத்தியங்கள் முறைப்படி படைத்து, அழகிய ஆபரணம் அணிந்தவள் விரதம் இருக்க யானை முகத்தையுடைய கடவுள் கருணை கூர்ந்து, 

சொற்பொருள்

குழைதவழ் - காதணியோடு உரசுகின்ற;
வரிவிழிக் - நீண்ட கண்களை உடைய;
கோதை - பெண்;
கைக் கட்டி - கையில் காப்புக் கட்டி;
அப்பமோடு - அப்பம்;
அடைக்காய் - வெற்றிலை பாக்கு;
அவைபல - பல நைவேத்தியங்கள்; 
வைத்து - படைத்து;
செப்ப முடனே - முறைப்படி;
திருந்திழை - அழகிய ஆபரணம் அணிந்தவள்; 
நோற்றிட - விரதம் இருக்க; 
கரிமுகத்து - யானை முகத்தையுடைய;
அண்ணல் - கடவுள்;
கருணை கூர்ந்து - கருணை கூர்ந்து;  

பண்டையில் இரட்டிப் பதம் அவட்கு அருளக் 
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் 
விக்கிரமா தித்தன் விழிதுயில் கொள்ள 
உக்கிர மான உடைமணி கட்டித் 649 

பொருள்

முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு பதவி உயர்ச்சி அவளுக்கு அருள் செய்தார். அவள் கொடுத்த பிரசாத்தைக் கொண்டுபோய் அரசனும் கோயிலுள் வைத்தான். விக்கிரமா தித்தன் உறங்கும்போது கோபமான (உருவம் கொண்டு) அரையில் மணி கட்டியபடி,

 சொற்பொருள்

பண்டையில் - முன்பிருந்ததை விட;
இரட்டிப் பதம் - இரண்டு மடங்கு பதவி உயர்வு;
அவட்கு - அவளுக்கு;
அருளக் - அருள் செய்தார்;
கொண்டுபோய் - அவள் கொடுத்த பிரசாத்தைக் கொண்டுபோய்;
அரசனும் - அரசனும்;
கோயிலுள் - கோயிலுள்;
வைத்தான் - வைத்தான்;
விக்கிரமா தித்தன் - விக்கிரமா தித்தன் ;
விழிதுயில் கொள்ள - உறங்கும்போது;
உக்கிர மான - கோபமான (உருவம் கொண்டு)
உடைமணி கட்டி - அரையில் மணி கட்டியபடி; 

தண்டையுஞ் சிலம்புந் தாளினின்று ஒலிப்பக் 
கொண்டல் போல் வருங் குஞ்சர முகத்தோன் 
மனமிகக் கலங்கும் மன்னவன் தன்னிடங் 
கனவினில் வந்து காரண மாக 653 

பொருள்

காலணி கால்களிருந்து சப்தம் செய்யக் காற்றுப் போல வரும் யானை முகத்தோன் மனம் மிகவும் கலங்கும் மன்னனிடம் கனவினில் வந்து காரணத்தோடு, 

சொற்பொருள்

தண்டையும் - காலணி;
சிலம்பும் - இன்னுமொருவகையான காலணி;
தாளினின்று - கால்களிருந்து;
ஒலிப்ப - சப்தம் செய்ய;
கொண்டல் போல் - காற்று போல்;
வரும் - வரும்;
குஞ்சர முகத்தோன் - யானை முகத்தோன்;
மனமிக - மனம் மிகவும்;
கலங்கும் - கலங்கும்;
மன்னவன் தன்னிடம் - மன்னனிடம்;
கனவினில் வந்து - கனவினில் வந்து;
காரண மாக - காரணத்தோடு; 

இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற் 
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனக் 
துண்ணென எழுந்து துணைவியை நோக்கிக் 
கண்ணுறக் கண்ட கனவின் காரணம் 657 

பொருள்

“இலக்கணசுந்தரி இந்த வீட்டில் இருந்தால் குழப்பம் வந்திடும் அவளை வெளியேற்றிவிடு அப்பால்”, (என்று கூறினார்). உடனே எழுந்து மனைவியைப் பார்த்து கண்ட கனவின் காரணம்,

சொற்பொருள் 

இலக்கண சுந்தரி - இலக்கணசுந்தரி;
இம்மனை - இந்த வீட்டில்;
இருக்கில் - இருந்தால்; 
கலக்கம் - குழப்பம்;
வந்திடும் - வந்திடும்;
கழித்திடு - அவளை வெளியேற்றிவிடு;
புறத்தென - அப்பால்; 
துண்ணென - திடீரென்று;
எழுந்து - எழுந்து;
துணைவியை - மனைவியை;
நோக்கி - பார்த்து; 
கண்ணுறக் கண்ட - கண்ணால் கண்ட;
கனவின் - கனவின்;
காரணம் - காரணம்;  

அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் 
ஆனை குதிரை அவைபல மடிவுற 
மாநகர் கேடுறும் வகையது கண்டு 
இமைப்பொழுது இவள் இங்கு இருக்கலா காது என 661 

பொருள்

விநாயகப் பெருமான் சொல்லிய படி ஆனை குதிரை அவைபல மடிந்தன (அவனுடைய) பெரிய நகரத்தில் தீமைகள் உண்டாகும் விதம் அறிந்து ஒரு கணநேரங் கூட இவள் இங்கு, 

சொற்பொருள்

அண்ணல் - விநாயகப் பெருமான்;
உரைத்திடும் - சொல்லிய;
அவ்வழி தன்னில் - முறையில்;
ஆனை -ஆனை;
குதிரை - குதிரை;
அவைபல - அவைபல;
மடிவுற - மடிந்தன;
மாநகர் - (அவனுடைய) பெரிய நகரம்
கேடுறும் - தீமைகள் உண்டாகும்;
வகையது - விதம்;
கண்டு - அறிந்து;
இமைப்பொழுது - ஒருகணநேரங்கூட;
இவள் -இவள்;
இங்கு - இங்கு;
இருக்கலா காது என - இருக்கலா காது என; 

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர் 
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப 
மணியும் முத்தும் வலியகல் லாய்விட 
அணியிழை தன்னை அவனும் அகற்ற 665 

பொருள்

விக்கிரமாதித்தன் அப்புறப்படுத்திய பின்னர் (அவள்) ஒரு வியாபாரி வீட்டில் புகுந்து இருக்க மணியும் முத்தும் வலிய கல்லாக மாறின. ஆபரணங்களை அணிந்தவளை (இலக்கணசுந்தரி) வணிகனும் அப்புறப்படுத்தினான். 

சொற்பொருள்

அயற்கடை அவனும் - விக்கிரமாதித்தன்;
அகற்றிய பின்னர் - அப்புறப்படுத்திய பின்னர் ;
வணிகன் - வியாபாரி;
தனது மனை - வீட்டில்;
புகுந்து - புகுந்து;
இருப்ப - இருக்க;
மணியும் - மணியும்;
முத்தும் - முத்தும்;
வலியகல் லாய்விட - வலிய கல்லாக மாறின; 
அணியிழை தன்னை - ஆபரணங்களை அணிந்தவள் (இலக்கணசுந்தரி)
அவனும் அகற்ற - வணிகனும் அப்புறப்படுத்தினான்; 

உழவர்தம் மனையில் உற்று அவள் இருப்ப 
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற 
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர் 
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் 669 

பொருள்

அதன் பின்னர் அவள் ஒரு விவசாயியின் வீட்டிற்குச் சென்றாள். அவள் அங்கு இருக்க வளர்கின்ற பயிர் அழிந்து செல்வம் குன்றியது. அந்த வீட்டிலிருந்து விவசாயியும் அவளை அப்புறப்படுத்தினான், அதன் பின்னர் ஒரு குயவன் வீட்டிற்கு வேலைத்திறமமைந்தகை வளையல்களை அணிந்திருக்கும் (இலக்கணசுந்தரி) சென்றாள். 

சொற்பொருள் 

உழவர்தம் மனையில் - அதன் பின்னர் அவள் ஒரு விவசாயியின் வீட்டிற்குச் சென்றாள்;
உற்று -உற்று,சென்று;
அவள் இருப்ப - அவள் அங்கு இருக்க;
வளர்பயிர் - வளர்கின்ற பயிர்;
அழிந்து - அழிந்து;
அயன்மனை - அந்த வீட்டிலிருந்து;
அவரும் - விவசாயியும்;
அகற்றிய பின்னர் - அப்புறப்படுத்தினான், அதன் பின்னர்;
குயவன் மனையிற் - ஒரு குயவன் வீட்டிற்கு;
கோற்றொடி செல்லக் – வேலைத்திறமை மிக்க கை வளையல்களை அணிந்திருக்கும் (இலக்கணசுந்தரி) சென்றாள்;   

குயக்கல முடைந்து கொள்ளை போக 
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர் 
தூசுதூய் தாக்குந் தொழிலோர் மனைபுகத் 
தூசுகள் எல்லாந் துணிந்துவே றாகத் 673 

பொருள்

அவனுடைய மட்பாண்டங்கள் உடைந்து அழிவதும், கொள்ளை போவதுமாக இருந்தன. அக் குயவனும் (இலக்கணசுந்தரியை) அப்புறப்படுத்தினான். அதன் பின்னர் சலவைத் தொழில் செய்பவனுடைய வீட்டிற்குச் சென்றாள். (அங்கு அவனுடைய) துணிகள் எல்லாம் கிழிந்து போயின. 

சொற்பொருள்

குயக்கலம் - அவனுடைய மட்பாண்டங்கள்;
உடைந்து - உடைந்து அழிவதும்;
கொள்ளை போக - கொள்ளை போவதுமாக இருந்தன;
அயற்கடை அவனும் - அக் குயவனும்;
அகற்றிய - (இலக்கணசுந்தரியை) அப்புறப்படுத்தினான்;
பின்னர் - அதன் பின்னர்;
தூசுதூய் தாக்குந் - சலவை;
தொழிலோர் - தொழில் செய்பவனுடைய;
மனைபுக - வீட்டிற்கு சென்றாள்;
தூசுகள் எல்லாம் - துணிகள் எல்லாம்;
துணிந்து வே றாகத் - கிழிந்து போயின; 

தூசரும் அவளைத் தூரஞ் செய்ய 
மாலைக் காரன் வளமனை புகலும் 
மாலை பாம்பாம் வகையது கண்டு 
ஞாலம் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய் 677 

பொருள்

சலவை செய்பவரும் அவளைத் துரத்திவிட்டார். அதன் பின் ஒரு மாலைக் காரன் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தாள். மாலைகள் எல்லாம் பாம்பு ஆகின முறை கண்டு “உலகம் எல்லாம் கேடு படும்படி பிறந்திருக்கிறாய்”. 

சொற்பொருள்

தூசரும் - சலவை செய்பவரும் ;
அவளை- அவளை;
தூரஞ் செய்ய - துரத்திவிட்டார்;
மாலைக் காரன் - அதன் பின் ஒரு மாலைக் காரன்; 
வளமனை - வீட்டிற்கு;
புகலும் - தஞ்சம் புகுந்தாள்;
மாலை - மாலைகள் எல்லாம்;
பாம்பாம் - பாம்பு ஆகின;
வகையது கண்டு - முறை கண்டு;
ஞாலம் - உலகம்;
எல்லாம் - எல்லாம்;
நடுங்கவந்து - கேடு படும்படி;
உதித்தாய் - பிறந்திருக்கிறாய்; 

சாலவும் பாவி நீ தான்யார் என்ன 
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா 
அம்மனை அவனும் அகற்றிய பின்னர் 
அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப 681 

பொருள்

“மிகவும் பாவியாகிய நீ யார்”, என்று கேட்டு மிகவும் மனவருத்தம் கொண்டு கோபத்தோடு அந்த வீட்டிலிருந்து மாலைக்காரனும் துரத்திவிட்டான். அதன் பின்னர் ஒரு மூதாட்டியின் வீட்டிற்கு அவள் சென்றாள். 

சொற்பொருள்

சாலவும் - மிகவும்;
பாவி நீ - பாவியாகிய நீ;
தான்யார் என்ன - யார் என்று கேட்டு;
வெம்மனம் - மனவருத்தம்;
மிகவும் - மிகவும்;
மேவி - கொண்டு;
முனிவுறா - கோபத்தோடு;
அம்மனை - அந்த வீட்டிலிருந்து ;
அவனும் - மாலைக்காரனும்;
அகற்றிய - துரத்திவிட்டான்.
பின்னர் - அதன் பின்னர்;
அவ்வை - ஒரு மூதாட்டியின்;
தன்மனை - வீட்டிற்கு; 
அவள் - அவள்;
புகுந்திருப்ப - சென்றாள்; 

அவ்வை செல்லும் அகங்கள் தோறும் 
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் 
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர் 
அவ்வை மீண்டுதன் அகமதிற் சென்று 685 

பொருள்

அம் மூதாட்டி செல்லும் வீடுகள் தோறும் வைதனர், எறிந்தனர், தடுத்துத் தள்ளினர், கையினால் குத்தினர், கண்டோர் பழித்தனர். அம் மூதாட்டி மீண்டும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று. 

சொற்பொருள்

அவ்வை - அம் மூதாட்டி;
செல்லும் - செல்லும்;
அகங்கள் தோறும் - வீடுகள் தோறும்;
வைதனர் - வைதனர்;
எறிந்தனர் -எறிந்தனர்;
மறிய - தடுத்து;
தள்ளினர் - தள்ளினர்;
கைகொடு - கையினால்;
குத்தினர் - குத்தினர்;
கண்டோர் - கண்டோர்;
பழித்தனர் - பழித்தனர்;
அவ்வை - அம் மூதாட்டி;
மீண்டு - மீண்டும்;
தன் - தன்னுடைய;
அகமதிற் - வீட்டிற்கு;
சென்று - சென்று; 

இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் 
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட 
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி 
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி 689 

பொருள்

“இப்படியான பெண்ணே நீ யார்” என்று கேட்டாள். காத்து ஆண்டு உலகு கருணையோடு ஆண்ட மார்த்தாண்டன் அரசனின் ஒரு மகள். எல்லாப் பிள்ளைகளுக்கும் மூத்தவள் இலக்கணசுந்தரி. 

சொற்பொருள்

இவ்வகை - இப்படியான; 
கன்னி - பெண்ணே;
நீ யாரென - நீ யாரென்று;
வினாவ - கேட்டாள்;
காத்தாண்டு - காத்து ஆண்டு;
உலகு - உலகு;
கருணையோடு - கருணையோடு;
ஆண்ட - ஆண்ட;
மார்த்தாண்ட - மார்த்தாண்டன்;
ராசன் -அரசனின்;
மாமகள் ஒருத்தி - ஒரு மகள்;
எல்லார்க்கும் - எல்லாப்பிள்ளைகளுக்கும்;
மூத்தாள் - மூத்தவள்;
இலக்கண சுந்தரி - இலக்கணசுந்தரி;  

சொல்லுவிக் கிரம சூரியன் மனையெனச் 
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி 
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச் 
சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள் 693 

பொருள்

புகழ் பெற்ற விக்கிரமாதித்தன் (சூரியன்=ஆதித்தன்) மனைவி என்று சீர் கெட்டு இருந்த பெண்ணைப் பார்த்துத் தண்ணீர் கொண்டுவந்து நிலத்தை மெழுகிவிடு என்று அவ்வை சொல்ல சாணி எடுக்க இலக்கணசுந்தரி சென்றாள், 

சொற்பொருள்

சொல்லு - புகழ் பெற்ற;
விக்கிரமசூரியன் - விக்கிரமாதித்தன் (சூரியன் - ஆதித்தன்);
மனையெனச் - மனைவி என்று;
சீர்கெட - சீர் கெட்டு;
இருந்த - இருந்த;
தெரிவையை - பெண்ணைப்;
நோக்கி - பார்த்து;
நீரது கொண்டு - தண்ணீர் கொண்டுவந்து;
நிலம்மெழு கிடுகென - நிலத்தை மெழுகிவிடு என்று மூதாட்டி சொல்ல;
சாணி எடுக்க - சாணி எடுக்க;
தையலும் - இலக்கணசுந்தரி;
சென்றாள் - சென்றாள்; 

சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப் 
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 
மான் நேர் விழியாள் வருந்துதல் கண்டு 
தானே சென்று சாணி எடுத்துத் 697 

பொருள்

சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றி பேணிய புழுவாகப் பெரிதாகத் தோன்ற மானின் கண்கள் போன்ற கண்களையுடைய இலக்கணசுந்தரி வருந்தக்கண்டு தானே சென்று சாணி எடுத்து,

 சொற்பொருள்

சாணியும் - சாணியும்;
உழுத்து - உழுத்து;
தண்ணீர் - தண்ணீர்;
வற்றி - வற்றி;
பேணிய - பேணிய;
புழுவாய் - புழுவாக;
பெரிது - பெரிதாக;
தோன்ற - தோன்ற;
மான் நேர் - மானின் கண்கள் போன்ற ;
விழியாள் - கண்களையுடைய;
வருந்துதல் கண்டு - வருந்தக்கண்டு;
தானே - தானே;
சென்று - சென்று;
சாணி எடுத்து - சாணி எடுத்து; 

தண்ணீர் கொணர்ந்து தரைமெழுக் கிட்டு
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் 
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் 
புத்தகம் பாம்பாய்ப் பொருந்திநின்று ஆட 701 

பொருள்

தண்ணீர் கொண்டுவந்து தரையை மெழுகி அலங்கரித்த வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் புத்தகம் எடுத்து வாவென்று (அவ்வை) கூறினாள். புத்தகம் ஒரு பாம்பாக மாறி நின்று படமெடுத்து ஆடியது. 

சொற்பொருள்

தண்ணீர் - தண்ணீர்;
கொணர்ந்து - கொண்டுவந்து;
தரைமெழுக் கிட்டு - தரையை மெழுகி;
மண்ணிய - அலங்கரித்த;
வீட்டில் – வீட்டில்;
மணிவிளக்கு - மணிவிளக்கு;
ஏற்றி - ஏற்றி;
புத்தகம் - புத்தகம்;
எடுத்து - எடுத்து;
வாவென - வாவென்று;
புகல - (அவ்வை) கூறினாள்;
புத்தகம் - புத்தகம்;
பாம்பாய் - ஒரு பாம்பாக;
பொருந்தி - மாறி;
நின்று ஆட - நின்று படமெடுத்து ஆடியது; 

மெத்த உள் நடுங்கி வீழ்ந்து அவள் கிடப்பக் 
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி 
அவ்வை தானே அகமதிற் சென்று 
புத்தகம் எடுத்துப் பொருந்தப் பார்த்து 705 

பொருள்

மிகவும் உள்ளம் நடுங்கி வீழ்ந்து அவள் கிடந்தாள். கொவ்வைப் பழம்போன்ற உதடுகள் உள்ள வாயை உடைய பெண்ணை விலக்கி அவ்வை தானே வீட்டிற்குள் சென்று புத்தகம் எடுத்து உரிய காரணத்தைப் பார்த்தாள்.

சொற்பொருள்

மெத்த - மிகவும்;
உள் - உள்ளம்;
நடுங்கி - நடுங்கி;
வீழ்ந்து - வீழ்ந்து
அவள் - அவள்;
கிடப்ப - கிடந்தாள்;
கொவ்வையங்கனி - கொவ்வைப் பழம்போன்ற:
வாய் - உதடுகள் உள்ள வாயை உடைய;
கோதையை விலக்கி - பெண்ணை விலக்கி;
அவ்வை தானே - மூதாட்டி தானே;
அகமதிற் சென்று - வீட்டிற்குள் சென்று;
புத்தகம் - புத்தகம்;
எடுத்து- எடுத்து;
பொருந்த - உரிய காரணத்தை;
பார்த்து - பார்த்தாள்;   

வித்தக நம்பி விநாயக மூர்த்தி 
கற்பகப் பிள்ளை செய் காரியம் இதுவென 
உத்தமி அவ்வை உணர்ந்து முன் அறிந்து 
தவநெறி பிழைத்த தையலை நோக்கி    709 

பொருள்

அறிவு மிக்க (சிவன்) மகன் விநாயக மூர்த்தி விநாயகர் பிள்ளை செய்த காரியம் இதுவென்று உத்தமி அவ்வை உணர்ந்து அறிந்து விரதம் தவறிய பெண்ணை நோக்கி, 

சொற்பொருள்

வித்தக நம்பி - அறிவு மிக்க (சிவன்) மகன்;
விநாயக மூர்த்தி - விநாயக மூர்த்தி;
கற்பகம் - வேண்டியதை எல்லாம் தரும் மரம்;
பிள்ளை - பிள்ளை;
செய் காரியம் - செய்த காரியம் 
இதுவென - இதுவென்று;
உத்தமி - உத்தமி;
அவ்வை - அவ்வை;
உணர்ந்து - உணர்ந்து;
முன் அறிந்து - அறிந்து;
தவநெறி - விரதம்;
பிழைத்த - தவறிய;
தையலை - பெண்ணை;
நோக்கி- நோக்கி;   

நுவலரும் விநாயக நோன்புநோற் றிடுகெனக் 
கரத்துமூ ஏழு இழைக் காப்புக் கட்டி 
அப்பமும் அவலும் மாம்பழ பண்டமுஞ் 
செப்பம தாகத் திருமுன் வைத்தே 713 

பொருள்

பிரசித்திபெற்ற விநாயக ருக்குரிய நோன்பு நோற் றிடுவென்று சொன்னாள். கையில் 21 (3 x07) இழைகளைக் கொண்ட காப்புக் கட்டி அப்பமும் அவலும் மாம்பழமும் பல பணிகாரமும் செப்பமாகப் படைத்தாள். 

சொற்பொருள்

நுவலரும் - பிரசித்திபெற்ற;
விநாயக - விநாயகருக்குரிய;
நோன்பு - நோன்பு;
நோற் றிடுகென - நோற்றிடுவென்று சொன்னாள்;
கரத்து - கையில்;
மூ ஏழு இழை - 21 (3 x7) இழைகளைக் கொண்ட;
காப்புக் கட்டி - காப்புக் கட்டி;
அப்பமும் - அப்பமும்;
அவலும் - அவலும்;
மாம்பழ- மாம்பழமும்    
பண்டமும் – பணிகாரமும்; 
செப்பம தாக - செப்பமாகப்;
திருமுன் வைத்தே - படைத்தாள்;  

அவ்வை கதை சொல்ல ஆயிழை கேட்டு 
மத்தகக் களிற்றின் மகாவிர தத்தை 
வித்தக மாக விளங்கு இழை நோற்றுக் 
கற்பக நம்பி கருணைபெற்றதன் பின் 717 


பொருள்
அவ்வை கதை சொல்ல; நல்ல ஆபரணங்களை அணிந்த பெண் (இலக்கணசுந்தரி) கேட்டு விநாயகரின் மிகப் பெரிய விர தத்தை நல்ல ஞானத்தோடு பிரகாசிக்கின்ற நூல் போன்ற மெல்லிய இடையை உடைய அவள் விரதமிருந்து கேட்டதைத் தருகின்ற குல மகன் கருணைபெற்றதன் பின், 

சொற்பொருள்

அவ்வை - அம் மூதாட்டி;
கதை சொல - சொல்ல;
ஆயிழை - நல்ல ஆபரணங்களை அணிந்த பெண் (இலக்கணசுந்தரி);
கேட்டு - கேட்டு;
மத்தகம் - யானை;
களிற்றின் - களிறு, ஆண்யானை; 
மகாவிர தத்தை - மிகப் பெரிய விரதத்தை;
வித்தக மாக - நல்ல ஞானத்தோடு;
விளங்கு இழை - பிரகாசிக்கின்ற நூல் போன்ற மெல்லிய இடையை உடைய
வள்;
நோற்று - விரதமிருந்து;
கற்பக - கேட்டத்தைத் தருகின்ற;
நம்பி - குல மகன்;
கருணைபெற்றதன் பின் - கருணைபெற்றதன் பின்; 

சக்கர வாள சைனியத் தோடு 
விக்கிரமா தித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி 
எவ்வகை செய்வோம் என உளம் மெலிந்தே 721 

பொருள்

சக்கரவாள மலைத் தொடர் போன்று நீண்ட சேனையோடு  விக்கிரமா தித்தன் வேட்டைக்குச் சென்று தானும் சேனையும் தண்ணீர் விரும்பி என்ன செய்வோம் என்று மனம் நொந்து, 

சொற்பொருள்

சக்கர வாள - சக்கரவாள மலைத் தொடர் போன்று நீண்ட;
சைனியத் தோடு - சேனையோடு;
விக்கிரமா தித்தன் - விக்கிரமா தித்தன் ;
வேட்டையிற் சென்று- வேட்டைக்குச் சென்று;
தானும் - தானும்;
சேனையும் - சேனையும்;
தண்ணீர் விரும்பி - தண்ணீர் விரும்பி;
எவ்வகை - என்ன;
செய்வோம் - செய்வோம்;
என உளம் - என்று மனம்;
மெலிந்தே - நொந்து;  

அவ்வை தன்மனை அங்கு அவர் அணுக
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு 
செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி 
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை  725 

பொருள்

அம் மூதாட்டியின் வீட்டை வந்தடைந்தான். தாகத்தின் கடுமையையும், இளைப்பின் சோர்வையும் கண்டு அறவே அவற்றை தீர்க்க எண்ணி இலக்கணசுந்தரி என்பவளை, 

சொற்பொருள்

அவ்வை தன்மனை - அவ்வையின் வீட்டை;
அங்கு அவர் அணுக - வந்தடைந்தான்;
எய்துந் தாகமும் - தாகத்தின் கடுமையையும்;
இளைப்புங் கண்டு - இளைப்பின் சோர்வையும் கண்டு;
செவ்வே - அறவே;
அவற்றை - அவற்றை;
தீர்க்க எண்ணி - தீர்க்க எண்ணி;
இலக்கணசுந்தரி - இலக்கணசுந்தரி;
என்பவள் தன்னை - என்பவளை;  

அப்பமும் நீரும் அரசற்கு அருளெனச் 
செப்பிய அன்னை திருமொழிப் படியே 
உண்ணீ ர்க் கரகமும் ஒருபணி காரமும்
பண்ணேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ 729

பொருள்

அப்பமும் நீரும் அரசற்குக்  கொடு என்று அவ்வையின் சொற்படி தண்ணீர் ஒரு கையிலும் ஒருபணிகாரமும் (அப்பம்) (இலக்கணசுந்தரி) இனிய குரலை உடையவள் அரசனுக்கு உதவ, 

சொற்பொருள்

அப்பமும் - அப்பமும்;
நீரும் - நீரும்;
அரசற்கு - அரசற்கு;
அருளெனச் - கொடு என்று;
செப்பிய அன்னை - அவ்வை;
திருமொழிப் - சொன்ன;
படியே - படியே;
உண்ணீ ர் - தண்ணீர்;
கரகமும் - ஒரு கையிலும்;
ஒருபணிகாரமும் - ஒருபணிகாரமும் (அப்பம்);
பண்ணேர் மொழியாள் -  இசை போன்ற இனிய குரலை உடையவள்;
பார்த்திபற்கு – அரசனுக்கு; உதவ; 

ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் 
அப்பசி தீர அருந்திய பின்னர் 
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் 
தானது தொலையாத் தன்மையைக் கண்டே 733

பொருள்

இசை போன்ற இனிய குரலை உடையவள் அரசனுக்கு உதவ, ஒப்பற்ற படையும் உயர்ந்த படை உடைய அரசனும் பசி தீர அருந்திய பின்னர் ஆனை, குதிரை அவைகளும், உண்டும் (அப்பமும் நீரும்) முடிவு பெறாமல் இருக்கும் தன்மையைக் கண்டு,

சொற்பொருள்

ஒப்பறு படையும் - ஒப்பற்ற படையும்;
உயர்படை - உயர்ந்த படை உடைய;
வேந்தனும் - அரசனும்;
அப்பசி தீர - பசி தீர;
அருந்திய பின்னர் 
ஆனை - ஆனை;
குதிரை - குதிரை;
அவைகளும் - அவைகளும்;
உண்டும் - உண்டும்; 
தானது தொலையாத - (அப்பமும் நீரும்) முடிவு பெறாமல் இருக்கும்;
தன்மையை - தன்மையை;
கண்டே - கண்டு; 

இவ்வகை சமைத்தநீ யாரென வினவ 
மவ்வல் அம் குழலாள் மௌனமாய் நிற்ப 
அவ்வை தான் சென்று அரசற்கு உரைப்பாள் கணபதி நோன்பின் காரணங் காண் இது 737 

பொருள்

“இவ்வாறு சமைத்த நீ யார்” என (அரசன்) கேட்டான். முல்லை கட்டிய அழகு கூந்தலை உடையவள் ஒன்றும் பேசாமல் நின்றாள். அவ்வை முன் சென்று அரசனுக்கு “தேவ கணங்களுக்குத் தலைவனாகிய விநாயகருக்குரிய விரதத்தின் பலன் இது என்பதைக் கண்டுகொள் என்று கூறினாள். 

சொற்பொருள்

இவ்வகை - இவ்வாறு;
சமைத்த - சமைத்த;
நீ யாரென - நீ யாரென;
வினவ - (அரசன்) கேட்டான்;
மவ்வல் - மௌவல், முல்லை;
அம் - அழகு;
குழலாள் - கூந்தலை உடையவள்;
மௌனமாய் நிற்ப - ஒன்றும் பேசாமல் நின்றாள்;
அவ்வை தான் - அவ்வை;
சென்று - முன் சென்று;
அரசற்கு - அரசனுக்கு;
உரைப்பாள் - கூறினாள்; 
கணபதி - தேவ கணங்களுக்குத் தலைவனாகிய விநாயகருக்குரிய;
நோன்பின் - விரதத்தின்;
காரணம் - காரணம்,பலன்;
காண் இது - இது என்று கண்டுகொள்; 

குணமுடை இவள்உன் குலமனை யாட்டி
இலக்கண சுந்தரி என்று அவ்வை கூற 
மங்கையை நோக்கி மனமிக மகிழ்ந்து  
திங்கள் நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் 741 

பொருள்

நல்ல குணமுடைய இவள் உன் மனைவி இலக்கணசுந்தரி” என்று அவ்வை சொன்னாள். பெண்ணைப் பார்த்து மனம் மகிழ்ந்தான். சந்திரனைப் போன்று பிரகாசிக்கின்ற வெள்ளியாலான பல்லக்கில் ஏற்றிக் கொண்டு,

சொற்பொருள்

குணமுடை - நல்ல குணமுடைய;
இவள்- இவள்;
உன் - உன்;
குலமனை யாட்டி - மனைவி;
இலக்கண சுந்தரி - இலக்கண சுந்தரி;
என்று அவ்வை கூற - என்று அவ்வை சொன்னாள்;
மங்கையை - பெண்ணைப்;
நோக்கி - பார்த்து;
மனமிக மகிழ்ந்து - மனம் மகிழ்ந்தான்; 
திங்கள் நேர் - சந்திரனைப் போன்று பிரகாசிக்கின்ற;
வெள்ளி - வெள்ளியாலான;
சிவிகையில் - பல்லக்கில்;
ஏற்றிக் கொண்டு - ஏற்றிக் கொண்டு;

கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் 
சிந்துர நுதலார் சென்று அடி பணியச் 
சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே 745 

பொருள்

தன்னுடைய நகரத்துள் சென்றான். வெற்றியுடைய அரசனும் சிவந்த காப்புக்கள் அணிந்திருக்கும் மனைவிமார்களுள் உயர்ந்த பதவி தந்தனன். சிவந்த நெற்றியையுடைய பணிப்பெண்கள் சென்று பணிவிடை செய்தார்கள். இலக்கணசுந்தரி சுகமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தாள். 

சொற்பொருள்

ஊர் புகுந்தான் - தன்னுடைய நகரத்துள் சென்றான்;
கொற்ற - வெற்றியுடைய;
வேந்தனும் - அரசனும்;
ஒண்தொடி யாரில் - சிவந்த காப்புக்கள் அணிந்திருக்கும் மனைவிமார்களுள்;
உயர்பதம் - உயர்ந்த பதவி;
உதவினன் - தந்தனன்;
சிந்துர - சிவந்த;
நுதலார் - நெற்றியையுடைய பணிப்பெண்கள்;
சென்று - சென்று;
அடி பணிய - பணிவிடை செய்தார்கள்;
சுந்தரி - இலக்கணசுந்தரி;
இருந்தாள் - இருந்தாள்;
சுகத்துடன் - சுகமாக;
மகிழ்ந்தே - மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தாள்; 

        காப்பு 

கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும் 
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் அருந்திக்
குணமுடை னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்கு காப்பு.  

பொருள்

கரும்பும் இளநீரும், கரிய எள்ளும், தேனும். விருப்பத்தைத் தருகின்ற அவல் பலவும் மேலும் மேலும் சாப்பிட்டு நல்ல குணமுடையவனாக வந்து குற்றங்கள் தீர்க்கும் கணபதியே இக்கதைக்கு காப்பு. 

சொற்பொருள்

கரும்பும் - கரும்பும்;
இளநீரும் - இளநீரும்;
காரெள்ளும் - கரிய எள்ளும்;
தேனும் - தேனும்;
விரும்பும் அவல் - விருப்பத்தைத் தருகின்ற அவல்;
பலவும் - பலவும்;
மேன்மேல் - மேலும் மேலும்;
அருந்திக் - சாப்பிட்டு;
குணமுடைனாய் - நல்ல குணமுடையவனாக;
வந்து - வந்து;
குற்றங்கள் - குற்றங்கள்;
தீர்க்கும்- தீர்க்கும்;
கணபதியே - கணபதியே;
இக்கதைக்கு - இக்கதைக்கு;
காப்பு - காப்பு; 


திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி 
வரும் அரன்தான் ஈன்றருளு மைந்தா – முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.  

பொருள்

செல்வம் கொழிக்கும் திருமாலின் மருமகனே இடப வாகனத்தில் ஏறி வரும் இறைவன் பெற்றேடுத்த மகனே முருகனுக்கு முன்பிறந்த யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானே உன்னை வணங்குகிறேன். என்கதைக்கு நீ எப்பொழுதும் காப்பு. 

சொற்பொருள்

திருவிளங்கு - செல்வம் கொழிக்கும்;
மான்மருகா - திருமாலின் மருமகனே;
சேவதனில் - இடப வாகனத்தில்;
ஏறி -ஏறி;
வரும் - வரும்;
அரன்தான் - இறைவன்;
ஈன்றருளு - பெற்றெடுத்த;
மைந்தா – மகனே;
முருகனுக்கு - முருகனுக்கு;
முன்பிறந்த - முன்பிறந்த;
யானை முகவா - யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானே;
உனைத்தொழுவேன் - உன்னை வணங்குகிறேன்;
என்கதைக்கு - என்கதைக்கு;
நீயென்றுங் - நீ எப்பொழுதும்;
காப்பு - காப்பு; 

நூற்பயன் 

பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும் 
மன்னும் நவமணியும் வந்து அணுகும் - உன்னி
ஒருகொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின் 
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.  

பொருள்

செல்வம் பெருகும். கல்வி பெருகும். பிள்ளைகள் பெருகுவார்கள். வேண்டிய எல்லாப் பொருள்களும் கிடைக்கும். பல நவமணிகளும் வந்து சேரும். மனதில் தியானித்து, ஒருகொம்பினையும் யானைமுகத்தையும் உடைய விநாயகப் பெருமானின் உத்தமமான விரதத்தின் சிறந்த கதையை கேட்பவர்கள் சிறந்து வாழ்வார்கள். 

சொற்பொருள்

பொன்னுமிகும் - செல்வம் பெருகும்;
கல்விமிகும் - கல்வி பெருகும்;
புத்திரரோடு - பிள்ளைகள் பெருகுவார்கள்;
எப்பொருளும் - வேண்டிய எல்லாப் பொருள்களும் கிடைக்கும்;
மன்னும் நவமணியும் - பல நவமணிகளும்;
வந்து அணுகும் - வந்து சேரும்;
உன்னி -  மனதில் தியானித்து;
ஒருகொம்பின் - ஒருகொம்பினையும்;
யானைமுக - யானைமுகத்தையும் உடைய விநாயகப் பெருமானின்;
உத்தமனார் – உத்தமமான; 
நோன்பின் - விரதத்தின்;
திருக்கதையை - சிறந்த கதையை;
கேட்க - கேட்பவர்கள்;
சிறந்து - சிறந்து வாழ்வார்கள்; 


பொற்பணைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக் 
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் சொற்பெருகக் 
கற்றவரும் நோற்றவரும் காதலித்துக் கேட்டவரும் 
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.  

பொருள்

பொன் போன்ற பெரிய தும்பிக்கையையும், மூன்று கண்களையும் பொன் முடியையும் உடைய கற்பகவிநாயகரின் விரதத்தின் கதையைப் படித்தவர்களும் விரதம் இருந்தவர்களும் காதலித்துக் கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகவிநாயகரின் பேற்றினை. 

சொற்பொருள்

பொற்பணைக்கை - பொன் போன்ற பெரிய தும்பிக்கையும்;
முக்கண் - மூன்று கண்களையும்;
புகர் - முகம்;
முகத்து - முகத்து;
பொன்மவுலி - பொன் முடி;
கற்பகத்தின் - கற்பகவிநாயகரின்;
நோன்பின் - விரதத்தின்;
கதைதன்னைச் - கதையை;
சொற்பெருக - சொற்கள் நிறைய; 
கற்றவரும் - படித்தவர்களும்;
நோற்றவரும் - விரதம் இருந்தவர்களும்;
காதலித்து - காதலித்து;
கேட்டவரும் - கேட்டவரும்;
பெற்றிடுவர் - பெற்றிடுவர்;
கற்பகத்தின் - கற்பகவிநாயகரின்;
பேறு - பேற்றினை; 

வெள்ளை எருது ஏறும் விரிசடையோன் பெற்றெடுத்த 
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை உள்ளபடி நோற்றார் மிகவாழ்வார் நோலா தருகிருந்து 
கேட்டோர்க்கும் வாராது கேடு.  

பொருள்

வெள்ளை இடப வாகனத்தில் ஏறும் விரிந்த சடை முடியை உடைய சிவபெருமான் பெற்றெடுத்த பிள்ளையாரின் பெரிய கதை விரதத்தை முறையாக அனுட்டித்தவர்கள் நன்றாக வாழ்வார்கள். விரதம் இருக்கா விட்டாலும் பிள்ளையார் கதையைக் கேட்டவர்களுக்கும் தீங்கு வராது.

சொற்பொருள்

வெள்ளை எருது - வெள்ளை இடப வாகனத்தில்;
ஏறும் - ஏறும்;
விரிசடையோன் - விரிந்த சடை முடியை உடைய சிவபெருமான்;
பெற்றெடுத்த - பெற்றெடுத்த;
பிள்ளையார் - பிள்ளையார்;
நோன்பின் - விரதத்தின்;
பெருங்கதையை - பெரிய கதையை;
உள்ளபடி நோற்றார் - முறையாக விரதம் இருந்தவர்கள்;
மிகவாழ்வார் - நன்றாக வாழ்வார்கள்;
நோலா தருகிருந்து - விரதம் இருக்காவிட்டாலும்;
கேட்டோர்க்கும் - பிள்ளையார் கதையைக் கேட்டவர்களுக்கும்;
வாராது கேடு - தீங்கு வராது; 


சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார் 
சாலமிகும் வெங்கலியார் தாம் நோற்கில் - மேலைப் 
பிறப்பு எல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.  

பொருள்

பிள்ளை இல்லாதவர்கள் விரதம் இருந்தால் பல பிள்ளைகளைப் பெறுவார்கள். மிகப் பல கலியுகத்தவர்கள் விரதம் இருந்தால் இனி வரும் பிறவிகளி லெல்லாம் நல்ல பெருஞ்செல்வம் பெற்றுச் சிறப்புடன் வாழ்வார்கள். 

சொற்பொருள்

சூலிலார் - பிள்ளை இல்லாதவர்கள்;
நோற்கில் - விரதம் இருந்தால்;
சுதரை மிக - பல பிள்ளைகளைப்;
பெறுவார் - பெறுவார்கள்;
சாலமிகும் - மிகப் பல;
வெங்கலியார் தாம் - கலியுகத்தவர்கள்;
நோற்கில் - விரதம் இருந்தால்;
மேலைப் - இனி வரும்;
பிறப்பு எல்லாம் - பிறவிகளிலெல்லாம்;
நல்ல - நல்ல;
பெருஞ்செல்வம் - பெருஞ்செல்வம்;
எய்தி - பெற்று;
சிறப்பிலே - சிறப்புடன்;
வாழ்வார் - வாழ்வார்கள்;
சிறந்து- சிறந்து; 


                 பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது. 

                       திருச்சிற்றம்பலம்.


யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய

பிள்ளையார் கதை    

சிறப்புப் பாயிரம்

 இது பாராயணம் செய்வதற்கு எற்ற முறையில் பொருளில்லாமல் தரப்பட்டிருக்கின்றது.

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்குக் காப்பு. 

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி
வரும் அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு 
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை. 

ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் 
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
கொண்டக்கால் வாராது கூற்று. 

சப்பாணி

எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

சரஸ்வதி துதி

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்

பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் தெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே. 

கதை

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர் 
இந்துதவழ் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் 
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற 
மதர்விழி பாகனை வழிபடு நாளில்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு 
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப்  10

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே 
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில் 
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன் 
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென 
எமையா ளுடைய உமையாள் மொழிய 
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதைமை என்று 
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்  20

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடும் மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுதல் அவற்குநீ பிள்ளை யாகச்
சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால் 
மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை யென்று
விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும் 
பெடை மயிற் சாயற் பெண்மகவு ஆகித்  30

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் 
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப்
பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும் 
யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி
ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் 
மையார் கருங்குழல் வாணுதல் தன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக் 
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்புஇறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி 
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என 40

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப் 
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக் 
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
மருமலி கமல மலர்த்தடத்து அருகில் 
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ 
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் புரிதலும்
அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென 
இருவரு மறியா இமையவர் பெருமான்  50

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து 
மானிட யோக மறையவன் ஆகிக் 
குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு 
மடமயில் தவம்புரி வாவிக் கரையில் 
கண்ணுதல் வந்து கருணை காட்டித் 
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி 
மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ 
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும் 
கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும் 
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் 60

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக் 
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் 
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் 
பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை 
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப் 
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் 
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச் 
சேடியர் வந்து செழுமலர் குழலியை 
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 70

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த் 
தந்தைதாய் இருவர் தாளினை வணங்கி 
வாவிக் கரையில் வந்தொரு மறையோன் 
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந் 
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை 
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன 
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி 
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என 
மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில் 
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் 80

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச் 
சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன் 
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று 
சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி 
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி 
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென் 
பொற்அமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன் தனக்கு 
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப  90

மலையிடை வந்த மாமுனி தன்னை 
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத் 
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் 
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி 
ஆயிழை தானும் அவனெதிர் சென்று 
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி 
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து 
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும் 
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி  100

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் 
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப் 
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய் 
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை 
தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து 
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச் 
சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத் 
தக்கோ லத்தொடு சாதிக் காயும் 
கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு 
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 110

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச் 
சிவனெனப் பாவனை செய்து நினைந்து 
தவமறை முனிவனைத் தாளினை வணங்கத் 
தேனமர் குழலி திருமுகம் நோக்கி 
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக் 
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் 
நெற்றியில் நயனமும் நீல கண்டமும் 
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் 
கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல் 
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப 
மரகத மேனி மலைமகள் தானும் 
விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே 
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் 
கருடர் கின்னரர் காய வாசியர் 
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் 
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை 
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க் 
கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும் 
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்  130

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத் 
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப் 
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி 
மாணிக் கத்தால் வளைபல பரப்பி 
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து 
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் 
பக்திகள் தோறும் பலமணி பதித்துத் 
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப் 
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் 
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப்  140

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் 
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து 
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக் 
குலவிய திருமணக் கோலம் புனைந்தார் 
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத் 
திருமணக் கோலஞ் செய்தன ஆங்கே 
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும் 
உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் 
கடலென விளங்கும் காவணந் தன்னில்  150

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல் 
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப் 
பறையொலி யோடு பனிவளை ஆர்ப்ப 
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே 
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத் 
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச் 
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் 
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து 
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப் 
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே  160

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக 
ஏரார் வழியில் எண்திசை தன்னைப் 
பாரா தேவா பனிமொழி நீயென 
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத் 
திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக் 
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு 
ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே 
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென 
அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு 
மதகரி யுரித்தோன் மதகரி யாக  170

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக் 
கூடிய கலவியில் குவலயம் விளங்க 
நீடிய வானோர் நெறியுடன் வாழ 
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச் 
செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க 
அறம்பல பெருக மறம்பல சுருங்கத் 
திறம்பல அரசர் செகதலம் விளங்க 
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு 
ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும் 
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந்  180

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும் 
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும் 
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும் 
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் 
கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந் 
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய் 
ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும் 
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும் 
மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி 
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் 190

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க 
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித் 
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி 
ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று 
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக் 
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும் 
மைவளர் சோலை மாநகர் புகுந்து 
தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின் 
வான வராலும் மானு டராலும்  200

 கானமர் கொடிய கடுவி லங்காலுங் 
கருவி களாலுங் கால னாலும் 
ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில் 
வரம் பெறுகின்ற வலிமை யினாலே 
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக் 
கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன் 
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி 
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி  210

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி 
முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன் 
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே 
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி 
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன் 
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது 
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி 
வென்றுவா வென்று விடைகொ டுத்தருள 
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப்  220

பாங்குறும் அவன்படை பற்று அறக் கொன்றபின் 
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற் 
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல் 
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே 
சோர்ந்து அவன்வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி 
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் 
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில்  230

செறிந்தது மற்றவன் திருக்கரத் தினிலே 
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும் 
வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே 
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ 
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற் 
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும் 
திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக் 
கணபதீச் சரம் எனுங் காரண நாமம் 
கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச் 
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ 240

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி 
இணங்கிய பெருமைபெற்று இருந்திட ஆங்கே 
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர் 
யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள் 
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின் 
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் 
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார் 
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள்  250

ஒப்பரும் விரதத்து உறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப் 
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை 
மருமலர் தூவும் வானவர் முன்னே 
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற 
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் 260

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி 
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும் 
அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான் 
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக் 
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற் 
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கள் மதிவளர் பக்கஞ் 
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று 270

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம் 
வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம் 
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த 
தருமனும் இளைய தம்பியர் நால்வரும்
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி 
எண்ணிய விரதம் இடையூறு இன்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ் 
செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று 
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 280

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை 
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப் 
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துதல் உற்றான்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன் 
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி 
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன் 
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் 
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்  290

சர்வ ஆபரணமுந் தரிக்கப் பெற்றவன் 
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையில் தந்தமும் ஒருகையிற் பாசமும்
ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய் 
உத்தம மாலையோன் உறுநினை வின்படி 
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன் 
என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ் 
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 300

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தால் 
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண்டாகும்
கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய 
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச் 
சந்ததி தழைத்திடுஞ் சம்பது உண்டாம் 
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு  310

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும் 
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும் 
விரித்து எமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப 
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான் 
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர் 
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின் 
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து 
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப் 
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன் 
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் 
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
பூசைசெய் திடும்இடம் புனிதமது ஆக்கி 
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து 
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச் 
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி  330

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம் 
வாகார் ஆச மனம்வரை கொடுத்து 
ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக் 
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால் 
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால் 
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப் 
பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால் 
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப் 
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே  340

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன் 
குமார குரவன் பாசாங் குசகரன் 
ஏக தந்தன் ஈசுரன் புத்திரன் 
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் 
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன் 
ஏரம்ப மூர்த்தி என்னும் நாமங்களால் 
ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி 
மோதகம் அப்பம் முதற்பணி காரந் 
தீதகல் மாங்கனி தீங்கத லிப்பழம் 
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு   350

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் 
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து 
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால் 
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து 
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும் 
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து 
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு 
உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச் 
சந்தன முத்துத் தானந் தக்கிணை  360

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத் 
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத் 
தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து 
நைமித் திகம் என நவில்தரு மரபால் 
இம்முறை பூசனை யாவர் செய்தாலும் 
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர் 
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான் 
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி   370

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னாள்  இவனை அர்ச்சனை பண்ணி 
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி 
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான் 
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை  380

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் 
உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான் 
கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டுபாண் மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு 
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் 390

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார் 
இப்புவி தன்னில் எண்ணுதற்கு அரிதால் 
அப்படி நீவிரும் அவனை அர்ச்சித்தால் 
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர் 
என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப 
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு  400

அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார் 
ஈங்குஇது நிற்க இவ்விர தத்துஇயல் 
ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம் 
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த 
வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற் 
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி 
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே 
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும் 
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால் 410

ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும் 
நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி 
இரசத கிரிஉறை இறைவனை வணங்கி 
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச் 
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக் 
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும் 
புதல்வனைத் தருவோம் போமின் நீர் என 
அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச் 
சமரவேல் விழித் தையலுந் தானுங் 
கூடிய கலவியிற் கூடாது ஊடலும் 420

ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப் 
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச் 
சூரன் செய்யுந் துயர மெல்லாம் 
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக் 
காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப் 
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென 
உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான் 
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற் 
குற்றம் அடாது கூறுநீ சென்றென 
வானவர் மொழிய மற்றவன் தானுந்  430

தானும் அச் சபையில் தரியாது ஏகி 
எமை ஆளுடைய உமையா ளுடனே 
அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த 
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும் 
ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந் 
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே 
ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும் 
வறியவன் பெற்ற வான்பொருள் போலச் 
சோதி நீள்முடிச் சுடரோன் கொணர்ந்து 
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப 440 

நீதி யோடு நின்று கையேந்திப் 
போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல் 
தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத் 
தரும்புனற் கங்கையுந் தாங்க ஒண்ணாமற் 
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத் 
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங் 
கண்ஆறு இரண்டுங் கரம் ஈராறுந் 
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும் 
மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு 
ஆறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும் 450

மறுகிய உம்பர் மகிழ்ந்துஉடன்கூடி 
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்றுஅனுப்ப 
ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும் 
ஓங்கிய வளர்ச்சி உற்றிடு நாளில் 
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு 
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து 
முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட 
இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத் 
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி 460

அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத் 
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்றுஉதவிப் 
பூதப் படைகள் புடைவரப் போய்நீ 
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப 
இருளைப் பருகும் இரவியைப் போலத் 
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக் 
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே 
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந் 
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு 470

அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக் 
குமர வேளுங் குவலயம் விளங்க 
அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்டு 
அமரர் மாதர் அனைவரும் மயங்கி 
எண்டருங் கற்பினை இழந்தது கண்டே 
அண்ட ரெல்லாம் அடைவுடன் கூடி 
மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி 
மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல் 
அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென  480

இமையவர் உரைப்ப இறையவன் தானுங் 
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக் 
காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ் 
சேவலங் கொடியோன் தேசம் போகத் 
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி 
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து 
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி 
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென 
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக் 
குன்றமென் முலையாள் கூறிய சமயம்  490

புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு 
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற் 
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து 
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச் 
சாயக நேருந் தடநெடுங் கருங்கண் 
நாயகி வெல்ல நாயகன் தோற்ப 
இன்பவாய் இதழ் உமை யான்வென்றேன் என 
எம்பெரு மானும் யான்வென்றேன் என 
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி 
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப  500 

மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை யெரித்தோன் கண்கடை காட்ட 
வென்ற நாயகி தோற்றா ளென்றுந் 
தோற்ற நாயகன் வென்றா னென்றும் 
ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக் 
கன்றிய மனத்தொடு கவுரி அங்குஉருத்து 
நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை உண்மை 
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய் 
மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப் 
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே  510

கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற 
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க் 
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும் 
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள் 
முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த் 
துளவு அணி மருமனுந் துணைவிழி இழந்தே 
ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை 
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து 
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்குங் 
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால்   520

திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும் 
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே 
எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்
கம்ப மாமுகத்துக் கடவுள்தன் பெருமையை 
அம்புவி யோருக்கு அறிவிப் போம் என 
உம்பர் உலகத்து ஓரெழு கன்னியர் 
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து 
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக் 
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில் 
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி  530

இருபத் தோர் இழை இன்புறக் கட்டி 
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய் 
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும் 
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும் 
மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும் 
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே 
உரைதரு பதினாறு உபசா ரத்தால் 
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி 
இருபது நாளும் இப்படி நோற்று 
மற்றைநாள் ஐங்கர மாமுகன் பிறந்த 540

அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ் 
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி 
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில் 
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக் 
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து 
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக் 
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை 
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப் 
பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச் 
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக் 550 

செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு 
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி 
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி 
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி 
தாமரை முல்லை தழையவிழ் கொன்றை 
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை 
காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி 
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம் 
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு 
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித் 560 

தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே 
அப்பம் மோதகம் அவல் எள் ளுண்டை 
முப்பழந் தேங்காய் முதிர்மொளிக் கரும்பு 
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன் 
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங் 
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன் 
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி 
நோற்பது கண்டு நோலாது இருந்த 
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும் 
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என 570

ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப் 
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார் 
அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால் 
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே 
உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு விமலன் 
பஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும் 
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின் 
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி 
யான் இடுஞ் சாபம் நீங்கியது ஏதென 
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப 580 

இறையவன் இதற்குக் காரணம் ஏதென 
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான் 
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத் 
தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச் 
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும் 
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச் 
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி 
இக்கதை சொல்ல அக்கணி சடையனும் 
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின் 
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி  590

நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான் 
தானோ வந்தது நகையா னதுவெனத் 
தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென 
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் 
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து 
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென 
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப் 
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன் 
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென 
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் 600 

குறமட மகளைக் குலமணம் புணர்தோன்
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து 
தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை 
மாதுமை யாளை வந்து கண்டனனே 
கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக் 
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும் 
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த 
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின் 
சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன் 
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும்   610

பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக் 
 கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் 
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் 
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே 
இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை 
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் 
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து 
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 620 

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து 
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில் 
விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன் 
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் 
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி 
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி 
மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென 
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச்  630

சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் 
உற்ற நோன்பின் உறுதி மறந்து 
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து 
வற்றிய கொவ்வையின் மாடே போட  
ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப் 
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு 
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த 
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி 
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் 
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 640

இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக் 
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி 
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் 
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் 
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து 
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள 
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் 
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள 
உக்கிர மான உடைமணி கட்டித் 
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக்  650

கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் 
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் 
கனவினில் வந்து காரண மாக 
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற் 
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் 
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக் 
கண்ணுறக் கண்ட கனவின் காரணம் 
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் 
ஆனை குதிரை அவைபல மடிவுற 
மாநகர் கேடுறும் வகையது கண்டு  660

இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன 
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர் 
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப 
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட 
அணியிழை தன்னை அவனும் அகற்ற 
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப 
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற 
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் 
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் 
குயக்கலம் உடைந்து கொள்ளை போக  670

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத் 
தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத் 
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய 
மாலைக் காரன் வளமனை புகலும் 
மாலை பாம்பாம் வகையது கண்டு 
ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய் 
சாலவும் பாவிநீ தான்யார் என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா 
அம்மனை அவனும் அகற்றிய பின்னர்  680

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப 
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் 
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று 
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட 
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி 
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்   690

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி 
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச்
சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள் 
சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப் 
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 
மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு 
தானே சென்று சாணி யெடுத்துத் 
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு 
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் 
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப்  700 

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் 
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி 
அவ்வை தானே அகமதிற் சென்று 
புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து 
வித்தக நம்பி விநாயக மூர்த்தி 
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென 
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து 
தவநெறி பிழைத்த தையலை நோக்கி 
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக்  710

கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி 
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே 
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு 
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை 
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக் 
கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்
சக்கர வாள சைனி யத்தோடு 
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று 
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி  720

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே 
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக 
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு 
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி 
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை 
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச் 
செப்பிய அன்னை திருமொழிப் படியே 
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும் 
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ 
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்  730 

அப்பசி தீர அருந்திய பின்னர் 
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் 
தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே 
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ 
மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப 
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண்இது 
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி 
இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற 
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து  740

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் 
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் 
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் 
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே! 745 

நூற்பயன்

பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.

பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.

திருச்சிற்றம்பலம்.


Please report errors to: shivoham101b@gmail.com



Comments

Popular posts from this blog

Drig Drishya Viveka